சனி, மார்ச் 17, 2007

'வழி' - 49

49. பேதமில்லாப் பார்வை

உலகையே தம்வழியாய் ஆசானும் பார்ப்பதாலே
உலகின் மக்களிடம் தாழ்வு பார்ப்பதில்லையே

வெட்டுகின்ற கோடரிக்கும் வாசம்தரும் சந்தனம்போல்
கெட்டவர்க்கும் நன்மைதரும் ஆசானின் தன்மையது

நம்பிக்கையாய் 'வழி'யோடு வாழுகின்ற ஆசானுக்கு
நம்புவோர்க்கும் இல்லோர்க்கும் வித்தியாசம் இல்லையே

பேதமற்ற இயற்கையின் வழியதனைப் பற்றியதால்
சேதமில்லா சக்தியோடு ஒன்றியே வாழுகின்றான்

நிறுத்தாமல் ஒளிவழங்கும் கதிரவனின் கிரணம்போல்

மறுக்காமல் மக்களுக்கு தயைதருவான் தாய்போலே

*********

உண்மையிலே உயர்ந்தவர்களுக்கு பேதங்கள் கிடையாது. இயற்கையின் சக்திகள் உயிர்களிடையே பேதம் பார்ப்பதில்லை. அதே போல ஆசானும் அறிவு தெளிவிப்பதற்கு பேதம் பார்ப்பதில்லை. இதைத்தான் இந்த அத்தியாயத்தில் ஆசிரியர் விளக்குகிறார்.

தமிழ் இலக்கியங்களில் கூட கருணையை விவரிக்க, மழையை உதாரணமாகக் காட்டுவதுண்டு. எப்படி மழை எல்லோருக்கும் உதவும் விதமாகப் பொழிகிறதோ அதே போல மக்களும் கருணை காட்ட வேண்டும் என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள். உயர்ந்த குணங்கள் இயற்கையில் இயல்பாகவே உண்டு; இயற்கை 'வழி'யிலிருந்து வந்தது. 'வழி' பற்றிய ஆசானும் அந்த இயற்கை போலவே நடக்கிறான்.

1 Comments:

At 6:50 AM, Blogger ரங்கா - Ranga said...

சொல்ல விட்டுப் போனது. ஔவையாரின் மூதுரை:

நெல்லுக்கிரைத்த நீர்வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்- தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை

 

கருத்துரையிடுக

<< Home