சனி, ஜூலை 29, 2006

‘வழி’ – 16

16. வேருக்குத் திரும்பிவிடு

அழித்துவிடு மனதினிலே தானெனும் எண்ணமதை
தழுவிவிடு சிந்தையிலே வழிதரும் அமைதியினை

வளர்ந்து ஓடித்திரியும் பூமியின் பொருளெல்லாம்
தளர்ந்து ஒடுங்கிப்பின் பூமியையே வந்தடையும்

வேரினாலே நின்றுயர்ந்த செடியே மரமாகி
வேரிருக்கும் மண்ணையே சேர்ந்துவிடும் உரமாக

வேருக்குத் திரும்புவது இயற்கையின் நியதியாகும்
பேறுதேடித் திரும்புவதே வாழ்க்கையின் நியதியாகும்

வழிதெரிய வேண்டுமே பேறுதேடிப் பெறுவதற்கு
வழியுணர்ந்து கொண்டாலே ஞானமும் வந்திடுமே

பொறுமையும் பெற்றிடுவார் ஞானம் வந்திட்டால்
பொறுமை பெற்றுவிட்டால் சலனங்கள் குறைந்துவிடும்

இயற்கையின் தன்மைவரும் சலனங்கள் இல்லையெனில்
இயற்கையின் தன்மையே பரப்பிரும்ம வழியாகும்

பரப்பிரும்ம வழியுணர்ந்து பற்றற்று இருந்தாலே
நிரந்தரமாய் வாழலாமே நிலையாய் இயற்கைபோலே

பிறந்தும் வாழாது இருக்கும் மனிதருள்ளே
இறந்தும் அழியாது என்றும் இருக்கலாமே!


*******

பிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதி என்பதை விளக்கும் அத்தியாயம். இதைப் படிக்கையில் அழுகணிச்சித்தரின் இந்தப் பாடல் நினைவுக்கு வருகிறது.

"பையூரி லேயிருந்து பாழூரிலே பிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்,
மெய்யூரிற் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா!"

கடுவெளிச் சித்தரின் பாடல் ஒன்றிலும் இந்த அத்தியாயத்தின் 'பற்றற்று இரு' என்ற கருத்தை விளக்குகிறது.

"நீர்மேற் குமிழியிக் காயம் - இது
நில்லாது போய்விடும் நீயறிமாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்
பற்றா திருந்திடப்பண்ணு முபாயம்."

திரு. சிவமுருகன் தன் இணையத்தில் இந்தப் பாடலுக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.


எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இரண்டு தூர தேசங்களில் உணரப்பட்ட தத்துவங்கள் இதனை தூரம் அணைவாக, ஒன்றுக்கொன்று தொடர்பாக இருப்பது ஆச்சரியமாயும், அதிசயமாயும் இருக்கிறது.

சனி, ஜூலை 22, 2006

‘வழி’ - 15

15. வழியறிந்த ஆசான்

வழியறிந்த ஆசானிடம் தெரிபவை எல்லாம்
பழியற்ற புனிதமும், ஆழமான அறிவும்.

உள்ளறிவின் ஆழத்தைப் எடுத்துரைக்க முடியாமல்
வெளியழகின் தன்மையை வர்ணிக்க வருகிறதே

வழுக்கும் தரையில் நடக்கின்ற கவனம்
சூழ்ந்திருக்கும் அபாயத்தை உணர்ந்த விழிப்பு

முறையான விருந்தினரின் இதமான கௌரவம்
குறையில்லா பனியின் இளகும் மென்மை

செதுக்காத மரத்தின் திடமான கம்பீரம்
ஒதுக்காமல் ஏற்கும் மனதின் தாராளம்

ஆசையின்றி மனது வெற்றிடம் ஆனதாலே
காசையோ பொருளையோ அவன் தேடுவதில்லையே

குழம்பிய தண்ணீரும் சலனமற்று நின்றாலே
குழந்தையின் உள்ளம்போல் தெளிவாகித் தோன்றுமே

சலனமற்ற மனத்தால் உலகத்தை பார்ப்பதாலே
நலமாக ஆசானும் தெளிவைத் தருவானே!


**********

இந்த அத்தியாயத்தில் பரப்பிரும்ம வழி தெரிந்த ஒருவரின் தன்மையை விவரிக்கிறார். உள்ளே இருக்கும் மனத்தின் அழகை, ஆழத்தை வர்ணிப்பது கடினம். புற அழகை, தன்மையை விளக்குவது எளிது. இங்கு விழிப்பு கலந்த கவனத்தையும், மென்மை பொருந்திய கௌரவத்தையும், கம்பீரத்தையும், தாராள மனப்பான்மையும் விவரிக்கிறார்.

