திங்கள், பிப்ரவரி 28, 2011

வழி - 59

வழி - 59
சிக்கனத்தின் சிலாக்கியம்

இயல்பான இயற்கைவளம் அளவின்றி இருந்தாலும்
செயல்களுக்கு செலவிடவே சிக்கனமும் வேண்டுமே

வரவுக்குள் செலவிருத்தல் சிக்கனத்தின் இலக்கணமே
இரவதனின் இருள்வருமே வரவுமீறிச் செல்கையிலே

உணர்கையிலே வழியுந்தன் மதியதனின் வரவாகும்
உரைக்கையிலே மதியுந்தான் மறைத்திங்கே செலவாகும்

அசைவற்ற மனத்தினிலே வழிஞானம் சேர்ந்திடுமே
ஆசையின் வெளிப்பாட்டில் செலவாகும் வழியிங்கே

சிக்கனமும் வந்திடுமே உரைப்பது குறைகையிலே
சிக்கனம் இருந்தாலே நிறைவதனைப் பெறலாமே

நிறைவாக இருக்கையிலே சோர்விங்கே வாராதே
குறைவின்றி இதனாலே புவியதனை ஆள்வாரே

சிக்கனத்தின் சக்தியதை உணர்ந்த ஆசானை
விக்கினங்கள் இதனாலே நெருங்குவதும் இல்லையே!


**********

"வரவு எட்டணா, செலவு பத்தணா" என்று நடைமுறை வாழ்க்கையில் சாதாரணமாகக் குறிப்பிடப்படும் சிக்கனம் பற்றிய கருத்தின் பெருமையை வாழ்க்கை "வழி" பற்றி விளக்குகையில் இந்த அத்தியாயத்தில் ஆசிரியர் எடுத்துரைக்கிறார். எந்த விஷயத்திலும் வரவையும், செலவையும் புரிந்து கொண்டால், எப்படி சிக்கனத்தை கடைப்பிடித்தால் பலனுண்டாகும் என்பதை அழகாக விவரிக்கிறார். இன்னாளில் இயற்கை வள உபயோகத்திலிருந்து, ஒரு நாட்டுப் பொருளாதாரம் வரை இந்த 'சிக்கனம்' விஷயம் எப்படி முக்கியமானதாகிறது என்பதை நம்மை சிந்திக்க வைக்கிறார்.

சனி, பிப்ரவரி 26, 2011

'வழி' – 58

'வழி' – 58
ஆளும் முறை

நாட்டை ஆளும் அரசுமே பலத்தினால்
வாட்டாமல் மக்களை ஆள்வதும் முறையே

சிலைக்கு வடிவுதரும் சிற்பியின் உளிதானே
குலைத்தே சிதைத்திடுமே அழுத்தம் மீறுகையில்

வாக்கிலே சாதுர்யம் நிரம்பியே இருந்தாலும்
தாக்காமலே பேசிடும் தன்மையை வளர்ப்பாயே

பரிவான ஆசானின் கூரான பார்வையுமே
எரிக்காதே இதனாலே மற்றவரின் மனத்தினையே

வரம்புகள் அறிந்த ஆசானின் ஆற்றலுமே
நிரம்பியே இருந்தாலும் தளும்புவது இல்லையே.


**********

தனி மனித வாழ்வின் உயர்வுக்கு உதவும் தத்துவங்களைத் தந்ததோடு மட்டுமல்லாமல் ஒரு நாட்டை நிர்வகிக்கும் அரசனின், அரசின் அரசாட்சி முறைபாடுகள் சம்பந்தமான தத்துவங்களையும் இந்நூலில் காணலாம். ஒரு அரசின் வீரம், பலம், செல்வம் போன்ற குணங்களைப் பற்றி மட்டும் சொல்லாமல், தனி மனித வாழ்க்கையில் இருக்க வேண்டிய பொறுமை, நிதானம், அடக்கம் போன்ற சாத்வீக குணங்கள் எந்த அளவுக்கு அரசாட்சியிலும் வேண்டும் என்பதை ஆசிரியர் பல இடங்களில் எடுத்துரைக்கிறார்.

