சனி, செப்டம்பர் 30, 2006

'வழி' - 25

25. மூல வழி

வானும் மண்ணும் தோன்றும் முன்னாலே
நானும் நீயும் பிறப்பதற்கு முன்னாலே

விந்தையாய் உள்ளுமாய் புறமுமாய் மாறாமல்
தந்தையாய் அனைத்திற்கும் இருந்ததே ஓர்சக்தி

பெயரேதும் இல்லாமல் வழிகாட்டி இருந்தமையால்
தாயானா சக்தியதை 'வழி'யென்றே அழைத்தேனே

மூலமாய் இருப்பதானால் முதலுமில்லை முடிவுமில்லை
மூலமாய் வந்தெங்கும் முழுமையாய் வியாபித்ததே

வானும் மண்ணும் வந்ததிங்கே 'வழி'யினாலே
தானும் பெற்றதுவே மூலத்தின் தன்மையதை

விண்ணாகவும் மண்ணாகவும் வெளிப்பட்ட 'வழி'தானே
பெண்ணாகவும் ஆணாகவும் மண்ணிலே தோன்றியதே

மூலமான சக்தியதின் வெளிப்பாடு அறிந்ததனால்
பலமான ஆசானும் 'வழி'யொற்றி நடக்கின்றான்.



*********


இந்த அத்தியாயத்தில் எல்லாவற்றிற்கும் மூலமான சக்தியை - 'வழி'யைப் பற்றி விளக்குகிறார். ஸ்ரீ ஆதி சங்கரரின் நிர்வாண மஞ்சரி ஸ்லோகங்கள் இதே போன்று பரப்பிரும்ம சக்தியைப் பற்றி விவரிக்கிறது. திரு ஸ்ரீகாந்தின் பக்தியோகம் பதிவில் 'யானாகிய சிவம்' தலைப்பில் இதைப் பற்றி விரிவாகப் படிக்கலாம்.

சனி, செப்டம்பர் 23, 2006

'வழி' – 24

24. விலக்க வேண்டியவை

நிலைதவறிப் போய்விடுமே நுனிக்காலில் நின்றாலே
தொலைதூர ஓட்டத்திற்கு வேகம்மட்டும் போதாதே

கற்றவர் மதித்திடவே ஆணவம் தடையாகுமே
மற்றவர் புகழ்ந்திடவே தம்பட்டம் உதவாதே

தற்பெருமை பேசுவோர்க்கு பெருமை சேராதே
பெற்றோரும் இகழ்வாரே தன்மானம் இழந்தாலே

வீணாக்கிடுமே இக்குணங்கள் மக்களின் சக்தியதை
வீணாகிப்போன உணவே விஷமாவது போலே

விலக்கிடுவான் சக்தியினை விரயமாக்கும் குணங்களையே
பலமான வழியறிந்த ஆசானும் இதனாலே!


********

நல்ல குணங்களை வளர்க்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதே போல தீய குணங்களை விலக்குவதும் முக்கியம். பதினொன்றாவது அத்தியாயத்தில் சொன்னதை ஒத்து இந்த அத்தியாயத்தில், விலக்க வேண்டிய குணங்களை பற்றி எழுதியிருக்கிறார். இந்த மாதிரி குணங்கள் நம்முடைய சக்தியை விரயம் செய்து விடும். சக்தி விரயமானால், செய்ய வேண்டிய கடமைகளையோ, அல்லது வளர்க்க வேண்டிய குணங்களையோ செய்வது குறைந்து விடும். ஆதலால் இது போன்ற விலக்க வேண்டிய குணங்களால் வரும் நஷ்டம் இரட்டிப்பாகிறது.

இது போன்ற கருத்தை திரு ஜேசுதாஸ் பாடிய ஒரு பாடலில் கேட்டிருக்கிறேன் - "நல்லதை நினை மனமே, வீணாய் பொல்லாததை நினையாதே" என்று ஆரம்பிக்கும் பாடல்.

சனி, செப்டம்பர் 16, 2006

‘வழி' – 23

23. இயற்கையின் மௌனம்

அடை மழையும் ஊழிக் காற்றும்
இடை விடாது இருப்பது இல்லையே

இயற்கையின் இப்பேச்சின் இடைவெளி தானே
இயல்பான வாழ்விற்கு காரணம் ஆனது.

நலம்தரும் இயற்கையின் மௌனம் தெரிந்தும்
ஓலமிட்டு மனிதர்கள் பேசுவதும் ஏனோ?

வழியோடு வாழ்ந்தாலே பழியேதும் வாராதே
'வழி'யோடு ஒன்றாகி வழிகாட்டி ஆகிடலாம்.


*********

'நிறை குடம் தளும்பாது' என்னும் பழமொழியை நினைவு படுத்தும் அத்தியாயம். எல்லாம் வல்ல இயற்கையே மௌனத்தை கடைபிடிக்கும் போது, இயற்கையின் விளைவுகளின் ஒன்றான மனிதன் மட்டும் நிரம்பப் பேசுவது ஏனோ? இயற்கையை ஒன்றி வாழ்வது - 'வழி'யை ஒத்து வாழ்வதைப் போன்றது. இயற்கையின் மௌனத்தில் வளம் பெருகுவது போல, மனிதனின் மௌனத்திலும் வளம் பெருகும் என்று அழகாக விளக்கியிருக்கிறார்.

சனி, செப்டம்பர் 09, 2006

'வழி' - 22

22. விட்டுக் கொடு

விட்டுக்கொடு; அதனால் வெற்றி கொள்ளலாம்.
வளைந்துகொடு; அதனால் நிமிர்ந்து நிற்கலாம்.