ஆசைகளில்லாத வெற்றிடமாய் இருக்கும் மனதின் மேன்மையையும் சுட்டிக் காட்டுகிறார். மனதில் தோன்றும் சலனங்களே குழப்பத்திற்கு காரணம் என்பதையும், எப்படி குழம்பிய தண்ணீரும் சலனமில்லாமல் இருந்தால் தெளிவாத் தெரிகிறது என்பதோடு ஒப்பிட்டு, சலனமில்லாமல் பார்ப்பதாலேயே ஆசான் தெளிவைத் தருகிறான் என்றும் விளக்குகிறார்.

சனி, ஜூலை 15, 2006

‘வழி’ - 14

14. புதிர்

பார்த்தாலும் தெரியாத உருவமது
பார்வையையும் தாண்டிய அரூபமது

செவிக்குக் கேட்காத ஒலியதுவே
செவிப்புலனைத் தாண்டிய ஓசையது

புலன்கள் தொட்டாலும் புரியாது
புலன்களைத் தாண்டிய புதிரதுவே

விளக்க முடியாத விளக்கமதே
விளக்கங்கள் தாண்டிய விடையதுவே

நிறைந்து உதித்ததால் வெளிச்சமில்லை
மறைந்து ஒளிந்தாலும் இருட்டுமில்லை

உதித்தலும் மறைதலும் தெரிந்தபோதும்
மதிக்கு விளங்காத நிகழ்வதுவே

பின்தொடர முடிவில்லா வழியதுவே
கண்பார்க்க முகமில்லா வடிவதுவே

இன்நாளின் கடமைகளை முடிப்பதாலே
முன்வினைக் கடன்களைத் தீர்ப்பாயே

செவ்வழி சுழற்சியின் தத்துவத்தை
இவ்விதமாய் நீயும்தான் அறிவாயே!


***********

அறிந்து கொள்வது, அல்லது புரிந்து கொள்வது என்பது நம் புலன்களாலும், அறிவாலும் வருவது. இந்தப் புலன்களுக்கு ஒரு எல்லை உண்டு; அந்த எல்லையைத் தாண்டி இருப்பது உணர்வதற்கு வேறு சாதனங்களைத் தான் உபயோகிக்க வேண்டும் (உதாரணம்: கண்ணால் பார்க்க முடியாத ஒளியலைக்கு, ரேடியோ டெலஸ்கோப் உபயோகிப்பது போல). புரிந்து கொள்வதற்கு அறிவு நிச்சயம் வேண்டும். அதற்கும் எல்லை வந்து விடுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது: "இதுவரை தெரிந்து கொண்டதால் வந்த அறிவு எழுப்பும் கேள்விகளுக்கு, இதுவரை பெற்ற அறிவு பதில் சொல்லாது". [We cannot solve our problems with the same thinking we used when we created them.]


பரப்பிரும்ம சக்தி பற்றி நான்காவது அத்தியாயத்தில் விவரித்திருக்கிறார். இங்கு அந்த சக்தியின் வீர்யத்தை விவரிப்பதோடு, இன்று ஏன் நம் கடமைகளை செவ்வனே செய்ய வேண்டும் என்றும் எடுத்துரைக்கிறார். கவிஞர் கண்ணதாசனின் திரைப்பாடல் நினைவுக்கு வருகிறது:
"நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு
அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று" (படம்: அபூர்வ ராகங்கள்).

தம் கடமைகளை செய்வதன் மூலம் ஒருவர் பரப்பிரும்ம வழியைப் புரிந்து கொள்ள முடியும்; கடமைகளை மறந்து பரப்பிரும்ம வழியைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மட்டும் முயன்றால் முடியாது என்று கருத்து வருகிறது. பஜகோவிந்தத்தில் இது போன்ற கருத்தை ஆதிசங்கரர் விளக்குகிறார் - கோவிந்தனை அடைவது பற்றி.

சனி, ஜூலை 08, 2006

‘வழி’ - 13

13. புகழ்ச்சியும் இகழ்ச்சியும்

புகழ்ச்சியைத் தேடியே கழித்திடும் பொழுதெல்லாம்
இகழ்ச்சியை நாடியே போவதற்கு ஒப்பாகும்

வந்தடையும் இகழ்ச்சியால் மனத்தில் கவலை
வந்தது வரக் கூடாதென்னும் நினைப்பினால்

வந்தடையும் புகழ்ச்சியாலும் மனத்தில் கவலை
வந்தது விலகக் கூடாதென்னும் பயத்தினால்

மனத்திருந்து போகாது கவலையும் பயமும்
மனத்திலே ‘நான்’என்னும் நினைப்புள்ள வரையிலும்

வெற்றியும் தோல்வியும் தாக்காது இருக்குமே
பற்றற்று திட்டமாய் நிற்கும் மனத்திலே

உலகின் மதிப்பை தன்னிடம் பார்ப்பவருக்கு
உலகை நடத்தும் பொறுப்பினைத் தரலாம்

உலகைத் தன்னுயிராய் அன்புடன் பார்த்தாலே
உலகையே நலமாகப் பேணத் தரலாமே.


