சனி, ஆகஸ்ட் 26, 2006

'வழி' - 20

20. ஞானத்தைத் தேடு

ஞானம் பெற்றவர் அறிந்து சொன்னது
'ஞானம் கல்விதரும் பட்டங்களில் இல்லை'!

‘ஆமாம்-இல்லை’ இலக்கணம் விளக்கும் கல்வி
‘ஆமாம்-இல்லை' பொருள் உணர்த்தும் ஞானம்

வாழ்வில் மக்களுக்கு மகிழ்ச்சியும் உண்டு
வாழ்வில் மக்களுக்கு பயமும் உண்டு

மக்களை மகிழ்விப்பவை ஆசானைத் தொடுவதில்லை
மக்களின் பயங்கள் ஆசானைத் தீண்டுவதில்லை

மலையைத் தழுவிவரும் மேகத்தின் பயணம்போல்
நிலையாக நில்லாமல் ஆசானும் பயணிப்பான்

குழந்தை உள்ளத்தின் எளிமை பெற்றதனால்
குழந்தை போல் குறைவாகவே பேசுகின்றானே

தேவைதாண்டி பொருட்கள் பெற்றவரின் எண்ணத்தில்
தேவைகுறைத்த ஆசானும் ஏழையாகத் தெரிவானே

இலக்கணமே பொருளறிய ஆதாரம் ஆகுமென்று
இலக்காக இலக்கணத்தை தேடும் மக்களுக்கு

நிரம்பிய ஞானமுடன் ஆசானும் சொல்வானே:
'பரப்பிரும்ம வழியுணர இவையிரண்டும் தடையாகுமே'


*********

இதற்கு முதல் அத்தியாத்தில் தந்த கருத்தினை ஒட்டி, அதை வலியுறுத்தும் விதமாக அமைந்திருக்கிறது இந்த அத்தியாயம். இலக்கையும், அதனையடையும் வழியையும் குழப்பிக் கொள்வது எளிது; அதிகமானோர் குழம்பித்தான் இருக்கிறார்கள் - நான் உட்பட.

ஆங்கிலத்தில் மேற்கோளாக ஒரு வாக்கியம் உண்டு: வரைபடம் நிலப் பரப்பல்ல! – Map is not the territory!

எப்படி கட்டிடம் கட்ட சாரம் உதவியாக இருந்தாலும், கட்டி முடித்த பின் சாரத்தை வைத்திருப்பதில்லையோ, அது போல மொழியை சரியாக உபயோகிக்க இலக்கணம் உதவினாலும், உணர்ச்சிகளையும், முக்கியமாக ஞானத்தையும், விவரிக்க சமயத்தில் இந்த இலக்கணங்களும் தடையாகிவிடும் என்பதை எடுத்துக் காட்டி, இந்த அத்தியாயத்தில் எப்படி செயற்கையாக நாமே இயற்றிக் கொள்ளும் சட்ட திட்டங்கள் பரப்பிரும்ம வழியை உணர தடையாக இருக்கிறது என்பதை உணர்த்தியிருக்கிறார்.

சனி, ஆகஸ்ட் 19, 2006

‘வழி’ -19

19. எளிமை

அறிவைத் தராத பட்டங்களையும்
செறிவைத் தராத ஞானத்தையும்

அறவே ஒதுக்கி விலக்கினால்
பெறுவாரே நலமும் மக்களுமே

மதியோடு அன்பை உணர்ந்தோருக்கு
நீதியை கற்கத் தேவையில்லையே

ஏய்ப்பும் பேராசையும் குறைந்தாலே
பொய்யும் திருட்டும் மறைந்திடுமே

இவைகளை உள்ளத்தில் நிறுத்தினாலே
சுவையாய் வாழ்க்கை அமைந்திடுமே

வாழ்க்கை இனிதாய் அமைந்தாலும்
முழுமை பெற்றிட முடியாது

முழுமை இங்கு அடைந்திடவே
வழியை தழுவியே வாழ்ந்திடணும்

உள்ளத்தில் வழியும் தெரிவதற்கே
எளிமையை வாழ்விலே பெற்றிடணும்

தன்னலம் அறவே ஒதுக்கியே
மனதில் பற்றை நீக்கினாலே

இயற்கையின் தன்மை வந்திடுமே
உயர்வாய் எளிமை அடைந்திடலாம்


*******

படித்தால் மட்டும் போதுமா? என்ற கேள்விக்கு விடை தருவது போல ஆரம்பிக்கும் இந்த அத்தியாயத்தில், எளிமையின் வலிமையை விளக்குகிறார். 'ஒரு மனிதன் முழுமையடைய தேவையானவைகளில் அறிவும் ஒன்று. அந்த அறிவைப் பெற கல்விச் சாலைகள் உதவலாம் - கல்விச் சாலைகள் தரும் பட்டங்களில் தான் அந்த அறிவு இருக்கின்றது என்று நினைப்பது தவறு; இயல்பாக வர வேண்டிய குணங்களை, இயற்கையைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்' என்று பொருள் வருமாறு எழுதியிருக்கிறார். எளிமையான வாழ்வை வகுத்துக் கொள்ள பற்றுதலை அகற்றி தேவைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். வாழ்விலே எளிமை வந்து விட்டால் முழுமை அடைவது சுலபம் என்று இங்கு விளக்குகிறார்.

