திங்கள், மே 30, 2011

முடிவுரை!

முடிவுரை!

ஐந்து வருடங்களுக்கு முன் ஆரம்பித்த இந்த முயற்சி இந்தப் பதிவுடன் முற்றுப் பெற்றது. இதை மொழி பெயர்ப்பு என்று சொல்ல மாட்டேன். சீன மொழியும் தெரியாமல் சீனக் கலாச்சாரமும் தெரியாமல் மொழி பெயர்க்க முடியாது, மொழி பெயர்க்க முயல்வது சரியான முறையாகவும் தோன்றவில்லை. அதே சமயத்தில் இதை என் படைப்பு என்று சொல்லவும் தயக்கம். மூலக் கருத்து எனதில்லை. லாவோ -ட்ஸே எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் பதிந்தவைகளை நான் படித்து, எனக்குப் புரிந்ததை, படித்ததால் எனக்கு மனதில் தோன்றியதை வசன கவிதைகளாக எழுதியிருக்கிறேன். தமிழில் நான் எழுதியதை லாவோ -ட்ஸேவின் கருத்தாகக் கொள்ள முடியாது. அவைகள் ஆங்கில மொழிபெயர்ப்பில் மாறியிருக்கலாம்; அல்லது என் புரிதலில் வந்த பிழையாக இருக்கலாம்.

சுருக்கமாகச் சொன்னால் இதில் கருத்துப் பிழை/பொருள் பிழை இருந்தால் அது என் பொறுப்பு. அதே சமயத்தில் இந்தப் படைப்புக்கு எந்த விதமான பாராட்டிலும் லாவோ -ட்ஸேவுக்குப் பெரும் பங்கு உண்டு. இதை எழுத முக்கியமான தூண்டுதல், கருத்துப் பகிர்தல். இந்தப் பதிவைப் படித்து மற்றவர்களின் கருத்துக்களும் தெரிந்து கொண்டால் தத்துவ அறிவு வளருமே என்ற எண்ணம்.

முழுப் பதிவையும் (பாடல்களை மட்டும்) PDF வடிவில் தொகுத்திருக்கிறேன் - இந்த இணையச் சுட்டியில். பொறுமையாகப் படித்து மின் மடலிலும், பதிவிலும் கருத்துப் பரிமாற்றம் செய்த அனைவருக்கும் என் நன்றி.

ரங்கா.
எடிசன்.

வழி – 81

வழி – 81
உண்மையின் அழகு

அலங்காரம் வேண்டாமே என்றும் உண்மைக்கு
அலங்காரம் வந்தாலே உண்மையும் சிதைந்திடுமே

வேதம் புரிந்தவனும் வாதிப்பது இல்லையே
வாதத்தில் நுழைந்தாலே வழியும் மறந்திடுமே

சித்திகளை வேண்டுகையில் முக்தியும் நகர்ந்திடுமே
முக்தியதை உணர்ந்தாலே சித்திகளும் வேண்டாமே

தருவதால் ஆசானும் இழப்பதும் இல்லையே
தருவதால் பெறுவானே முழுமையான வழியதையே


**********


பொய்கள் செல்லுபடியாக ஜோடனை தேவை. ஆனால் உண்மைக்கு எந்தவிதமான அலங்காரமும் இல்லாமலே மதிப்பு வரும், அதன் அழகும் தெரியும். மற்றவர்களின் மதிப்புக்காக பூச்சு வேயில் இறங்கினால் உண்மை சிதையும்; முடிவில் அழகும் குலையும்.

பண்டைக்காலத் தமிழ்ப் பழமொழி: நிறைகுடம் தளும்பாது. வார்த்தை ஜாலங்களிலும், வாதத்திலும் சக்தியை செலவழிக்காமல் உண்மையை அறிவதில் சக்தியை செலுத்தினால் முழுமையான வழியை அடையலாம் என்கிறார் ஆசிரியர்.

சனி, மே 28, 2011

வழி - 80

வழி - 80.
சொர்க்கமான நாடு

நூறுபேர் திறமொத்த இயந்திரங்கள் இருப்பினும்
பேறுபெற்ற நாட்டினிலே தேவைதான் இல்லையே

ஒளிவேகப் பயணத்தின் திறமே பெற்றாலும்
வெளியே பயணிக்க அவசியம் இல்லையே

போரிலே வெல்லவரும் தேரும் வாளுமே
ஊரிலே தூங்குமே போருமே இன்றியே

உணவும் சுவையாக உடையும் சுகமாக
குணமும் நிறைவாக குடியும் நலம்தானே

போலியற்ற உயிரனைத்தும் சேருகின்ற வீடுபோல
வேலிகளால் பிரிக்காத சொர்க்கமாகும் நாடுமிங்கே.**********

