செவ்வாய், மே 17, 2011

வழி – 79

வழி – 79
பணிபுரியும் தன்மை

கட்டியே காயத்தில் வலியதனைக் குறைத்தாலும்
வெட்டிய இடத்தினிலே வடுவதுவும் மறையாதே

வாதத்தால் மற்றவரை வென்றாலும் உள்ளமதில்
சேதத்தை தவிர்க்கவே முயன்றாலும் முடியாதே

செய்கின்ற தன்மையாலே உள்ளத்தில் வலியிருந்தால்
செய்கின்ற செயல்களிலே முழுமையும் வாராதே

அறிந்த ஆசானும் செய்கின்ற கடமையிலே
புரிந்தே பலனையும் எதிர்பார்ப்பது இல்லையே.



**********

வள்ளுவர் வாக்கு:
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
செயல்களை முடிப்பது மட்டும் முக்கியமல்ல; அதை எப்படி முடிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். முடித்த செயல்களால் செய்பவர் மனதிலோ, அல்லது மற்றவர்களின் மனதிலோ துயரும், வலியும் வந்தால் அந்தச் செயல்களில் முழுமையில்லை; மாறாக குறைவுதான் தெரியும். செய்யும் செயல்களில் பலனை எதிர்பார்த்து அது கிடைக்காத போது மனதில் வருத்தமும், வலியும் வருகிறது. அதனால் அந்தச் செயல்களில் முழுமை வருவதில்லை. பலனை எதிர்பாராது பணி செய்யும் ஆசானின் மனதில் வலி இல்லை; அதனால் செயலில் முழுமை வருகிறது.

2 Comments:

At 10:57 PM, Blogger சாகம்பரி said...

அகத்திலே இரக்கம் நிரம்பியே இருக்கையில்
ஜகத்திலே உதவவே திட்டமும் வேண்டாமே//
உண்மையான கருத்து. இத்தனை தத்துவங்களும் தர்க்கரீதியான விளக்கங்களுடன் வந்தால் நல்லது. திருக்குறள் மட்டுமல்லாமல் புற நானூறு. சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கியங்களின் உதவியும் தேவைப்படும்.

 
At 6:27 PM, Blogger ரங்கா - Ranga said...

தங்கள் கருத்துக்கு நன்றி சாகம்பரி. உண்மைதான் - இது போன்ற கருத்துக்கள் பழந்தமிழ் நூல்களில், இலக்கியங்களில் நிறைய உண்டு. விரிவாக எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், நேரப் பற்றாக்குறை. அதைவிட முக்கியமாக எனக்குத் தெரிந்தது மிக மிகக் குறைவு. இந்தப் பதிவுகளைப் படிக்கும் மற்ற அன்பர்கள் பழம் நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டினால் நானும் அறிவை விருத்தி செய்து கொள்வேன்.

ரங்கா.

 

கருத்துரையிடுக

<< Home