சனி, பிப்ரவரி 24, 2007

'வழி' – 46

46. 'வழி' தழுவிய கழி

'வழி'யைத் தழுவியே வாழும் நாட்டினிலே
கழிகள் வயலுக்கு ஏர்களாய் உதவுமே

'வழி'யை மறந்தே மக்களும் வாழ்கையில்
கழிகளும் நாட்டிலே ஈட்டிகளாய் மாறுமே

பேராசையை மீறிய பாவமும் இல்லையே
சேராதே துன்பமும் போதுமென்ற மனத்திலே


*********

மிகச் சுருக்கமாக அதே சமயத்தில் ஒரு ஆழமான கருத்து. இந்த அத்தியாயத்தில் ஆசிரியர் 'வழி'யைத் தழுவி வாழ்கையில் எப்படி ஒரு சிறிய பொருள் கூட வளர்ச்சிக்கு உதவும் என்பதையும் 'வழி' மறந்து போனால் எப்படி அதே பொருள் அழிவுக்குத் துணை போகும் என்பதையும் அழகாக விளக்குகிறார்.

புத்தரின் போதனையான 'ஆசையே அழிவுக்குக் காரணம்' என்பது 'வழி'யின் அடிப்படைத் தத்துவங்களில் ஒன்று. அதை ஆசிரியர் வலியுறுத்துகிறார்.

சனி, பிப்ரவரி 17, 2007

'வழி' – 45

45. அசையா மனத்தின் உயர்வு

விரிந்த விண்ணின் முழுமையுங்கூட
பரந்த வெற்றிடமாய் தெரியுமிங்கே

மாறாத விண்ணின் முழுமையோடு
தீராது தந்திடுமே வழியுமிங்கே

வித்தகரின் வார்த்தைகளின் பொருளுங்கூட
பித்தனின் உளரலாய்த் தோன்றுமிங்கே

நியதியான இயற்கையின் செயலுங்கூட
தீயதின் வெளிப்பாடாய்க் குழப்புமிங்கே

அசைவு பனிக்குளிரை வெல்லும்
அசையாமை காய்ச்சல் சூடுதணிக்கும்

அசையாத மனத்தினாலே ஆசானும்
திசைகாட்டித் தருவானே இப்புவியதற்கே


*********

இந்த அத்தியாயத்தில் மனதில் சலனம் இல்லாமல் நிலையாய் இருக்க வேண்டியதை வலியுறுத்துகிறார் ஆசிரியர். மனதில் குழப்பங்கள் வருவதற்கு மனதில் வரும் சலனங்களே காரணம். குழப்பங்கள் வருவதால் நல்லவைகளும் தீயதாய்த் தெரியும். 'வழி' அறிந்த ஆசான் இதனால் மனதை ஒருமுகப்படுத்தி சலனங்கள் இல்லாமல் இருக்கிறான்; அதனால் தான் அவனால் மற்றவர்களுக்கு வழிகாட்ட முடிகிறது.

சனி, பிப்ரவரி 10, 2007

'வழி' – 44

44. ஆசை நிறுத்தம்

உயிரை மிஞ்சிய பொருளும் இல்லையே
உயிரையும் தாண்டி நிற்கும் புகழே

ஒழுக்கம் இல்லா புகழும் வீணே
ஒழுக்கம் இழந்தால் நீயும் இல்லையே

உன்னையும் மீறியே பொருளைநீ விரும்பினால்
பொன்னோடு உன்னயையும் இழக்கவே நேருமே

தேவையைப் புரிந்தே ஆசையை நிறுத்தினாலே
நோவையும் இழப்பையும் அடையாமலே இருக்கலாமே.



*********

இந்த அத்தியாயத்தில் மனிதனுக்கும் முக்கியமானது எது என்பதை எடுத்துரைப்பதுடன், எதனால் ஆசையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றும் கூறுகிறார். உயிர் முக்கியம்; இறந்தாலும் இறக்காமல் இருக்க வைப்பது புகழ். இறவாப் புகழை அடைய ஒழுக்கம் அவசியம். தேவைகளைத் தாண்டி ஆசையை வளர்த்தால் ஒழுக்கத்தை இழக்க நேரிடும். ஒழுக்கம் இழந்தால் இறப்பும் வரும்; இறவாப் புகழும் தட்டிப் போகும். ஆகையால் இறவாப் புகழை அடைய ஆசையை அடக்குவது முக்கியம்.

சனி, பிப்ரவரி 03, 2007

'வழி' – 43

43. வெறுமையில் முழுமை

மென்மையான விதையேபின் மரமாகி
வன்மையான பாறையையும் பிளந்திடுமே

தனதென்ற நினைப்புமே இல்லாததாலே
தனதாக இவ்வுலகையே பார்க்கலாமே

படைத்தவனின் பெயரில்லை இருந்துமிங்கே
படைப்பினிலே குறைவில்லை பிரபஞ்சமதில்

சொல்லாலே போதனைகள் விளங்கினாலும்
சொல்தாண்டிய ஞானமன்றோ முழுமையாக்கும்


*********

இயற்கையின் சுழற்சி பற்றி தத்துவங்களிலும், மதங்களிலும் நிறைய விளக்கங்கள் உள்ளன. இந்த அத்தியாயத்தில் ஆசிரியர் இயற்கையின் விளம்பரமில்லா சக்தியையும், பிரபஞ்ச முழுமையில் 'தனது' என்று எடுத்துக் கொள்ளும் எதுவுமே பிரபஞ்சத்தின் பகுதிதான் என்பதையும் அழகாக விளக்குகிறார்.

முழுமையில் தான் அழகு உள்ளது; தன்னுடையது என்று தனிப்படுத்திப் பார்க்கும் எதுவுமே முழுமையிலிருந்து பிரிகிறது. இதை விடுத்து, தன்னையே முழுமையின் பகுதியாகப் பார்க்கும் பக்குவம் வந்துவிட்டால் முழுமையை உணரலாம். முதல் அத்தியாயத்தில் சொன்னது போல சொல்லால் விளக்கபடுவதல்ல இந்த முழுமை; உணர்ந்து தான் பார்க்க வேண்டும் என்கிறார் ஆசிரியர்.