ஒருவன் எப்பொழுது வள்ளலாகிறான்? மற்றவர்களுக்குக் கொடுக்கையில். வாங்குவதற்கு யாரும் இல்லையென்றால் வள்ளலும் இல்லை. ஒரு நாடு முன்னேறியிருக்கிறது என்று சொல்ல ‘நாட்டின் தேவைகள் தாமாகப் பூர்த்தியாகின்றன; தேவைகள் இல்லை' என்று சொல்லும் நிலை வர வேண்டும். இந்தக் கருத்தை வலியுறுத்தும் விதமாக எழுதப்பட்ட அத்தியாயம் இது. எந்த இடத்துக்கும் விரைந்து செல்லும் ஆற்றல் பெற்றிருந்தாலும், நாட்டை, வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால் அந்த ஆற்றலை உபயோகிக்கும் தேவையில்லை. உண்மையாக, உயர்வாக வாழ்ந்து மறைந்த உயிர்களனைத்தும் ஒரே சொர்க்கத்திற்கு செல்கின்றன என்பது போல நாட்டினுள்ளே பிரித்துப் பாதுகாக்க வேலிகளின் தேவையில்லாமல், ஒன்றான சொர்க்கமாக இருக்கிறது என்கிறார் ஆசிரியர்.

செவ்வாய், மே 17, 2011

வழி – 79

வழி – 79
பணிபுரியும் தன்மை

கட்டியே காயத்தில் வலியதனைக் குறைத்தாலும்
வெட்டிய இடத்தினிலே வடுவதுவும் மறையாதே

வாதத்தால் மற்றவரை வென்றாலும் உள்ளமதில்
சேதத்தை தவிர்க்கவே முயன்றாலும் முடியாதே

செய்கின்ற தன்மையாலே உள்ளத்தில் வலியிருந்தால்
செய்கின்ற செயல்களிலே முழுமையும் வாராதே

அறிந்த ஆசானும் செய்கின்ற கடமையிலே
புரிந்தே பலனையும் எதிர்பார்ப்பது இல்லையே.**********

வள்ளுவர் வாக்கு:
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
செயல்களை முடிப்பது மட்டும் முக்கியமல்ல; அதை எப்படி முடிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். முடித்த செயல்களால் செய்பவர் மனதிலோ, அல்லது மற்றவர்களின் மனதிலோ துயரும், வலியும் வந்தால் அந்தச் செயல்களில் முழுமையில்லை; மாறாக குறைவுதான் தெரியும். செய்யும் செயல்களில் பலனை எதிர்பார்த்து அது கிடைக்காத போது மனதில் வருத்தமும், வலியும் வருகிறது. அதனால் அந்தச் செயல்களில் முழுமை வருவதில்லை. பலனை எதிர்பாராது பணி செய்யும் ஆசானின் மனதில் வலி இல்லை; அதனால் செயலில் முழுமை வருகிறது.

வெள்ளி, மே 13, 2011

வழி – 78

வழி – 78
நீரின் வழி

வலிவான புவியதனின் திடமான பொருளாவும்
மெலிதான நதிநீரின் வெள்ளத்தில் பொடியாகும்

கழிகொண்டே அடித்தாலும் மலையதனால் தடுத்தாலும்
சுழித்தோடும் நதியதனின் இயல்பிங்கே மாறாதே

கலக்கின்ற பொருளோடு கடலிலே சங்கமிக்கும்
நலமான வழியதினின் தன்மையொத்த இயல்பாலே

மென்மையான வழியதனின் வலிவறிந்த ஆசானும்
தன்மையோடு புவியதனின் துயர்களையே ஏற்பானே

தட்டாமல் தருகின்ற பக்குவம் பெற்றதனால்
கேட்பவரை நதிபோல வழிக்கடலில் சேர்ப்பானே.


**********

மென்மையின் வலிமை பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் ஆசிரியர் வேறு இடங்களிலும் விளக்கியிருக்கிறார் (வழி 67, வழி 76). அந்தக் கருத்தை தண்ணீரை உவமையாகக் கொண்டு இந்த அத்தியாயத்தில் மீண்டும் வலியுறுத்துகிறார். எப்படி நதி நீர் தன்னோடு கலக்கும் பொருட்களைக் கடலில் கொண்டு சேர்க்கிறதோ, அதே போல ஆசானும் தன்னையடைந்தவர்களை வழிக்கடலில் கொண்டு சேர்க்கிறான். நதியின் பண்பை ஒத்திருப்பதால், தாக்குதல்களால் அவன் காயமடைவதில்லை.

வியாழன், மே 05, 2011

வழி - 77

வழி - 77
சமனாக்கும் வழி

நாணேற்றிய வில்லதனில் துருவங்கள் நெருங்கிடுமே
வீணேதான் அம்பிங்கே நாணேற்றா வில்லினிலே

சிகரத்தில் பனியாக உறைந்த தண்ணீரும்
நகரத்தின் மனிதருக்கு இறங்கியே பாய்ந்திடுமே

நிலத்தடியில் ஊற்றாக மறைந்திருக்கும் நீருமிங்கே
நிலமதனை வளமாக்க மேலேறி வந்திடுமே

துருவங்கள் நெருங்கினாலே குறைகளும் நிறைவாகும்
பருவங்கள் மாறுகையில் பயணங்கள் சுவையாகும்

ஏற்றிடுமே இறங்கியதை இயற்கையின் வழிதானே
ஏற்றங்களை இறக்குவதால் புவியிங்கே சமனாகும்

சமனாக்கும் தன்மையதை இயல்பிலே பெற்றதினால்
எமனுக்கும் தருகின்றான் வழியொத்த ஆசானும்.