இந்த அத்தியாயத்தில் வரம்பு மீறிய வன்மை பற்றிக் கூறுகையில், எப்படி சிலை செதுக்குகையில் அழுத்தம் அளவோடு இருக்க வேண்டுமோ அதே போல அரசும் தன் பலத்தை அளவு மாறாமல் பிரயோகிக்க வேண்டும் என்பதை விளக்குகிறார். ஒரு அரசனின் செயல்பாடு 'வழி' தத்துவம் உணர்ந்த ஆசானின் செயலை ஒத்திருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கிறார்.

புதன், பிப்ரவரி 16, 2011

'வழி' – 57

'வழி' – 57
செய்யாத வெற்றி

வரம்புகள் இருக்கையில் மீறுதலும் இயற்கையே
மரம்போல் இருக்கையில் இயற்கையோடு ஒன்றுமே

வாதும் சூதும் வன்போருமே செய்தாலும்
சாதுர்யம் புரிந்தே உலகையே வென்றாலும்

பரந்த இவ்வுலகினின் உயிர்களின் மனத்தினில்
நிரந்தர வெற்றியையும் பெற்றிடவே முடியாதே

ஆளும் எண்ணம் இல்லாத காரணத்தால்
ஆசானும் காட்டுவானே நிறைவான வழியதையே

முழுதான வழியதனால் உயர்வடைந்த உயிர்களுமே
தொழுதே வழிபடுமே ஆசானை உள்ளமதில்


**********

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. தடுக்க நினைக்கையிலே எதிர்த்து செயல்பட நினைப்பதும், விரும்புவதும் இயற்கை. அணைபோட்டுத் தடுத்த நதி நீரின் வேகம் அணை உடைகையிலே தெரியும். செயற்கையாகத் தடுக்காமல் இயற்கையோடு ஒன்றி இயல்பாக இயங்குகையில் எதிர்ப்பும் இல்லை, மீறுதலும் இல்லை.

அரசாட்சியில் மக்களை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆளுகின்ற அரசுகள் அனைத்தும் எதிர்ப்பைச் சந்தித்தே ஆக வேண்டும். மாறாக ஒருவர் மனத்திலே இடம் பெற்று விட்டால் அவரின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. இயல்போடு இயங்கும் ஆசானும் ஆள வேண்டும் என்று யாரையும் அணுகாத காரணத்தால் எந்நாளும் எதிர்ப்பைச் சந்திக்காமல் வாழ்கிறார். ஆளாமலே மக்களைத் தன்மையால் வென்றுவிடுகிறார்.

சனி, பிப்ரவரி 12, 2011

'வழி' – 56

'வழி' – 56
ஆசானின் தன்மை!

உரைப்பவர் உணர்ந்ததில்லை உணர்ந்தவர் உரைப்பதில்லை
உரைப்பதை நிறுத்திவிட்டு உணர்வதைத் துவக்கிடுவாய்

வாதத்தை வெல்லவே அறிவதைனைச் செலுத்தாமல்
வேதத்தை உணரவே ‘வழி’யதனைப் பற்றிடுவாய்

இயல்பை மாற்றியே சாதுர்யம் வளர்க்காமல்
இயல்பை ஒற்றியே இயங்கவும் அறிந்திடுவாய்

உயர்வான 'வழி'யதனின் இயல்பை உணர்ந்திட்டால்
துயரமும் மகிழ்ச்சியும் தாண்டியே நிற்பாயே

அகிலமும் போற்றிடும் ஆசானின் தன்மையதே
அனைத்துமே கடந்த இயல்புணர்ந்த நிலைதானே


**********

தமிழில் பலகாலமாய் இருந்து வரும் வழக்குகளில் ஒன்று 'நிறை குடம் தளும்பாது'. குறளிலும் வள்ளுவர் சொன்னது - 'சொல்லுக சொல்லிற் பயனுடைய'. சிவவாக்கியர் சொன்னது:
செய்யதெங்கிலே இளநீர் சேர்த்த காணரணங்கள் போல
ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர்முன் வாய்திறப்பதில்லையே.

