சனி, டிசம்பர் 23, 2006

'வழி' – 37

37. செய்யாமல் செய்விக்கும் இயற்கை

நகராமல் எந்நாளும் நிலையாக நின்றாலும்
தவறாமல் கனிதனையே தருகிறதே மரமதுவே

களமதனின் செயல்பாடு உணராது போனாலும்
வளமான பயிரோடு இருப்பிடமும் தந்திடுமே

எதிர்பார்த்து எதையுமே செய்யாத இயல்பினையே
மதியுணர்ந்து மக்களுமே மனதிலே நிறுத்திட்டால்

செய்யாமல் அனைத்தையும் செய்விக்கும் இயற்கைபோல்
தொய்யாமல் கடமைகளை முழுமையோடு முடித்திடலாம்.


*********

இந்த அத்தியாயத்தில் எப்படி எதையும் எதிர்பார்க்காமல் கடமைகளை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். பொது இடத்திற்கு ஒரு மின்சார குழல் விளக்கு அளித்துவிட்டு, அதில் பாதி விளக்கை மறைப்பது போல 'உபயம்' என்று தங்கள் பெயர் போட்டுக் கொள்ளும் மனிதர்களுக்கு இது மிகவும் பொருந்தும்!

அது கனிகொடுக்கும் மரமாயிருந்தாலும் சரி, பயிர் கொடுக்கும் நிலமாக இருந்தாலும் சரி - மற்றவருடைய புகழையும் அல்லது வேறெதையும் எதிர்பார்த்தோ செய்வது இல்லை. இது இயற்கை நமக்கு சொல்லும் பாடம். இதை மனதிலே நிறுத்தி கடமைகளை செய்வது நமக்கும் இயற்கையைப் போல ஒரு உன்னதமான நிலையை அடைய உதவும் என்கிறார் ஆசிரியர்.

2 Comments:

At 8:26 PM, Blogger குமரன் (Kumaran) said...

கீதையில் 'கர்மத்தில் அகர்மம்', 'அகர்மத்தில் கர்மம்' என்று இதே தத்துவத்தை சூரியனை வைத்து கீதாசாரியன் விளக்கியிருப்பார் ரங்கா அண்ணா.

 
At 8:55 PM, Blogger ரங்கா - Ranga said...

உண்மைதான் குமரன்.

தவிர சிதப்பிரஞ்ஞன் பற்றி கீதையில் சொல்லப் பட்டிருப்பவை - சருக்கம் 45ல் இருந்து 53 வரை - கடமையைச் செய்யும் விதம் - என் மனதைக் கவர்ந்தவை.

ரங்கா.

 

கருத்துரையிடுக

<< Home