**********

கால ஓட்டத்தில் இயற்கை அனைத்தையும் சமனாக்குகிறது. மலைகள் சமவெளிகளாவதும், ஏரிகள் வற்றி நிலமாவதும், நிலங்கள் மூழ்கி கடலாவதும் இயற்கையில் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இம்மாதிரியான மாற்றங்களே தாவரங்களும், உயிரினங்களும் வளர உதவுகின்றன. இந்த சமனாக்கும் தன்மையை மக்கள் உணர்ந்து ஏற்றத் தாழ்வுகளை நீக்க முயல வேண்டும் என்கிறார் ஆசிரியர். இயற்கையின் சக்தியான இந்த தன்மையை ஒத்து வாழ்பவர்கள் உயர்வடைவார்கள் என்கிறார்.

ஞாயிறு, மே 01, 2011

'வழி' - 76

'வழி' - 76.
மென்மையின் வலிவு

பிறக்கையிலே உயிரனைத்தும் தன்மையிலே மென்மைதானே
இறந்ததுமே விரைத்துத்தான் இழந்திடுமே தன்மையதை

வாழுமிங்கே கொடிசெடியும் தண்ணீரின் மென்மையாலே
வீழ்ந்திடுமே கருகிப்பொடியாக மென்மையின்றி உலர்ந்தாலே

வலிவான மரங்களிங்கே புயலிலே விழுகையிலே
மெலிவான புல்லுமிங்கே வீழாமல் வளர்ந்திடுமே

இப்புவியில் உயிர்தழைக்க தேவையே மென்மைதானே
தப்பிதமாய் வலிவதனை தேடியேநீ போவதேனோ?


**********

இந்த அத்தியாயத்தில் ஆசிரியர் மென்மையின் உயர்வையும் வலிவையும் விளக்கியிருக்கிறார். பிற உயிர்களிடத்து நேசமும், பரிவும் முக்கியமான குணம் என்று வேறொரு அத்தியாயத்தில் வலியுறுத்தியது போல (வழி 67) வலிவையும், பலத்தையும் மட்டுமே பிரதானமாகத் தேடுவது போதாது என்று உரைக்கும் விதமாக, தன்மையில் மென்மை வேண்டும் என்று எடுத்துரைக்கிறார். உயிர்களின் இயல்பான குணமாக மென்மை இருக்கிறது; அந்த இயல்பை இழக்கையில் உயிரும் நீங்குகிறது என்பதைப் புரிந்து கொண்டால் மென்மையின் உயர்வும், அதன் தேவையும் புரிந்து விடும் என்கிறார் ஆசிரியர்.

ஞாயிறு, ஏப்ரல் 24, 2011

வழி - 75

வழி - 75
வரியின் தாக்கம்

வரியதனை உணவாக்கி வளர்கின்ற அரசுமே
பெரிதாகி மக்களின் உணவதனைக் கவர்ந்திடுமே

வரிகளையும் வரம்பின்றி ஆள்பவரும் விதித்தாலே
புரிவாரே தரம்தாண்டிய செயல்களையே மக்களுமே

இழப்பதற்கு பொருளேதும் இல்லாத நிலைதனிலே
இழக்கவே துணிவாரே உயிரையுமே மனிதருமே

இறக்கவே மனிதருமே துணிவாக இருக்கையிலே
துறக்குமே அரசுமே அரசாளும் உரிமையதை.


**********

மனதை ஆளும் வழிகளைப் பற்றி ஆசிரியர் பெரும்பான்மையான அத்தியாயங்களில் விளக்கியிருந்தாலும், மக்களை ஆளும் முறை பற்றியும் அனேக அத்தியாயங்களில் விளக்கியிருக்கிறார். அம்மாதிரியான அத்தியாயங்களில் இதுவும் ஒன்று. அரசாங்கம் நடத்தப் பொருள் வேண்டும். அது வரிகள் மூலமாக வருகிறது. அதே சமயத்தில் வரும் பொருளின் மேலுள்ள மோகத்தால் அளவுக்கு மீறி வரிகளை விதிக்கையில், மக்களும் தரம் குறைந்த செயல்களை செய்யத் தொடங்குவார்கள். முடிவில் உயிருக்கும் துணிந்து அரசையே எதிர்த்துக் கவிழ்ப்பார்கள் என்கிறார் ஆசிரியர். வரலாற்றில் அன்னாளிலும் இதைப் பார்த்திருக்கிறோம்; இன்னாளிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!