சனி, ஆகஸ்ட் 12, 2006

‘வழி’ - 18

18. வழி மறந்ததாலே!

பரப்பிரும்ம வழிமுறை மறந்ததினாலே
இரக்கத்தை கற்றுணர நேர்ந்துவிட்டதே

நல்வழியாய் வந்திருந்த தருமத்தினையும்
கல்வியாய் அறிவுறுத்த நேர்ந்துவிட்டதே

மெய்யான வழிதனை தவறவிட்டதாலே
பொய்யான மேதைகள் வழியுரைத்தாரே!

ஒத்துவாழும் முறைதனையே மறந்ததினாலே
நித்தியமான உறவுகள் இருப்பதில்லையே

உள்ளிருக்கும் உண்மைகள் மறைந்ததனாலே
வெளிக்காட்டும் மரியாதைகள் முக்கியமானதே

மக்கள்தம் மனதையாள மறந்ததினாலே
மக்களை ஆள்பவர் பெருகினாரே!


******

இயற்கையை ஒன்றி வாழ மறந்து, செயற்கையான முன்னேற்றத்தை எண்ணி செயல்பட ஆரம்பித்ததால் வரும் விளைவுகளைப் பற்றி இங்கு விளக்குகிறார். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே இப்படி எழுதியிருந்தவர், இப்போது நடப்பதைப் பார்த்தால் என்னும் என்ன எழுதியிருப்பாரோ! இயல்பாக வர வேண்டிய குணங்களைக் கூட - உதாரணமாக இரக்கம் - ஒருவர் போதித்துத்தான் தெரிந்து கொள்ளும் நிலைமை வந்துவிட்டது.

அதே போல உள்ளழகை விட புற அழகுக்கும், பதவிக்கும், பொருளுக்கும் மரியாதை அதிகமாகி விட்டது. மக்கள் செவ்வழி சென்று சலனங்களைக் கட்டுப் படுத்தினால், மற்றவர்களின் தயவை எதிர்பார்ப்பது குறையும், ஏமாற்றுபவர்களும் குறைவார்கள்.

2 Comments:

At 9:18 AM, Blogger Boston Bala said...

சமீபத்தில் பார்த்த வலைப்பக்கம்: Wengu - Chinese Classics

 
At 6:39 PM, Blogger ரங்கா - Ranga said...

சுட்டி கொடுத்ததற்கு நன்றி பாலா. இந்த வாரக் கடைசியில் சென்று படிக்கிறேன் - வேலை பளு சற்று அதிகம்.

ரங்கா.

 

கருத்துரையிடுக

<< Home