ஞாயிறு, ஏப்ரல் 24, 2011

வழி - 75

வழி - 75
வரியின் தாக்கம்

வரியதனை உணவாக்கி வளர்கின்ற அரசுமே
பெரிதாகி மக்களின் உணவதனைக் கவர்ந்திடுமே

வரிகளையும் வரம்பின்றி ஆள்பவரும் விதித்தாலே
புரிவாரே தரம்தாண்டிய செயல்களையே மக்களுமே

இழப்பதற்கு பொருளேதும் இல்லாத நிலைதனிலே
இழக்கவே துணிவாரே உயிரையுமே மனிதருமே

இறக்கவே மனிதருமே துணிவாக இருக்கையிலே
துறக்குமே அரசுமே அரசாளும் உரிமையதை.


**********

மனதை ஆளும் வழிகளைப் பற்றி ஆசிரியர் பெரும்பான்மையான அத்தியாயங்களில் விளக்கியிருந்தாலும், மக்களை ஆளும் முறை பற்றியும் அனேக அத்தியாயங்களில் விளக்கியிருக்கிறார். அம்மாதிரியான அத்தியாயங்களில் இதுவும் ஒன்று. அரசாங்கம் நடத்தப் பொருள் வேண்டும். அது வரிகள் மூலமாக வருகிறது. அதே சமயத்தில் வரும் பொருளின் மேலுள்ள மோகத்தால் அளவுக்கு மீறி வரிகளை விதிக்கையில், மக்களும் தரம் குறைந்த செயல்களை செய்யத் தொடங்குவார்கள். முடிவில் உயிருக்கும் துணிந்து அரசையே எதிர்த்துக் கவிழ்ப்பார்கள் என்கிறார் ஆசிரியர். வரலாற்றில் அன்னாளிலும் இதைப் பார்த்திருக்கிறோம்; இன்னாளிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

புதன், ஏப்ரல் 20, 2011

வழி - 74

வழி - 74
மரண பயம்

மரணபயம் இல்லாத மனிதர்களை எந்நாளும்
மரணத்தைக் காட்டியே அடக்கவும் முடியாதே

நேரத்திலே விதிமுடிக்க காரணனும் இருக்கையிலே
கோரமான சதியால்வரும் மரணமிங்கே பிழைதானே

திறமிக்க சிற்பிக்கு உதவும் உளிதானே
கரத்தையே சிதைத்திடுமே பொறுப்பற்ற வீச்சினிலே

காரணம் புரிந்திடவே வாழுகின்ற உயிர்களையே
மரணத்தால் முடிப்பதனால் இழப்பன்றோ மிஞ்சுமிங்கே!


**********

வன்முறையில் கொடூரமானது உயிர்க்கொலை. வன்முறையின் தீமைகளை எடுத்துரைக்கும் விதமாக எழுதப்பட்ட மற்றுமொரு அத்தியாயம் இது. பிறந்த உயிர்களனைத்தும் இறப்பது நிச்சயம். இது இயற்கையால் நடத்தப்படுவது. அதை மனிதர் தம் செயலால் செய்வித்தால் அது இயற்கைக்கு எதிரான, பொறுப்பற்ற செய்கையாகிறது. உயிர்களனைத்தும் ஏதாவதொரு நோக்கத்தை, காரணத்தையொத்துப் பிறந்திருக்கின்றன. அந்த நோக்கம் நிறைவேறும் முன்பாக, காரணம் புரியும் முன்பாக மரணத்தை சந்திக்க வைப்பது தவறு என்கிறார் ஆசிரியர். அதேபோல, மரணபயம் துறந்தவர்களை, மரணத்தைக் காரணமாகக் காட்டி பயமுறுத்தி ஆள்வது நடவாத செயல் என்கிறார் ஆசிரியர்.

சனி, ஏப்ரல் 16, 2011

வழி - 73

வழி - 73
விவேகமும் விழிப்பும்

கல்லையும் பொடியாக்கும் சுழித்தோடும் நதியுமிங்கே
புல்லை வேரறுக்க முயன்றாலும் முடியாதே

விவேகமற்ற வீரம் மரணத்தையே வரவேற்கும்
விவேகம் இருந்தாலே வினைகளைத் தவிர்த்திடலாம்

வினாக்கள் மட்டுமிங்கே விடைகளைத் தாராதே
விடைகளும் புரிந்திடுமே விழிப்பும் இருந்தாலே

வழியும் தெரிந்திடுமே விடைகள் புரிந்துவிட்டால்
வழியும் உணர்ந்தாலே முழுமையும் பெற்றிடலாம்.


