வெள்ளி, ஜனவரி 28, 2011

'வழி' - 52

'வழி' - 52
மூலத்தை அடைய

ஜகத்தையே தந்ததே அன்னையான 'வழி'தானே
மகவாக வந்ததையே அறிவோமே அன்னையாலே

மகவான பொருளனைத்தும் அறிந்தே தெளிந்தாலும்
முதலான அன்னையதன் தொடர்பதையே மறக்காதே

தெளிவும் இருந்தாலே நுணுக்கமும் புரிந்திடுமே
வளைந்து கொடுத்தாலே வலிவும் தெரிந்திடுமே

கட்டாத புலன்களாலே சக்தியுமே இழப்பாயே
ஒட்டாத மனத்தாலே முக்தியுமே பெறுவாயே



***********

பிறந்ததிலிருந்து இறக்கும் வரை ஒருவரின் வாழ்வில் 'அறிந்து கொள்வது' என்கிற செயல் நடந்து கொண்டே இருக்கிறது. வாழ்நாள் முழுவதும் முயன்றாலும் அறிந்து கொண்டவைகளை விட அறியாமல் போன விஷயங்களே அதிகம். விளைவுகளை அறிந்து கொள்ள நேரத்தை செலவழிப்பதை விட, விளைவுகளுக்கான மூல காரணத்தை அறிந்து கொள்ள செலவழித்தால், விளைவுகளையும் புரிந்து கொள்ள முடியும். இதையே ஆசிரியர் இந்த அத்தியாயத்தில் எடுத்துரைக்கிறார்.

சாந்தோக்ய உபநிஷதத்திலும் இந்த மூலகாரணத் தத்துவம் பற்றி மிக விரிவான விளக்கங்கள் உள்ளன. மூலத்தை அறிந்தவருக்கு விளைவுகள் தாமாகவே புரியும். பிரபஞ்சத்தில் இருப்பவை அனைத்துமே விளைவுகள் (அபூர்வ என்று இதை சாந்தோக்ய உபநிஷதத்தில் அழைக்கப்படும்) என்று கருதி அதன் மூலத்தை உணர்ந்து விட்டால், பிரபஞ்சமே புரிந்து விடும் என்பது தான் கருத்து.