சனி, ஏப்ரல் 29, 2006

'வழி' - 3

3. அறிந்தவர் ஆட்சி

உள்ளவரைப் புகழாததால் இல்லாதவருக்குப் பொறாமையில்லை
பொருட்களைச் சேர்க்காததால் திருடுவதற்கு தூண்டுதலில்லை
ஆசைப்பட்டுப் பார்க்காததால் மனதிலே குழப்பமுமில்லை

ஆதலினால் அறிந்தவர் மக்களை ஆளுகையில்

இதயத்தை வெற்றிடமாக்க ஆசையை நீக்குகிறார்
பசியை நீக்கி வயிற்றை நிரப்புகிறார்.
ஆசையை பலவீனமாக்கி ஆரோக்கியத்தை போதிக்கிறார்

ஆசையும் பொறாமையும் மனதிலே இல்லையென்றால்
வஞ்சகரின் வலையிலே விழுந்துவிட வாய்ப்பில்லை
தூண்டுதல் இல்லையெனில் துன்பங்கள் வாராது.


*************

கௌதம புத்தரின் முக்கியமான போதனை "ஆசையே அழிவுக்குக் காரணம்". இந்த அடிப்படைத் தத்துவத்தை விவரிக்கும் விதமாக இந்தப் பாடல் அமைந்திருக்கிறது. ஆட்சி நடத்துபவர் எதை முன்னிறுத்தவேண்டும் என்பது போல எழுதப்பட்டிருந்தாலும், எல்லொருக்கும் பொருந்துமாறு இருக்கிறது.

மாணிக்கவாசகரின் 'உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்';
தொண்டரடிப்பொடியாழ்வாரின் 'இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும், அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே';
பாரதியாரின் 'நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்;
அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்; உடைமை வேண்டேன்,உன்துணை வேண்டினேன்' (விநாயகர் நான்மணிமாலை) எல்லாம் நினைவுக்கு வருகிறது.

சமீபத்தில் படித்த வைரமுத்துவின் 'ஆசை துறந்த புத்தர் கூட துறவியாக ஆசைப்பட்டார்; துறந்தபிறகும் ஆசை அவரை விட்டுவைக்கவில்லையே!' பாடலும் ஞாபகத்திற்கு வருகிறது.

4 Comments:

At 9:14 AM, Blogger குமரன் (Kumaran) said...

எதிர்மறையாக என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும் அருமையான போதனைகள் அண்ணா இவை.

இருப்பவரைப் புகழ்வதாலேயே இல்லாதவருக்குப் பொறாமை ஏற்படுகிறதையும் பொருட்களை ஒரு சிலர் சேர்த்து வைப்பதாலேயே இல்லாதவர் திருடத் தூண்டுதல் பெற்றுத் தவறுகள் செய்கின்றனர் என்பதனையும் பொருட்களைச் சேர்த்துவைப்பதாலேயே திருடு போகும் போது வருத்தப்பட வேண்டியதிருக்கிறது என்பதனையும் ஆசையுடன் எதையும் நோக்குவதாலேயே எல்லாக் குழப்பங்களும் நேர்கிறது என்பதனையும் ஆசையும் பொறாமையும் மனத்திலே கொள்வதாலேயே வஞ்சகர் வலையில் விழுகின்றார் என்பதனையும் மிக அழகாகச் சொல்லியிருக்கிறது இந்தப் பதிவில்.

 
At 2:12 PM, Blogger ரங்கா - Ranga said...

உண்மை குமரன். பின்னூட்டத்திற்கு நன்றி. :-)

ரங்கா.

 
At 4:44 AM, Blogger Jazeela said...

உங்க பதிவை படிக்க ஆசைப்பட்டேன் இப்ப மறுமொழி எழுத ஆசை. என்னத்த ஆசைப்பட கூடாதுன்னு படித்தாலும் பாழாப்போன மனது ஆசையில்லாமல் ஜீவிக்க முடியிறதில்லீங்க. ஆசை படலாம் ஆனால் பேராசைதான் படக்கூடாது. நிஜம்தாங்களே?

 
At 1:36 PM, Blogger ரங்கா - Ranga said...

உண்மைதான் ஜெஸிலா. ஸ்பானிஷ் பழமொழி ஒன்றை என் நண்பர் சில வருடங்களுக்கு முன் சொன்னார்: "இங்கு (உலகத்தில்) எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்; அதற்கான விலைக் கொடுக்கத் தயாராய் இரு". எப்போதுமே எதிலுமே ஆசை இல்லாமல் இருந்தவர்களை நான் பார்த்தது இலை. எனக்கும் ஆசைகள் உண்டு. அவைகள் பேராசையாக மாறி விலையாக என்னையே தரும் அளவிற்கு வராத வரை சந்தோஷம் தான்.

ரங்கா.

 

கருத்துரையிடுக

<< Home