சனி, ஜூன் 24, 2006

‘வழி’ - 11

11. இல்லாதவையின் மதிப்பு

சக்கரத்தின் வலுவுக்கு ஆரங்கள் இருந்தாலும்,
சக்கரத்தை இணைக்க அச்சுத்துளை வேண்டும்.

பாடுபட்டு களிமண்ணை பானையாக வடித்தாலும்,
நடுவில்லுள்ள வெற்றிடமே நீரெடுக்க உபயோகம்.

சுவரை உடைத்துவைத்த கதவும் ஜன்னலும்
சுவரையும் கூரையையும் அறையாக உருமாற்றும்

தருகின்ற உபயோகம் இருக்கும் பொருளால்
வருகின்ற மதிப்பு இல்லாத வற்றால்.


*******

அருமையான ஒரு கருத்தை இங்கு விளக்குகிறார். எது முக்கியம்? நல்ல பழக்கங்கள் இருப்பதா? அல்லது கெட்ட பழக்கங்கள் இல்லாமல் இருப்பதா? இரண்டுமே முக்கியம் - ஒன்று மட்டும் இருப்பதால் முழுமை வருவதில்லை. முழுமைக்கு முயல்பவன் மொத்தத்தையும் பார்க்க வேண்டும்.

இரண்டாவது அத்தியாயத்தில் விளக்கிய முரண்பாட்டு நியதியை ஒத்தது போல் இந்த அத்தியாயம் அமைந்திருக்கிறது. இதைப் படித்தவுடன், நான் என்ன என்ன பெற வேண்டும் என்று மட்டும் யோசிக்காமல் என்ன என்ன இழக்க வேண்டும் என்றும் யோசிக்க ஆரம்பித்தேன்.

வள்ளுவரும் இது போன்ற ஒரு கருத்தை குறளில் கூறியிருக்கிறார்:
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது. 181

இதுமாதிரியான கருத்துக்களைப் பற்றி குறளில் இருப்பவைகளை இந்தப் பதிவில் காணலாம்.