ஞாயிறு, ஜூன் 18, 2006

‘வழி’ - 10

10. எது சொத்து?

ஆவியையும் உடலையும் போற்றியே நீவளர்த்தாலும்
தவிர்க்கத்தான் முடியுமோ இவ்விரண்டின் பிரிவுதனை?

அழகும் தெளிவும் வலிவுமே நீபெற்றாலும்
குழந்தையின் தூய்மையும் மென்மையையும் பெறுவாயோ?

புறத்திலும் அகத்திலும் குவிந்துள்ள அழுக்குதனை
அறவேதான் நீக்கவும் உன்னால் முடியுமோ?

மனங்களை வென்றாலும் மண்ணைநீ ஆண்டாலும்
தன்னலம் இல்லாமல் இருக்கத்தான் முடியுமோ?

விண்ணின் வாசலுக்கே வந்தேயடைந்தாலும், கருகாக்கும்
பெண்ணின் தன்மைநீ அடையாமல் போவாயோ?

கற்றனைத்தும் வித்தைகளை தெரிந்துதான் கொண்டாலும்
பற்றற்று உன்னால் இருக்கத்தான் முடியுமோ?

அன்போடும் பண்போடும் உருவாக்கியே வைத்தாலும்
தன்னதில்லை என்றெண்ணும் பக்குவமே சொத்தாகும்


********

நிரந்தரமான சொத்து எது? போற்றிப் பெற வேண்டிய குணங்கள் எவை? இது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமைந்திருப்பது பத்தாம் அத்தியாயம். நெடுநாள் வாழ ஆரோக்கியம் முக்கியம்; இருந்தாலும், உயிரும் உடலும் பிரிவதை மாற்ற முடியாது. வலிவு தேவைதான்; வலிவிருந்தாலும், தூய்மையும், மென்மையும் கூடவே வேண்டும்.

நடைமுறை வாழ்க்கையில் வெற்றிக்கு அறிகுறியாக கருதப்படும் சொத்துக்களான, மண், பொன் போன்றவைகளைப் பெற்றாலும், தன்னலமில்லாமல் இருப்பதும், பற்றறு கடமைகளை செய்து இருப்பதும் தான் நிரந்தரமான சொத்தாகும்.

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.

ஔவையாரின் பாடல் (நல்வழி) நினைவுக்கு வருகிறது.

2 Comments:

At 5:04 AM, Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

அருமையான கருத்து உங்களுடைய மொழி பெயர்த்தல் நன்றாக உள்ளது, மூலத்தை படிக்கும் ஆர்வம் உங்கள் மொழிபெயர்ப்பை படிக்கும் சமயம் வருகிறது. சீன மொழி கற்றால் மூல புத்தகத்தை கண்டிப்பாக படிக்க வேண்டும்.

 
At 8:37 AM, Blogger ரங்கா - Ranga said...

தங்கள் பாராட்டுக்கு நன்றி செந்தில் குமரன். இந்த வலைப்பக்க முகப்பில் (Home Page - tseiching.blogspot.com ) சில இணைப்புகள் கொடுத்திருக்கிறேன்; அதில் ஒன்று சீன மொழி எழுத்துக்களில் உள்ளது. ஆங்கில மொழிபெயர்ப்புகள் அதிகம் உள்ளன. சமயம் கிடைக்கும் போது சென்று படித்துப் பார்க்கவும்.

ரங்கா.

 

கருத்துரையிடுக

<< Home