சனி, ஜூலை 29, 2006

‘வழி’ – 16

16. வேருக்குத் திரும்பிவிடு

அழித்துவிடு மனதினிலே தானெனும் எண்ணமதை
தழுவிவிடு சிந்தையிலே வழிதரும் அமைதியினை

வளர்ந்து ஓடித்திரியும் பூமியின் பொருளெல்லாம்
தளர்ந்து ஒடுங்கிப்பின் பூமியையே வந்தடையும்

வேரினாலே நின்றுயர்ந்த செடியே மரமாகி
வேரிருக்கும் மண்ணையே சேர்ந்துவிடும் உரமாக

வேருக்குத் திரும்புவது இயற்கையின் நியதியாகும்
பேறுதேடித் திரும்புவதே வாழ்க்கையின் நியதியாகும்

வழிதெரிய வேண்டுமே பேறுதேடிப் பெறுவதற்கு
வழியுணர்ந்து கொண்டாலே ஞானமும் வந்திடுமே

பொறுமையும் பெற்றிடுவார் ஞானம் வந்திட்டால்
பொறுமை பெற்றுவிட்டால் சலனங்கள் குறைந்துவிடும்

இயற்கையின் தன்மைவரும் சலனங்கள் இல்லையெனில்
இயற்கையின் தன்மையே பரப்பிரும்ம வழியாகும்

பரப்பிரும்ம வழியுணர்ந்து பற்றற்று இருந்தாலே
நிரந்தரமாய் வாழலாமே நிலையாய் இயற்கைபோலே

பிறந்தும் வாழாது இருக்கும் மனிதருள்ளே
இறந்தும் அழியாது என்றும் இருக்கலாமே!


*******

பிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதி என்பதை விளக்கும் அத்தியாயம். இதைப் படிக்கையில் அழுகணிச்சித்தரின் இந்தப் பாடல் நினைவுக்கு வருகிறது.

"பையூரி லேயிருந்து பாழூரிலே பிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்,
மெய்யூரிற் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா!"

கடுவெளிச் சித்தரின் பாடல் ஒன்றிலும் இந்த அத்தியாயத்தின் 'பற்றற்று இரு' என்ற கருத்தை விளக்குகிறது.

"நீர்மேற் குமிழியிக் காயம் - இது
நில்லாது போய்விடும் நீயறிமாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்
பற்றா திருந்திடப்பண்ணு முபாயம்."

திரு. சிவமுருகன் தன் இணையத்தில் இந்தப் பாடலுக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.


எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இரண்டு தூர தேசங்களில் உணரப்பட்ட தத்துவங்கள் இதனை தூரம் அணைவாக, ஒன்றுக்கொன்று தொடர்பாக இருப்பது ஆச்சரியமாயும், அதிசயமாயும் இருக்கிறது.

4 Comments:

At 8:52 AM, Blogger குமரன் (Kumaran) said...

//பிறந்தும் வாழாது இருக்கும் மனிதருள்ளே
இறந்தும் அழியாது என்றும் இருக்கலாமே!
//

இது மிக அருமை ரங்கா அண்ணா.

 
At 10:27 AM, Blogger ரங்கா - Ranga said...

பின்னூட்டத்திற்கும், பாராட்டுக்கும் நன்றி குமரன்.

ரங்கா.

 
At 10:46 AM, Anonymous பெயரில்லா said...

பிறந்தன விறக்கு மிறந்தன பிறக்குந்
தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்குஞ் சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கும் மறந்தன வுணரும்
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்
அருந்தின மலமாம் புனைந்தன வழுக்காம்
உவப்பன வெறுப்பாம் வெறுப்பன வுவப்பாம்
என்றிவை யனைத்து முணர்ந்தனை யன்றியும்

-பட்டினத்தார்

 
At 12:12 PM, Blogger ரங்கா - Ranga said...

Anonymous,

பட்டினத்தார் பாடலைப் பதிந்ததற்கு நன்றி.

ரங்கா.

 

கருத்துரையிடுக

<< Home