****************

இன்பம் என்று ஒன்றிருந்தால் துன்பம் என்பதும் உண்டு என்பதை விளக்குகிறார். வெற்றியைத் தேடுபவன் தோல்விக்கு பயப்படக் கூடாது என்று சொல்லுவார்கள். புகழும், இகழ்ச்சியும் - இரண்டுமே கவலைக்குக் காரணம்; ஆகையால் புகழ்ச்சியைத் தேடிச் செல்வது விரயம் என்று உணர்த்துகிறார்.

இன்னுமொரு கருத்தையும் இங்கு அழகாக விளக்குகிறார். மதிப்போடு பார்ப்பது - அன்போடு நேசிப்பது, இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம். உலகத்தை மதிப்போடு பார்ப்பவருக்கு நிர்வாகப் பொறுப்பைத் தரலாம் என்றும், அன்போடு உயிரைப் போல நேசிப்பவருக்கு உலகையே தரலாம் என்று சொல்கிறார்.

சிறு வயதில் இந்தக் கருத்தை விளக்கும் ஒரு கதையைக் கேட்டிருக்கிறேன். வயதான செல்வந்தரான தந்தைக்கு இரண்டு மகன்கள். யாருக்கு நிலத்தையும், யாருக்கு வர்த்தகத் தொழில் சம்பந்தமான சொத்துக்களையும் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுக்க, தான தருமங்களில் ஈடுபாடு கொண்ட மூத்தவனுக்கு விவசாயம் சம்பந்தமான நிலம் மற்றும் இதர சொத்துக்களையும், பொருள்களின் மதிப்பு தெரிந்து நடக்கும் இரண்டாம் மகனுக்கு, வியாபார சொத்துக்களையும் தருவதாக முடிவெடுத்ததாகக் கதையில் வரும். கிட்டத்தட்ட அதே கருத்துதான் இங்கே.

சனி, ஜூலை 01, 2006

‘வழி’ - 12

12. புலன்களும் அகமும்

கண்ணுக்கு குளிர்வு வானவில்லின் வண்ணங்கள்
கண்ணே குருடாகும் வீரியமான ஒளியாலே

காதுக்கு இனிமை முறையான ஒலியாலே
காதை செவிடாக்கும் வரைகடந்த பேரோசை

ருசித்திருக்கும் வாயும் வளமோடு அறுசுவையை
கசந்திடுமே நாவும் அளவுகடந்து போனாலே

விரட்டி வேட்டையாடி பெற்ற உணவும்
நிரப்பாமல் போகும் உந்தன் மதிதனை

திரட்டிச் சேர்த்த விலையற்ற சொத்தும்
வரண்டேபோகும் உன்னைக் காக்க மறுத்தே

புலன்களின் தேவை புரிந்த அறிஞன்
பலமோடு வாழ அகத்தைப் பேணுகிறான்

மூலத்தின் ரகசியம் தெரிந்து கொண்டதனால்
நலமோடு வாழ புலன்களை அடக்குகிறான்.


*********

இரண்டு கருத்துகள் இந்த அத்தியாத்தில். 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்ந்தமும் நஞ்சு' என்ற பழமொழிக்கு விளக்கம் போல் புலன்களுக்கு இதம் தரும் பொருட்களே அளவு கடந்தால் புலன்களை கெடுத்துவிடும் என்பதை விளக்கியதோடு மட்டுமல்லாமல், அந்தப் புலன்களை அடக்கியாளும் மனத்தை அடக்குவது முக்கியம் என்பதையும் அழகாக உரைக்கிறார்.

புலன்களின் பசி தீர அவைகளுக்கு தீனி போட்டு மட்டும் முடியாது. அவற்றின் பசியை அறவே அகற்ற அகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அகம் புலன்களின் தேவைகளின் மூலம்; புலன்களைத் தூண்டுவதும், கட்டுப்படுத்துவதும் அகத்திடம் உள்ளது.

விநாயகருக்கு வாகனமாக சுண்டெலி இருப்பதற்கும் இது போன்ற ஒரு தத்துவம் உண்டு. உடலுக்கு யானையைப் போல பலம் இருந்தாலும், அளவில் சுண்டெலியை ஒத்த மனத்தைக் கட்டுப் படுத்தாவிட்டால், யானைக்கும் திண்டாட்டம் தான், என்பதைக் குறிக்கவே யானை உருவமான விநாயகர் சுண்டெலியை கட்டுப்படுத்தி வாகனமாகக் கொண்டார் என்று கூறுவார்கள்.

மனதின் முக்கியத்துவம், திருவள்ளுவரின் இந்தக் குறளிலில் இருந்து தெரிகிறது:
"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீற பிற." (34)