சனி, ஆகஸ்ட் 26, 2006

'வழி' - 20

20. ஞானத்தைத் தேடு

ஞானம் பெற்றவர் அறிந்து சொன்னது
'ஞானம் கல்விதரும் பட்டங்களில் இல்லை'!

‘ஆமாம்-இல்லை’ இலக்கணம் விளக்கும் கல்வி
‘ஆமாம்-இல்லை' பொருள் உணர்த்தும் ஞானம்

வாழ்வில் மக்களுக்கு மகிழ்ச்சியும் உண்டு
வாழ்வில் மக்களுக்கு பயமும் உண்டு

மக்களை மகிழ்விப்பவை ஆசானைத் தொடுவதில்லை
மக்களின் பயங்கள் ஆசானைத் தீண்டுவதில்லை

மலையைத் தழுவிவரும் மேகத்தின் பயணம்போல்
நிலையாக நில்லாமல் ஆசானும் பயணிப்பான்

குழந்தை உள்ளத்தின் எளிமை பெற்றதனால்
குழந்தை போல் குறைவாகவே பேசுகின்றானே

தேவைதாண்டி பொருட்கள் பெற்றவரின் எண்ணத்தில்
தேவைகுறைத்த ஆசானும் ஏழையாகத் தெரிவானே

இலக்கணமே பொருளறிய ஆதாரம் ஆகுமென்று
இலக்காக இலக்கணத்தை தேடும் மக்களுக்கு

நிரம்பிய ஞானமுடன் ஆசானும் சொல்வானே:
'பரப்பிரும்ம வழியுணர இவையிரண்டும் தடையாகுமே'


*********

இதற்கு முதல் அத்தியாத்தில் தந்த கருத்தினை ஒட்டி, அதை வலியுறுத்தும் விதமாக அமைந்திருக்கிறது இந்த அத்தியாயம். இலக்கையும், அதனையடையும் வழியையும் குழப்பிக் கொள்வது எளிது; அதிகமானோர் குழம்பித்தான் இருக்கிறார்கள் - நான் உட்பட.

ஆங்கிலத்தில் மேற்கோளாக ஒரு வாக்கியம் உண்டு: வரைபடம் நிலப் பரப்பல்ல! – Map is not the territory!

எப்படி கட்டிடம் கட்ட சாரம் உதவியாக இருந்தாலும், கட்டி முடித்த பின் சாரத்தை வைத்திருப்பதில்லையோ, அது போல மொழியை சரியாக உபயோகிக்க இலக்கணம் உதவினாலும், உணர்ச்சிகளையும், முக்கியமாக ஞானத்தையும், விவரிக்க சமயத்தில் இந்த இலக்கணங்களும் தடையாகிவிடும் என்பதை எடுத்துக் காட்டி, இந்த அத்தியாயத்தில் எப்படி செயற்கையாக நாமே இயற்றிக் கொள்ளும் சட்ட திட்டங்கள் பரப்பிரும்ம வழியை உணர தடையாக இருக்கிறது என்பதை உணர்த்தியிருக்கிறார்.

2 Comments:

At 7:56 AM, Anonymous பெயரில்லா said...

/சாளரம்/
சாரமா அல்லது சாளரமா?

சாளரம்-சன்னல் (தஞ்சை தமிழ்)

 
At 10:30 AM, Blogger ரங்கா - Ranga said...

அனானிமஸ்,

சாரம் என்று தான் எழுதியிருக்க வேண்டும். சாளரம் என்று பிழையாக எழுதிவிட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி. பதிவிலே திருத்திவிட்டேன்.

ரங்கா.

 

கருத்துரையிடுக

<< Home