சனி, நவம்பர் 25, 2006

‘வழி’ - 33

33. சாகாவரம்

மற்றவரை புரிந்து கொண்டால் அறிவு;
தன்னைத் தெரிந்து கொண்டால் ஞானம்.

மற்றவரை வெல்ல வேகம் வேண்டும்;
தன்னையே வெல்ல விவேகம் வேண்டும்.

இருப்பது போதுமெனப் புரிந்தவன் தனவான்
உறுதிமனம் பெறுவதற்கு விடாமுயற்சி வேண்டும்

மாறாத நிலையடைய பொறுமை மிகவேண்டும்
இறந்தும் அழிவற்று இருப்பதே சாகாவரம்


*********

இறப்பை வெல்லும் ஆசை அனைவரிடத்திலும் உள்ளது. பிறப்பு என்று ஒன்று இருக்கையில் இறப்பும் நிச்சயம் என்று தெரிந்தும், சாகாவரம் பெற வேண்டாதவர் அனேகமாக இல்லை. இந்த அத்தியாயத்தில் சாகாவரம் பற்றி விளக்குகிறார்.

வள்ளுவரின் புகழ் அதிகாரத்தில் இதைப் போன்ற கருத்தைத் தெரிவிக்கிறார். குறிப்பாக இந்த இரு குறள்கள் இதை விளக்குகின்றன.

நத்தம்போல் கேடும், உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது. [235]

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதில்லார்
தோன்றலின் தோன்றாமை நன்று. [236]

விளக்கத்திற்கு இங்கே செல்லவும்.

சனி, நவம்பர் 18, 2006

‘வழி’ -32

32. வழியொத்த கடல்

வடிக்காத பாறைக்குள் ஒளிந்திருக்கும் சிலைகள்போல்
வழியுணர்த்தும் ஞானத்தின் அளவுக்கும் எல்லையில்லை

ஞானத்தின் விளைவாலே தூய்மையும் வந்திடுமே
வானத்தின் மடிதோன்றும் மழைத்துளியின் தூய்மைபோல்

வடிக்காத நிலையிலே முழுமையான பாறையதை
வடிவங்கள் மாறுகையில் வகைப்படுத்த நேரிடுமே

வகையதிகம் வந்துவிட்டால் முழுமையும் சிதைந்திடுமே
வகைப்படுத்தும் வேலையிலே ‘வழி’யுமே மறந்திடுமே

வசதிக்காக வகைப்படுத்தி பெயரிட்டு அழைத்தாலும்
நிசத்தினிலே முழு‘வழி’யின் தொடர்புதனை மறக்காதே

சுழித்தோடும் நதியாவும் நிற்கின்ற கடல்சேரும்
'வழி'த்தோன்றும் வகையாவும் 'வழி'யோடு கலந்திடுமே.


*********

இந்த அத்தியாயத்தில் இலக்கின் முக்கியத்துவம் பற்றி விளக்குகிறார். இலக்கை அடைவதற்கு பல பாதைகள் உண்டு. பாதையின் வகையிலும், பெயரிலும் அதிகமான கவனம் சென்றால், இலக்கை அடைவதில் பின் தங்கிவிடுவோம். ஆங்கிலத்தில் ஒரு மொழி உண்டு: ‘Losing the forest for trees’ – என்று.

எந்தப் பெயரிட்டு அழைத்தாலும், வகை வகைகளாகப் பிரித்தாலும், இறுதியில் வழி ஒன்றுதான் என்பதை அழகாக விளக்கியிருக்கிறார். முக்கிய போதனை: 'வகைப்படுத்துவதில் அளவுக்கதிகமான கவனம் கூடாது'.