**********

வேகத்தை விட விவேகம் முக்கியம் என்பது பழமொழி. அதை வலியுறுத்தும் விதமாக ஆசிரியர் விளக்கியுள்ள அத்தியாயம் இது. அஞ்சாமல் இருப்பது வீரம். அஞ்சுவது அஞ்சாமை பேதமை. எதற்கு அஞ்சுவது, எதற்கு அஞ்சாமல் இருப்பது என்பதை அறிவதற்கு விவேகம் வேண்டும். வீரத்தோடு விவேகம் சேர்ந்தால் அனைவருக்கும் நலம். இந்த விழிப்பு வந்துவிட்டால் முழுமையை அடைய முடியும் என்று விளக்குகிறார் ஆசிரியர்.

செவ்வாய், ஏப்ரல் 12, 2011

வழி – 72

வழி – 72
பயமில்லா வியப்பு

வலிவுகண்டு பயந்தாலே வலிவில் முழுமையில்லையே
வலிவுகண்டு வியந்தாலே முழுமையிங்கு வந்திடுமே

பயத்தினைத் துணையாக்கி மக்களை ஆளுகையில்
பயந்த மக்களுமே இழப்பாரே பொக்கிஷத்தை

இழப்பதற்கு வேறொன்றும் இல்லையென்ற பொழுதினிலே
இழப்பாரே பயத்தினையே போராடும் மக்களுமே

பயமென்றும் புவியதனில் நிலைத்தேதான் இருக்காதே
பயம்தந்த வீரமிங்கே எதிர்ப்பினிலே துவண்டிடுமே

பயமில்லை மக்களுக்கே வழிபுரிந்தோர் ஆளுகையில்
பயமில்லா ஆட்சியிங்கே எதிர்ப்பதனைக் காணாதே

வழியதனின் சக்தியதில் வலிவுண்டு பயமில்லை
வழியதனின் சக்தியதின் வியப்பினிலே முழுமையுண்டு

முழுமையின் பொருளறிந்த ஆசானும் இதனாலே
தழுவிடுவான் பயமின்றி வியப்பான வழிதனையே.


**********

வலிமையின் வெளிப்பாட்டினால் பயமும் வரலாம்; வியப்பும் வரலாம். அலைகளின் உதவியால் மின்சாரம் தருவிக்கையில் வரும் வியப்பு, அதே அலை சுனாமியாக நாட்டினுள் வரும் பொழுது பயமாகிறது. வீரத்தை வன்முறைக்குத் துணையாக்கி மக்களை பயமுறுத்தி ஆண்ட அனைத்து அரசுகளும் பின்னாளில் எதிர்ப்பால் அழிவையே அடைந்திருக்கின்றன. அதே சமயத்தில் மக்கள் வலிவை வியந்து பார்க்கையில் அந்த வலிவை ஏற்றுக் கொள்வதால் வலிவு காட்டுபவர்களை எதிர்ப்பதில்லை. இந்த வியத்தலே முழுமைக்குக் காரணம் என்று ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.

எழுத்தாளர் பாலகுமாரனின் 'இரும்பு குதிரைகள்' கதையில் வந்த பாடல் நினைப்புக்கு வருகிறது:
"வெறுப்புடன் பிறந்த மாக்கள் பயத்தினைத் துணையாய்க் கொள்ள
விருப்புடன் பிறந்த குதிரை கொம்பில்லை, விஷமுமில்லை"

ஞாயிறு, ஏப்ரல் 10, 2011

'வழி' - 71

'வழி' - 71
அறிவின் வலிவு

அறிவன்றோ வலுவாகும் அறியாமை பிணியாகும்
அறிவிங்கே வந்தாலே அறியாமை விலகிடுமே

அறிவை மறந்தாலே வலுவிங்கே விலகிடுமே
அறியாமை அறிந்தாலே பிணியதனை விலக்கிடலாம்

வழியறிவும் பிணிவலியும் புரிந்த ஆசானும்
பழியில்லா அறிவாலே அறியாமை விலக்கிடுவான்.

அறிவையும் அறிவாலே அறிந்த காரணத்தால்
அறியாமைப் பிணியிவனை எந்நாளும் அருகாதே.


