சனி, ஏப்ரல் 29, 2006

'வழி' - 3

3. அறிந்தவர் ஆட்சி

உள்ளவரைப் புகழாததால் இல்லாதவருக்குப் பொறாமையில்லை
பொருட்களைச் சேர்க்காததால் திருடுவதற்கு தூண்டுதலில்லை
ஆசைப்பட்டுப் பார்க்காததால் மனதிலே குழப்பமுமில்லை

ஆதலினால் அறிந்தவர் மக்களை ஆளுகையில்

இதயத்தை வெற்றிடமாக்க ஆசையை நீக்குகிறார்
பசியை நீக்கி வயிற்றை நிரப்புகிறார்.
ஆசையை பலவீனமாக்கி ஆரோக்கியத்தை போதிக்கிறார்

ஆசையும் பொறாமையும் மனதிலே இல்லையென்றால்
வஞ்சகரின் வலையிலே விழுந்துவிட வாய்ப்பில்லை
தூண்டுதல் இல்லையெனில் துன்பங்கள் வாராது.


*************

கௌதம புத்தரின் முக்கியமான போதனை "ஆசையே அழிவுக்குக் காரணம்". இந்த அடிப்படைத் தத்துவத்தை விவரிக்கும் விதமாக இந்தப் பாடல் அமைந்திருக்கிறது. ஆட்சி நடத்துபவர் எதை முன்னிறுத்தவேண்டும் என்பது போல எழுதப்பட்டிருந்தாலும், எல்லொருக்கும் பொருந்துமாறு இருக்கிறது.

மாணிக்கவாசகரின் 'உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்';
தொண்டரடிப்பொடியாழ்வாரின் 'இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும், அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே';
பாரதியாரின் 'நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்;
அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்; உடைமை வேண்டேன்,உன்துணை வேண்டினேன்' (விநாயகர் நான்மணிமாலை) எல்லாம் நினைவுக்கு வருகிறது.

சமீபத்தில் படித்த வைரமுத்துவின் 'ஆசை துறந்த புத்தர் கூட துறவியாக ஆசைப்பட்டார்; துறந்தபிறகும் ஆசை அவரை விட்டுவைக்கவில்லையே!' பாடலும் ஞாபகத்திற்கு வருகிறது.

வெள்ளி, ஏப்ரல் 21, 2006

'வழி' - 2

2 முரண்பாட்டு நியதி

இங்கே
அழகு அழகாகிறது - அழகின்மை இருப்பதினால்
நல்லது நல்லதாகிறது - தீமை இருப்பதினால்

இருப்பதும் இல்லாததும் சேர்ந்தே இருக்கிறது
கடினமும் சுலபமும் ஒன்றையொன்று சமனாக்குகிறது

நீளமும் குட்டையும் ஒன்றையொன்று வேறுபடுத்துகிறது
மேலும் கீழும் ஒன்றையொன்று தாங்குகிறது

குரலும் ஓசையும் ஒன்றையொன்று பொருத்துகிறது
முன்னும் பின்னும் ஒன்றையொன்று தொடர்கிறது

இந்த
முரண்பாட்டு நியதியைப் புரிந்த அறிஞன்
செய்யாமல் செய்கிறான் சொல்லாமல் தெளிவிக்கிறான்

பற்றற்று பணிபுரியும் பக்குவம் பெற்றதனால்

உயர்வும் தாழ்வும் அவனைத் தொடுவதில்லை
உயிரைக் கொடுத்தாலுமவன் சொந்தம் கொண்டாடுவதில்லை

புகழைத் தேடி பணிசெய்யாத காரணத்தால்
புகழே நாடியவனை விட்டுப் பிரிவதில்லை.


***********

எதிர்மறை விளைவுகள் எதிலும் உள்ளன. பிறப்பு என்று ஒன்றிருந்தால் இறப்பும் நிச்சயம். வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தியினாலும் அதன் திரியில் உள்ள இருட்டை நீக்க முடியவில்லை. கீதையில் வரும் 'கடமையைச் செய் பலனை எதிர்பாராதே' என்ற கருத்தும், பஜகோவிந்ததில் வரும் 'புனரபி ஜனனம், புனரபி மரணம்' என்ற கருத்தையும் இந்த அத்தியாத்தில் பார்க்கலாம். பஜகோவிந்தத்தின் பொருளை விளக்கும் குமரனின் இணையப் பக்கம் இங்கே.

சனி, ஏப்ரல் 15, 2006

'வழி' - 1

1 பரப்பிரும்மம்

சொல்லால் விளங்குவதல்ல எங்குமிருக்கும் பரப்பிரம்மம்
சொல்லால் பெயரிடப்பட்டதல்ல என்றுமிருக்கும் பரப்பிரம்மம்

பெயரில்லாததே இவ்வுலகிற்கும் சொர்க்கத்திற்கும் காரணம்
பெயரிடப்பட்டது இவ்வுலகப் பொருட்களுக்குக் காரணம்

பற்றில்லாதவர் பிரபஞ்சத்தின் இரகசியம் அறியலாம்
பற்றுள்ளவர் மாயையின் விளையாட்டைக் காணலாம்

விளைவு இரண்டானாலும் மூலம் ஒன்றே
விளக்கம் அறிய, வேண்டியது வெளிச்சம்.

மதியால் ஊகிக்க முடியாத புதிர்
புதிருக்குள் புதிர் – ரகசியங்களின் கதவு!