வார்த்தைளைத் தாண்டி நிற்கும் பரம் பொருளை, வழியை, வார்த்தைகளால் விளக்கித் தெரிந்து கொள்ள முடியாது; உணர்ந்து தான் அறிந்து கொள்ள வேண்டும்.

மற்றவர்கள் நீதி பெற சட்டம் படிப்பதற்கும், சட்டத்தை மீற அதன் ஓட்டைகளைத் தெரிந்து கொள்வதற்காகப் படிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்த அத்தியாயத்தில் ஞானம் பெற சக்தியை, அறிவை செலுத்த வேண்டும் என்பதையும், இயல்பை ஒட்டி வாழ வேண்டும் என்பதையும் ஆசிரியர் வலியுறுத்துகிறர். இதுவே ஆசானின் தன்மையாகிறது.

செவ்வாய், பிப்ரவரி 08, 2011

'வழி' - 55

வழி' – 55
குழந்தையும் ஞானியும்

தானென்னும் நினைப்பைத் துறந்த ஞானியும்
தானென்னும் நினைப்பே இல்லாத குழந்தையும்

'வழி'தந்த பிரபஞ்சத்தை உள்ளபடி உணர்வதாலே
வலிதரும் அபாயங்கள் அணுகுவதும் இல்லையே

வற்றியே இருந்தாலும் எலும்பும் சதையுமே
பற்றுகையில் தெரிந்திடுமே பிடிப்பின் வலிவுமே

'வழி'யின் இயல்பொற்றி இயங்கும் இயல்பாலே
இழப்புமே இல்லையே மனதிலும் உடலிலும்

நிலைப்பும் வந்திடுமே இயல்பை உணர்ந்தாலே
நிலைப்பும் உணர்த்திடுமே இயற்கையின் செயல்பாட்டை

வரையடக்க முடியாதே இயற்கையின் இயல்பையே
வரம்பை மீறுவதும் அழிவையே அளித்திடுமே


**********

இந்த அத்தியாயத்தில் வழி தத்துவத்தின் மூலக் கருத்துகளின் ஒன்றான இயல்புணர்தல் பற்றி விளக்குகிறார். பிறக்கும் பொழுது ஒரு குழந்தை இயற்கையோடு ஒன்றி இயல்பாக இருக்கிறது. வளர வளர சுயநினைவும், தான் என்கிற ஒரு உணர்வும் அது பெற ஆரம்பிக்கிறது. வாழ்க்கையின் பொருள் புரிந்தவர்கள், "தான் என்று ஒன்று தனித்திருப்பதில்லை, இந்த இயற்கையோடு, பிரபஞ்சத்தோடு சம்பந்தப்பட்ட ஒன்று" என்று புரிந்தவர்கள், இந்த 'தனித்துவத்தை' இழந்து, இயல்பை உணர்கிறார்கள். இயல்பை உணர்கையிலே இயற்கையோடு ஒன்றி, இயற்கை போல பரந்து விரிகிறார்கள். இயல்பை உணராமல், இயற்கையின் வரம்பைக் கடந்து செல்ல முயற்சிக்கையிலே அழிவடைகிறார்கள்.

