சனி, அக்டோபர் 28, 2006

'வழி' - 29

29. அனைத்தும் வழியினாலே!

உலகை உனதாக்க ஒருநாளும் நினையாதே
உலகின்றி இருக்கத்தான் உன்னாலே முடியாதே

தந்ததே இவ்வுலகை பரப்பிரும்ம வழிதானே
வந்ததே முழுமையும் புனிதமும் அதனாலே

செதுக்க நினைப்பவரும் சிதைப்பாரே இவ்வுலகை
பதுக்க நினைப்பவரும் இழப்பாரே இதனாலே

முன்செல்வாய் சிலநாளில் உற்சாக மனதுடனே
பின்செல்வாய் சிலநாளில் சோர்வாக சுமையுடனே

ஓடுவாய் சிலசமயம் விசையோடு இவ்வுலகில்
ஓய்வாகவே அமர்வாய் இசைவோடு இங்கேயே

பலத்தோடு அகற்றிடுவாய் தடைகளையே சிலபொழுது
பலவீனம் வாட்டிடுமே உள்ளமதை மறுபொழுது

தூக்கிவைக்கும் உயர்வோடு இவ்வுலகே சிலநாளில்
தாக்கியே தாழ்த்திவிடும் விந்தையும் நீயறிவாய்

பெயரும் பொருளும் ஆடம்பரமாய் அடைந்தாலும்
பயணமும் இலக்கும் அடங்குவது வழியினுள்ளே

வழியின் மகத்துவம் அறிந்த காரணத்தால்
பழியற்ற ஆசானும் பற்றற்று இருக்கின்றான்.


********

இந்த அத்தியாயத்தில் வாழ்க்கையில் இயல்பாக ஏற்படும் உயர்வு தாழ்வினைப் பற்றி குறிப்பிடுவதுடன், அனைத்துமே 'வழி'யிலே தொடங்கி 'வழி'யிலேயே முடிகிறது என்றும் விளக்குகிறார். கீதா சாரமும் இதையேதான் சொல்கிறது.


பகவத் கீதையில் கண்ணன் சொன்னது.

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையது எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
அதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
இந்த மாற்றம் உலக நியதியாகும்.

சனி, அக்டோபர் 21, 2006

'வழி' – 28

28. முரண்பாடுகளின் தொடர்பு

ஆண்உடலின் வலிமையை நிரம்பவே பெற்றாலும்
பெண்மனதின் மென்மையை பெற்றிடவே மறக்காதே

மென்மையும் வலிமையும் ஒருங்கே பெற்றதனால்
தன்மையான இயற்கையின் பக்குவம் அடைந்திடுவாய்

கழலின் ஒளிதரும் நன்மை அறிந்தாலும்
நிழலின் இருள்தரும் அருமை மறக்காதே

ஒளியின் இருளின் தொடர்பு புரிந்ததனால்
தெளிவாய் பார்க்கும் வன்மை அடைந்திடுவாய்

மகிழ்வாய் புகழின் உச்சியையே அடைந்தாலும்
நெகிழ்வாய் பணிவின் ஆழமடைய மறக்காதே

மலையையும் கடலையும் உணர்ந்தே பார்த்ததனால்
நிலையைக் குலைக்காத நிதானம் பெற்றிடுவாய்

முரணான குணங்களில் தொடர்பறிந்த ஆசானும்
அரணான இயற்கையைக் குலைப்பது இல்லையே

குலையாத இயற்கையின் அழகான வலிவையே
அலையாத மனத்தினால் வாழ்க்கையில் அடைந்திடுவாய்

*********

இயற்கையில் மலையும் உண்டு, மடுவும் உண்டு. கடலும் உண்டு, பாலைவனமும் உண்டு. இப்புவியின் தொடர்ச்சிக்கு, முரண்பாடான குணங்கள் உடைய அனைத்தும் துணை புரிகின்றன. இவ்வுலகம் முழுதும், கடல் மட்டும் இருந்தாலோ, அல்லது வயல் மட்டுமே இருந்தாலோ வளமாக இத்தனை உயிர்கள் இருக்க முடியாது. அதே போல மனிதனுக்கும் குணங்களின் எதிரெதிர் துருவங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியமான ஒன்று.