வெறுமையோடிரு; அதனால் நிறைவு அடையலாம்.
களைத்துப்போ; அதனால் புத்துணர்வு அடையலாம்.

குறைவாக வைத்துக்கொள்; பெறுவது அதிகம்
அதிகம் வைத்திருந்தால் குழப்பமே மிஞ்சும்

கற்றவர் இதனால் அவனைத் தேடுகிறார்
மற்றவருக்கு எடுத்துக் காட்டாய் இருக்கிறார்.

பட்டுத் தெரிந்த முன்னோர் சொன்னது:
"விட்டுக்கொடு; அதனால் வெற்றி கொள்ளலாம்."

முழுமை அடைந்திட மனதை வெற்றிடமாக்கிவிடு
முழுமை அடைந்திட்டால் உலகமே உனதாகுமே.



********


இந்த அத்தியாயத்தில் வாழ்க்கை சுழற்சியென்பதையும், அதனால் போட்டி மனப்பான்மையின்றி விட்டுக் கொடுக்கும் தன்மையே நிரந்தர வெற்றிக்கு ஏதுவாகும் என்றும் விளக்குகிறார். தமிழில் இல்லற இலக்கணங்களை எடுத்துரைக்கும் போது கூறப்படும் ஒரு சொல்: "ஊடலில் தோற்றவரே வென்றவராவார்". ஆசான் உலகம் அனைத்தையும் பரப்பிரும்ம சக்தியின் வடிவாகப் பார்க்கும் போது, ஒருவொருக்கொருவர் போட்டியும், பொறாமையும் பாராட்டுவது அவருக்கு வியப்பாகவும், நகைப்பாகவும் இருக்கிறது.

பைபிளிலும் இது போன்று ஒரு வாசகம் வருகிறது என்று நண்பர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்: "அடுத்தவரை நேசி" [Love thy neighbor]. இதில் அடுத்தவர் என்று குறிப்பிடப்படுபவர் உலகத்தில் உள்ள அனைவரையும் குறிக்கும். உலகம் முழுவதிலும் உள்ளவரை நேசி என்பதே அதன் பொருள். ஒருவரை நேசித்துவிட்டால், அவரோடு போட்டி போடத் தோன்றாது, பொறாமையும் வராது. பொறாமை இல்லையென்றால் சண்டையோ, தோல்வியோ இல்லை. அதனாலேயே இந்த வாக்கியம் முக்கியத்துவம் பெறுகிறது: "விட்டுக் கொடு; அதனால் வெற்றி கொள்ளலாம்".

விட்டுக் கொடுப்பதை தோல்வியாகக் கருதுவோருக்கு, விட்டுக் கொடுப்பதால் வெற்றி என்று சொல்வது எதிர்மறையாகத் தோன்றலாம். இது போன்று எதிர்மறை எடுத்துக் காட்டுகளை திருக்குறளிலும் காணலாம். உதாரணமாக:
செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என். – [அறத்துப்பால் - வெகுளாமை 301]

சனி, செப்டம்பர் 02, 2006

'வழி' - 21

21. பரப்பிரும்ம சக்தியின் வடிவங்கள்

பரப்பிரும்ம வழியைப் பற்றிவிட்டாலே
பிரபஞ்சத்தின் மூலத்தை அடைந்திடலாமே

உருவமில்லா பிரம்மத்தின் துணையில்லாமல்
உருவங்கள் பிரபஞ்சத்தில் வரமுடியாதே

கண்ணுக்குத் தெரியாமல் ஒளிந்திருந்தாலும்
கண்ணில் தெரிபவையில் வெளிப்படுகிறதே

அசையாமல் என்றும் நிலைத்திருந்தாலும்
அசைவின் சக்தியாய் நிறைந்திருக்கிறதே

பெயரில்லா பரப்பிரும்ம சக்தியினாலே
பெயருள்ள அனைத்துமே தோன்றியதே

விந்தையான உலகின் வடிவங்களிலே
தந்தையான சக்தியின் வலிவறிந்தேனே.


***********

இந்த அத்தியாயத்தில் மூல சக்தியின் பரிமாணங்களை விளக்குகிறார். கொஞ்ச நாள் படித்த ஒரு உபநிஷத புத்தக விளக்கத்திலிருந்து (சர் அரபிந்தோ) ஒரு பாடல் இந்த அத்தியாயத்தோடு பொருந்தி வருகிறது.

अनेजदॆक् मनसो जवीयो नैनध्वॆवा आप्नुवन् पूर्व्मष्थ् |
थध्दवथोन्यानतयॆति तिश्टत् तस्मिन्न्पॊ माथ‌रिश्वा द‌धाति
Isha Upanishad – 4

அரவிந்தரின் மொழிபெயர்ப்பில் இந்த இஷா உபநிஷதப் பாடலுக்கு, இந்த மாதிரி விளக்கம் வருகிறது.

"எது நகராமலிருந்தாலும், மனோவேகத்தை விட வேகமாயும், தேவர்களாலும் அணுக முடியாமல் எப்போதும் முன்னே செல்வதாகவும், நின்று கொண்டிருக்கையிலேயே ஓடுபவை அனைத்தையும் கடந்து செல்வதாகவும் இருக்கிறதோ, அதுவே சகல உயிர்களுக்கும் மூலமாக இருக்கிறது"

எனக்கு தேவநாகரி எழுத்தில் தட்டச்சு செய்து பழக்கம் இல்லாததால், அதில் பிழைகள் இருக்கலாம். அதே போல அரவிந்தரின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒரு பெரிய புத்தகம் - சுருக்கமாக தமிழில் மொழிபெயர்த்ததிலும், சாரம் கொஞ்சம் குறைந்து இருக்கலாம். இருந்தும், மூல விளக்கம் பொருந்தியே இருக்கிறது.