சனி, நவம்பர் 11, 2006

'வழி' - 31

31. வழியும் ஆயுதமும்

அழிக்கும் ஆயுதங்கள் அளிப்பவையெல்லாம்
அழிவும் தீராத பழியும்தானே

வழியறிந்த மக்களும் இதனாலேயே
கழித்திடுவார் ஆயுதம்தரும் வன்முறையை

அழகில்லை ஆயுதந்தரும் வெற்றியிலே
அழிவிலே மகிழ்பவர் மனிதருமில்லை

பெருமையே அடைந்தாலும் வெற்றியிலே
முறையானது உயிரிழப்பில் அஞ்சலிதானே

உலகில் உன்னதமான பணிகளிலே
உயர்வானது உயிர்காக்கும் கடமைதானே

உயிர்களைக் காக்கும் இலக்கையே
உயிரிழப்பால் அடையவே முடியாதே


********

வன்முறையைப் பழிக்கும் விதமாக அமைந்த அத்தியாயத்தின் தொடர்ச்சியாக, வன்முறைக்கு உதவும் ஆயுதங்களின் தீமை பற்றி இங்கு விளக்குகிறார். 'கத்தியைத் தீட்டாதே, உந்தன் புத்தியைத் தீட்டு' என்ற சொல்லுக்கு விளக்கம் போல் அமைந்திருக்கிறது இந்த அத்தியாயம்.

வன்முறையில், போரில், அழகில்லை; பெருமையும் இல்லை. உயிரிழப்பில் தெரிவிக்க வேண்டியது அஞ்சலிதான். இதை அழகாக விளக்கியதோடு இல்லாமல், உயிரைக் காப்பது உயர்ந்த தர்மம் என்பதையும் எடுத்துரைக்கிறார்.

சனி, நவம்பர் 04, 2006

'வழி' - 30

30. வன்முறை வழியல்ல

தன்மையான 'வழி'யினையே தழுவியாளும் அரசருமே
வன்முறையே வழியாக ஒருநாளும் வாழாரே

விடையளித்த வன்முறையே திரும்பியே தாக்கிடுமே
படைநடந்த நிலங்களில் பயிர்களும் வளராதே

வெற்றியின் கொண்டாட்டம் மொத்தமாய் மறையுமுன்னே
பற்றிடுமே பஞ்சமும் பட்டினியும் நாட்டினையே

போரின் கொடுமை உணர்ந்த தளபதியும்
புரிந்தே நிறுத்திடுவான் இலக்கை அடைந்தவுடன்

வெற்றியை அடைந்து இழப்பின்றி வந்தாலும்
இறப்பிலே மகிழ்ச்சியை மனமும் காணாதே

வழியின் உயர்வை உணர்ந்த தளபதியும்
அழிக்கும் கடமையையும் இவ்வாறே செய்கின்றான்

செய்வதில் மகிழ்ச்சியை ஒருபோதும் அடையாமல்
செய்வதில் பெருமையை கணமேனும் நினையாமல்

புகழ்ச்சியை வன்முறையால் பெறவே நினையாமல்
அழிப்பதை வருத்தமான கடமையாய் முடிப்பானே

தளர்ந்திடுமே மலைகளுமே இயற்கையின் வழியினிலே
இளமையிலே இறந்திடுவார் வழிதழுவா அரசருமே


**********

இந்த 'வழி' தொகுப்பில், ஒரு தனி மனிதனுக்கு இயற்கையோடு ஒன்றி வாழ்வதைப் பற்றி மட்டும் எழுதாமல், ஒரு அரசன் எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும், ஆட்சி புரிய வேண்டும் என்றும் எழுதியிருக்கிறார் ஆசிரியர். இந்த அத்தியாயத்தில், போரினால் மட்டுமே அல்லது வன்முறையால் மட்டுமே ஆட்சி நடத்த நினைக்கும் அரசர்களுக்கு , போர் வன்முறையால் ஏற்படும் தீமை பற்றி விளக்குகிறார். எத்தனையோ ஆண்டுகளுக்கும் முன்பு எழுதியிருந்தாலும், இப்போது உலகில் இருக்கும் பல அரசுகளுக்கு இது பொருந்தும்.