இந்த அத்தியாயத்தில் மனிதன் எப்படி எதிரெதிர் குணங்களைப் பற்றி அறிந்து, இயற்கையின் இந்த சமச்சீரான வலிமையைப் புரிந்து வாழ வேண்டும் என்று எடுத்துரைக்கிறார். மலையின் உயரத்தைத் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது, கடலின் ஆழத்தையும் அறிந்து கொண்டால் முழுமை பெற்றிடலாம் என்று அழகாகக் காட்டுகிறார்.

சனி, அக்டோபர் 14, 2006

'வழி' - 27

27. ஆசானின் சிறப்பு

தேர்ந்த நடையில் தடம் தெரியாது
உயர்ந்த பேச்சில் குறை தெரியாது

சிறந்த கணக்கனுக்கு வாய்பாடு எதற்கு?
பொருந்திய கதவுக்கு துணைக்கால் எதற்கு?

தேர்ந்த கட்டிற்கு கயறுஅதிகம் வேண்டாம்
இருந்தும் கட்டை அவிழ்ப்பது கடினம்

இறைவனின் படைப்பில் வீணானது இல்லை
அறிந்த ஆசானும் வீணாக்குவது இல்லை

பிறந்த மக்களில் பேதங்களும் இல்லை
சிறந்த ஆசானின் போதனையால் உயர்வர்

பேதங்கள் பிறப்பில் இல்லை என்றாலும்
போதனையின் சிறப்பை உணராத மக்களும்

மற்றவரின் திறமையை மதிக்காது போனாலே
கற்றவையின் சிறப்பு தங்காமல் போகுமே.



*********

பிறப்பினாலே பேதங்கள் இல்லை; இயற்கையின் (ஆண்டவனின்) படைப்பில் வீணாவதும் இல்லை. இந்த அத்தியாயத்தில் இயற்கையிலே மனிதனுக்கு குறை இல்லையென்றாலும், வழியை ஒட்டி வாழ்வதினால் முழுமை பெறலாம் என்றும் எடுத்துரைக்கிறார்.

இந்துத் தத்துவங்களிலும், 'காரணம் இல்லாமல் காரியம் இல்லை', 'ஆண்டவனின் செயல்களில், படைப்புகளில் தாழ்வென்பதே இல்லை' என்றேல்லாம் சொல்வது உண்டு.

சனி, அக்டோபர் 07, 2006

'வழி' - 26

26. சலனம் இல்லாமை

கனமில்லா பொருட்கள் மேலே வருமே
கனமான பொருட்கள் கீழே இருக்க
கனம் வேராகும் கனமில்லா பொருட்களுக்கு

அசைந்தாடி நிற்கும் கிளை இலைகளையே
அசையாமல் காத்துநிற்கும் மரத்தின் வேர்தானே
அசைவு அற்றவையே அசைவின் மூலமாகும்

சுமையான வாழ்க்கைப் பயணத்தை இலேசாக்க
சுமைதரும் சலனங்களை அறவே ஒதுக்கிவிட்டு
அமைதியோடு அசையாமல் மனதை நிறுத்துகிறான்

இலேசாய் பறப்பதற்கு பற்றுதலை விட்டிடணும்
கிலேசங்கள் இருப்பதாலே தன்னிலை குலைந்திடுமே
மேலே செல்வதற்கு ஆசானின் வழியிதுவே!


**********


சீன தத்துவங்களில் எதிர்மறைப் பொருள்களின் தொடர்பு அதிகமாக எடுத்துக் காட்டப் படுகிறது. இந்த அத்தியாயத்தில் மனதில் சலனம் இல்லாமல், பற்று இல்லாமல் இருக்க வேண்டிய காரணத்தையும் எதிர்மறைப் பொருள்களின் தொடர்பாலேயே எடுத்துக் காட்டுகிறார். இரண்டாம் அத்தியாயத்தில் எப்படி பற்றற்று இருக்க வேண்டும் என்று சொன்னதைப் போல இங்கு ஏன் சலனம் இல்லாமல் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று எடுத்துரைக்கிறார்.