சனி, ஆகஸ்ட் 12, 2006

‘வழி’ - 18

18. வழி மறந்ததாலே!

பரப்பிரும்ம வழிமுறை மறந்ததினாலே
இரக்கத்தை கற்றுணர நேர்ந்துவிட்டதே

நல்வழியாய் வந்திருந்த தருமத்தினையும்
கல்வியாய் அறிவுறுத்த நேர்ந்துவிட்டதே

மெய்யான வழிதனை தவறவிட்டதாலே
பொய்யான மேதைகள் வழியுரைத்தாரே!

ஒத்துவாழும் முறைதனையே மறந்ததினாலே
நித்தியமான உறவுகள் இருப்பதில்லையே

உள்ளிருக்கும் உண்மைகள் மறைந்ததனாலே
வெளிக்காட்டும் மரியாதைகள் முக்கியமானதே

மக்கள்தம் மனதையாள மறந்ததினாலே
மக்களை ஆள்பவர் பெருகினாரே!


******

இயற்கையை ஒன்றி வாழ மறந்து, செயற்கையான முன்னேற்றத்தை எண்ணி செயல்பட ஆரம்பித்ததால் வரும் விளைவுகளைப் பற்றி இங்கு விளக்குகிறார். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே இப்படி எழுதியிருந்தவர், இப்போது நடப்பதைப் பார்த்தால் என்னும் என்ன எழுதியிருப்பாரோ! இயல்பாக வர வேண்டிய குணங்களைக் கூட - உதாரணமாக இரக்கம் - ஒருவர் போதித்துத்தான் தெரிந்து கொள்ளும் நிலைமை வந்துவிட்டது.

அதே போல உள்ளழகை விட புற அழகுக்கும், பதவிக்கும், பொருளுக்கும் மரியாதை அதிகமாகி விட்டது. மக்கள் செவ்வழி சென்று சலனங்களைக் கட்டுப் படுத்தினால், மற்றவர்களின் தயவை எதிர்பார்ப்பது குறையும், ஏமாற்றுபவர்களும் குறைவார்கள்.

சனி, ஆகஸ்ட் 05, 2006

‘வழி’ - 17

17. ஆள்பவர் நான்குவகை

சத்தமில்லா நிறைகுடமாய் ஆள்வதையே உணராமல்
உத்தமமாய் பொறுப்போடு ஆள்பவர் முதல்வகை.

மகிழ்ச்சியோடு பலகாலம், ஆளப்பட்ட மக்களாலே
புகழ்ச்சியோடு பாடப்பட்டு மறைந்தவர் இரண்டாம்வகை.

கயமையோடு மக்களின் நிம்மதியைக் குலைத்தே
பயத்தோடு வாழச்செய்த கொடுங்கோலர் மூன்றாம்வகை

பொறுப்பில்லா செயலாலே அநீதியோடு மக்களை
வெறுத்தோடி வாழச்செய்த இராக்கதர்கள் நான்காம்வகை

மக்களிடம் நம்பிக்கை இல்லாத மன்னரிடம்
மக்களுக்கு நம்பிக்கை இருப்பது இல்லையே!

உத்தமர்கள் ஆட்சியிலே அடைகின்ற பலனெல்லாம்
மொத்தமாய் சென்றடையும் குறைவின்றி குடிகளுக்கே.


*******

தனி மனித வாழ்வின் முக்திக்காக மட்டும் லாவொட்ஸே எழுதவில்லை. இந்த அத்தியாத்தில் ஒரு தலைவன் (அல்லது தலைவி) தன் குடிமக்களை, நாட்டை நடத்தும் முறைகளை வகைப்படுத்துகிறார். நம்பிக்கை என்பது இரு வழிப்பாதை என்பதையும் உணர்த்துகிறார்.

திருவள்ளுவர் திருக்குறளில் மன்னராட்சி முறை பற்றி நன்கு விளக்கியுள்ளார் 'இறை மாட்சி' அதிகாரத்தில். குறள்களை வரிசையாகத் தருவதற்கு பதிலாக, எளிமையான, தரமான விளக்கங்களுடன் எழுதப்பட்ட நித்திலின் 'எண்ணப் பின்னல்கள்' பதிவின் சுட்டியைத் தருகிறேன்.

இப்போது உலகத்து நாடுகளில் நடக்கும் ஆட்சிமுறையை இந்த நான்கு வகைகளில் எந்தெந்த வகையோடு சேர்க்கலாம் என்பதை உங்களுக்கே விட்டுவிடுகிறேன்.