**********

நம் உடலுக்குப் பிணி வந்தால் அதை நீக்க எந்த அளவுக்கு நாம் முயல்கிறோமோ, அந்த அளவுக்கு அறியாமை என்ற பிணியை நீக்கவும் முயல வேண்டும். ‘அறியாமையே ஆனந்தம்’ – Ignorance is Bliss - என்றெண்ணும் மக்களுக்கிடையே, அறியாமையினால் வரும் துயர் புரிந்தவர்கள், அறிவை நாடிச் செல்வர். இதிலே அறிவை நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்தும் நோக்கத்துடன் அறிவைத் தேடிச் செல்பவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர். அறிவையே அறிந்து கொள்வது எளிதன்று; அப்படி அறிந்தவர்களை அறியாமை என்றும் அணுகாது. பத்திரகிரியார் பாடல் நினைவுக்கு வருகிறது:

அறிவுக் கருவியுடன் அவத்தைபடும் பாட்டை எல்லாம்
பிறிவுபட இருத்திப் பெலப்படுவது எக்காலம்?

அறிவை அறிவால் அறிந்தே அறியும் அறிவுதனில்
பிறிவுபட நில்லாமல் பிடிப்பதுஎனி எக்காலம்?

புதன், ஏப்ரல் 06, 2011

வழி - 70

வழி - 70
மூலத்தின் தெளிவு

வழியதனின் வார்த்தைகளின் பொருளுமே புரிந்தாலும்
வழிப்படி நடந்திடுவோர் எண்ணிக்கை குறைவிங்கே

மூலத்தின் வெளிப்பாடே வழியதனின் மொழியினிலே
மூலத்தை மறந்தோர்க்குத் தெளிவிங்கே வாராதே

ஜாலமான வார்த்தைகளில் மயங்குகின்ற மக்களுக்கு
மூலமான வழிமொழியின் மதிப்பிங்கே தெரியாதே

தனமான உடல்காக்கும் உடைகளில் குறைந்தாலும்
மனங்காக்கும் வழியதனால் ஆசானும் நிறைவானே

மூலத்தின் மதிப்பறிந்த ஆசானை இதனாலே
நலமாகப் பற்றிடுவார் வழிநடக்கும் மக்களுமே.


**********

உலகின் பெரும்பான்மையான மதங்களின் போதனைகள் வன்முறையை போதிப்பதில்லை. மற்ற உயிர்களிடத்து அன்பு செலுத்துவதையும், பிறருக்கு துன்பம் தராமல் உதவி செய்வதைப் பற்றியும் கிட்டத்தட்ட அனைத்து மதங்களுமே எளிமையாக எடுத்துரைக்கின்றன. இந்த போதனைகள் புரிந்து கொள்ள எளிமையாக இருந்தாலும், இந்த மதங்களைப் பின்பற்றுபவர்களே இவைகளைக் கடைப்பிடிப்பதில்லை. ஒருவரின் உடைகளைப் பொறுத்து மதிப்பளிப்பதும், வார்த்தை ஜாலங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதையும் இப்போதும் நாம் காணலாம். இந்த குணங்களை சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர் சுட்டிக்காட்டி மூலமான வழியின் சிறப்பை விவரித்திருப்பது ஆச்சரியமான விஷயம்.

ஞாயிறு, ஏப்ரல் 03, 2011

வழி - 69

வழி - 69
போரிடாமல் பெறுவது

போரின் வெற்றி வரவென்றால்
போரில் இழப்பு செலவாகுமே.

செலவுதாண்டிய வரவிங்கே இலாபமென்றால்
செலவில்லாப் போரன்றோ சிறப்பிங்கே?

நஷ்டமுடன் வெற்றியதைப் பெற்றிடவே
இஷ்டமில்லாப் போரதனைச் செய்வதேனோ?

வலியச்சென்று தாக்கிடும் படையுமிங்கே
வலியோடு உயிரிழப்பை அடைந்திடுமே.

இழப்பதனனின் வலியறிந்த வீரருமே
விழிப்புடனே போரதனைத் தவிர்ப்பாரே.

இழப்பதனைத் தவிர்த்த வீரருமே
செழிப்பாரே இதனாலே வாழ்க்கையிலே.

**********

போரின் தீமையை எடுத்துரைக்கும் மற்றுமொரு அத்தியாயம். சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சியாக இதைக் காணலாம். வலியையும், இழப்பையும் நிச்சயமாகத் தரும் போரை விலக்கி வாழ்பவர், வாழ்க்கையில் செழிப்பைப் பெறுவர் என்பதை ஆசிரியர் அழகாக எடுத்துரைக்கிறார். போரிடாமல் பெறுவது என்ற கலையை கற்றுணர வேண்டும் என்பதே ஆசிரியரின் கருத்து.