சனி, அக்டோபர் 28, 2006

'வழி' - 29

29. அனைத்தும் வழியினாலே!

உலகை உனதாக்க ஒருநாளும் நினையாதே
உலகின்றி இருக்கத்தான் உன்னாலே முடியாதே

தந்ததே இவ்வுலகை பரப்பிரும்ம வழிதானே
வந்ததே முழுமையும் புனிதமும் அதனாலே

செதுக்க நினைப்பவரும் சிதைப்பாரே இவ்வுலகை
பதுக்க நினைப்பவரும் இழப்பாரே இதனாலே

முன்செல்வாய் சிலநாளில் உற்சாக மனதுடனே
பின்செல்வாய் சிலநாளில் சோர்வாக சுமையுடனே

ஓடுவாய் சிலசமயம் விசையோடு இவ்வுலகில்
ஓய்வாகவே அமர்வாய் இசைவோடு இங்கேயே

பலத்தோடு அகற்றிடுவாய் தடைகளையே சிலபொழுது
பலவீனம் வாட்டிடுமே உள்ளமதை மறுபொழுது

தூக்கிவைக்கும் உயர்வோடு இவ்வுலகே சிலநாளில்
தாக்கியே தாழ்த்திவிடும் விந்தையும் நீயறிவாய்

பெயரும் பொருளும் ஆடம்பரமாய் அடைந்தாலும்
பயணமும் இலக்கும் அடங்குவது வழியினுள்ளே

வழியின் மகத்துவம் அறிந்த காரணத்தால்
பழியற்ற ஆசானும் பற்றற்று இருக்கின்றான்.


********

இந்த அத்தியாயத்தில் வாழ்க்கையில் இயல்பாக ஏற்படும் உயர்வு தாழ்வினைப் பற்றி குறிப்பிடுவதுடன், அனைத்துமே 'வழி'யிலே தொடங்கி 'வழி'யிலேயே முடிகிறது என்றும் விளக்குகிறார். கீதா சாரமும் இதையேதான் சொல்கிறது.


பகவத் கீதையில் கண்ணன் சொன்னது.

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையது எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
அதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
இந்த மாற்றம் உலக நியதியாகும்.

2 Comments:

At 8:44 PM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

நல்ல தொடர் ரங்கா சார்.
வேகமாகப் படிப்பதுண்டு; பின்னூட்ட முடிந்ததில்லை!

ஒவ்வொரு தொடரிலும் இதே போல நம் சித்தாந்தங்களுடன் ஒப்பு நோக்கி எழுதுங்கள்! அருமையாக இருக்கும்!

//வழியின் மகத்துவம் அறிந்த காரணத்தால்
பழியற்ற ஆசானும் பற்றற்று இருக்கின்றான்.
//
சூப்பர்;

 
At 4:37 PM, Blogger ரங்கா - Ranga said...

பின்னூட்டத்திற்கும், பாராட்டுக்கும் நன்றி ரவி.

ரங்கா.

 

கருத்துரையிடுக

<< Home