ஞாயிறு, பிப்ரவரி 06, 2011

'வழி' - 54

'வழி' - 54
ஞானத்தின் உணர்வு

வழியதனைப் பற்றிவிட்டால் விழிப்பும் வந்திடுமே
விழிப்பிங்கே வந்துவிட்டால் இழப்புமே இருக்காதே

உனக்குள்ளே வளர்த்திட்டால் உண்மையும் புலனாகும்
உன்குடும்பம் உணர்ந்திட்டால் வளமாகும் உன்வாழ்வும்

வீடெல்லாம் அறிந்தாலே ஊரும் வழிப்படுமே
நாடும் நிலைப்படுமே வழியுணர்ந்த ஊர்களாலே

உலகமும் உணர்ந்திடுமே நாடெல்லாம் உணர்ந்திட்டால்
உலகமும் உணர்ந்திடவே உன்வழியை உணர்வாயே.



**********

'உலகம் உன்னுள்ளே' என்ற தத்துவத்தை ஒட்டி எழுதப்பட்ட அத்தியாயம் இது. தனி மனிதன், வீடு, நாடு, உலகம் என்ற வரிசையில் மாற்றங்கள் வருகின்றன. காந்தியடிகள் சொன்னது: "உலகத்தில் காண வேண்டிய மாற்றத்தை உன்னுள்ளே காண்!". இது போன்ற உலகத்தை நம்முள் பார்ப்பது பற்றிய தத்துவங்கள், இந்து, பௌத்த மதங்களில் அதிகம் உண்டு; இது தவிர மற்றைய மதங்களிலும் இது போன்ற தத்துவத்தைப் பார்க்கலாம்.

விழிப்பு வந்துவிட்டால் இழப்புகள் இல்லை; ஒவ்வொருவரும் விழித்துக் கொண்டால் உலகத்திலே இழப்பில்லை என்பதை ஆசிரியர் எடுத்துரைக்கிறார். இதேபோன்ற தொடர்பு பற்றிய கருத்தை ஆங்கிலத்தில் "macrocosm is in microcosm"; முன்னாளில் தமிழில் 'பிரம்மானந்தம் பிண்டானந்தத்தில்' என்றார்கள்.

புதன், பிப்ரவரி 02, 2011

'வழி' - 53

'வழி' - 53
தேர்ந்தெடுத்த பாதை

'வழி'யும் காட்டிடுமே நிறைவான பாதையதை
பழித்தே ஒதுக்கிடுவார் முறைமறந்த மனிதருமே

பொறுமையாய் 'வழி'யதனின் முழுமையை உணராமல்
குறுக்கு வழியதனை விரும்பியே செல்வாரே

நிலத்திலே பயிரதனின் கதிராடாக் காலத்தில்
நிலமாளும் மன்னவரின் கோட்டையிலே கொடியாட

உழைத்த செல்வத்தை செலவழிக்கும் நாட்டினிலே
பிழைக்க ‘வழி’யுமே இல்லாமல் போகுமே


*********

வாழ்க்கைத் தத்துவங்களை விளக்குகையில், ஒரு அரசன் எவ்வாறு நாட்டை ஆள வேண்டும் என்பதைப் பற்றியும் ஆசிரியர் விளக்குகிறார். 'வழி' தத்துவங்களில் முழுமை பெறுவது என்கிற தத்துவம் முக்கியமான ஒன்று. நாட்டில் முழுமை அரசனின் கோட்டையில் மட்டுமல்ல அவ்வரசில் இருக்கும் குடிமக்களின் தரத்தில்தான் முக்கியமாக இருக்கிறது என்பதை எடுத்துரைக்கிறார். குடிமக்களின் பசி நீக்காமல் தன் நலம் பேணும் அரசன், 'வழி' காட்டும் முழுமையை அடையாமல் குறுக்கு வழியில் போவதற்கு ஒப்பாகும் என்கிறார் இந்த அத்தியாயத்தில்.

இந்த அத்தியாயத்தைப் படிக்கையில் பழந்தமிழ்ப் பாடலொன்று நினைப்புக்கு வருகிறது:
வரப்புயர நீருயரும்
நீருயரக் கதிருயரும்
கதிருயரக் குடியுயரும்
குடியுயரக் கோனுயர்வான்.