'வரைபடம் நிலப்பரப்பல்ல' என்றார் ஒரு அறிஞர். [Alford Korzybski: “Map is not the territory”]. அதே போலத்தான் லாவோ -ட்ஸே இங்கே பரப்பிரும்மத்தை - 'தாவோ'வை வர்ணிக்கிறார். இந்து தத்துவத்தில் (சங்க்யா), 'புருஷா' என்பது 'அறிவது' என்பதையும், 'பிரக்ருதி' என்பது புலன்கள் உணர்த்தும் பொருள்கள் என்பதையும் குறிக்கும் என்பார்கள். (விபரங்களுக்கு இங்கே). இரண்டுக்கும் மூலமாக 'ஈஸ்வரா' என்கிற 'ப்ராமண்' என்றும் சங்க்யா முறையில் விவரிக்கிறார்கள். இந்த மூலம் பற்றிய புதிரைத்தான் லாவோ -ட்ஸே இங்கு குறிப்பிடுகிறார்.

வெள்ளி, ஏப்ரல் 14, 2006

தாவோ டெ சிங் - முன்னுரை

பள்ளியில் படிக்கும் போது முதன் முறையாக 'ஸென்' புத்த கதைகளைப் பற்றித் தெரிந்து கொண்டேன். பின்பு கல்லூரியில் படிக்கும் போது 'தத்துவங்களை'ப் படிக்கும் ஆர்வம் அதிகரித்தது. லாவோ -ட்ஸேயின் புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை படித்ததும், அந்த தத்துவம் ‘ஒரு மாதிரி புரிந்தும் புரியாமல் இருக்கிறதே’ என்று தோன்றியது. வருடங்கள் செல்லச் செல்ல இந்த தத்துவார்த்தமான எழுத்துக்களைப் புரிந்து கொள்வது, நம்முடைய அனுபவத்தையும், வளர்ச்சியையும் பொறுத்துத்தான் என்று புரிந்தது. இந்தப் புத்தகத்தின் தலைப்பு தாவோ டெ சிங் - வழியும் அதன் மேன்மையும் என்று பொருள் வரும். சுருக்கமாக 'வழி' என்றே இங்கு குறிப்பிடுகிறேன்.

முக்கியமாக 'வழி' தத்துவத்தைப் புரிந்து கொள்ள மூன்று முக்கியத் தடைகள். முதலாவது மொழிப் பிரச்சனை. எனக்கு சீன மொழி தெரியாது - படித்ததெல்லாம் ஆங்கில மொழிபெயர்ப்புகள் தான். இரண்டாவது, சீன கலாச்சாரம், முக்கியமாக லாவோ -ட்ஸே வாழ்ந்த காலத்து கலாச்சாரம், தெரியாது. மூன்றாவது என் அனுபவ, அறிவுப் பற்றாக்குறை. இந்த மூன்று தடைகளும் இன்றும் எனக்கு இருக்கிறது; ஆனால் 15 வருடங்களுக்கு முன்பு இருந்த அளவுக்கு இல்லை.

இன்றைக்கும் சீன மொழி தெரியாது; அதை சமாளிக்க கிட்டத்தட்ட பனிரெண்டு அல்லது பதினைந்து மொழிபெயர்ப்புகளைப் படித்திருப்பேன். சீன கலாச்சாரத்தைப் பற்றி முன்பிருந்ததை விட கொஞ்சம் அதிகம் தெரியும். அனுபவங்களும் அதிகம் - அறிவும் வளர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்.

இந்தத் தத்துவங்களைப் புரிந்து கொள்ள இன்னுமொரு வழி – இது பற்றித் தெரிந்தவர்களோடு பேசுவது தான். கருத்துப் பறிமாற்றத்திற்கு இன்னாளில் இணையத்தை விட சுலபமான வழி உண்டா என்ன? அதோடு தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம். ஆகவேதான் இந்த முயற்சி. நான் புரிந்து கொண்ட 'வழி' தத்துவத்தை தமிழில் தர எண்ணம் - இணையத்தில்.

இது ஒரு மொழிபெயர்ப்பு என்று சொல்ல தயக்கம் - மூல மொழியே தெரியாத போது எப்படி மொழிபெயர்க்க முடியும்? நான் படித்த ஆங்கில மொழிபெயர்ப்புகளை, பதிவுகளை தந்திருக்கிறேன். தமிழில், கொஞ்சம் வசனம் கலந்து எழுதிய கவிதைகள் (திருவிளையாடலில் தருமி சொன்னது போல: 'கொஞ்சம் வசன நடையிலே' எழுதியிருக்கிறேன்) - எனக்குப் புரிந்த, 'வழி'! மொத்தம் 81 அத்தியாயங்கள் - வாரம் ஒன்றாக, பிரதி சனிக்கிழமை தோறும். அத்தோடு அந்தத் தத்துவங்களை ஒத்த கருத்துகள் எனக்கு தெரிந்த இந்து மத நூல்களில் இருந்து.

உங்கள் கருத்துக்களையும் குறிப்புகளையும் எதிர் பார்க்கிறேன்; அவை 'வழியை' இன்னும் புரிந்து கொள்ள உதவும் என்ற ஆர்வத்தோடு. முதல் பதிவு நாளை - சித்திரை இரண்டாம் நாள் - பதிய எண்ணம்.

லாவோ -ட்ஸே பற்றி நிறைய எழுதலாம். கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பிறந்த அவரைப் பற்றி நிறைய புத்தகங்கள் வந்திருக்கின்றன, இணையத்திலும் விஷயங்கள் உண்டு. மாதிரிக்கு ஒரு இணையம். 'வழி' முடிந்தவுடன் அவரைப் பற்றி ஒரு பதிவு எழுத எண்ணம்.

அன்புடன்,
ரங்கா.