சனி, மே 27, 2006

'வழி' – 7

7. இறப்பில்லா வாழ்வு

வானுக்கும் மண்ணுக்கும் இறப்பென்பது இங்கில்லை
தனக்கென்று வாழ்கின்ற சுயநலம் இல்லாததால்

இறப்பில்லா வாழ்வின் இரகசியம் புரிந்ததனால்
அறிஞனும் வாழ்கின்றான் தன்னலம் கருதாமல்

தன்நலத்தைப் பின்தள்ளியதால் எந்நாளும் முன்நிற்கிறான்
ஒன்றோடும் ஒட்டாமால் எல்லாமோடும் இருக்கின்றான்

தனக்காக வாழாமல் தன்னையே வென்றுவிட்டான்
தன்னையே வென்றதனால் இறப்பையும் வென்றுவிட்டான்

*****

'எதற்காக வாழ்கிறோம்?', 'ஏன் இந்த உலகத்தில் பிறந்தோம்?', போன்ற கேள்விகள் எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு முறையாவது வரும். சில சமயம் விரக்தியினாலும் சில சமயம் ஆழ்ந்த யோசனையினாலும் இந்த மாதிரி கேள்வி பிறக்கும். எனக்கும் வந்ததுண்டு. இந்த மாதிரி கேள்விகளைப் பற்றி சிந்திக்கும் போது அந்த சிந்தனையின் மூலம் 'நான்', 'என் குடும்பம்' என்ற வட்டத்திலிருந்து தான் வரும்.

இந்த அத்தியாத்தைப் படித்த போது யோசனை சற்று மாறியது. என்னை முழுமை என்று பார்க்காமல், 'நான்' என்பதே ஒரு பெரிய முழுமையின் பகுதிதான் - 'அந்த முழுமை என்ன?', 'அந்த முழுமைக்கு 'நான்' எந்த வகையில் தொடர்பு கொண்டிருக்கிறேன்?', என்பது பற்றி யோசனை வர ஆரம்பித்தது. என் யோசனையின் வட்டத்தின் மையத்தில் இருந்த 'நான்' திடீரென்று காணாமல் போனது.

இந்த அத்தியாத்தின் பொருள் இன்னும் முழுமையாகப் புலப்படவில்லை. அந்த முழுமை எது என்று இன்னமும் விளங்கவில்லை. 'பிறருக்காக வாழ்வது' என்ற தத்துவம் புரிந்தும் புரியாமல் இருக்கிறது. அந்த 'பிறர்' யார்? மனிதர்களா? அல்லது உயிரினங்களா? அல்லது அனைத்தும் (தாவரங்கள், பொருட்கள் உட்பட) சேர்ந்ததா? இதற்கு 'எப்போது ஒருவன் தன்நலம் மட்டும் கருதி வாழத் தொடங்குகிறானோ, அப்போது இறக்கிறான்' என்று பொருள் கொள்ளலாமா? இந்தத் தத்துவமும், கண்ணன் கீதையில் சொன்ன 'கர்ம யோகமும்' ஒன்றுதானா? இன்னமும் விடை தேடிக் கொண்டிருக்கிறேன்.