சனி, மே 27, 2006

'வழி' – 7

7. இறப்பில்லா வாழ்வு

வானுக்கும் மண்ணுக்கும் இறப்பென்பது இங்கில்லை
தனக்கென்று வாழ்கின்ற சுயநலம் இல்லாததால்

இறப்பில்லா வாழ்வின் இரகசியம் புரிந்ததனால்
அறிஞனும் வாழ்கின்றான் தன்னலம் கருதாமல்

தன்நலத்தைப் பின்தள்ளியதால் எந்நாளும் முன்நிற்கிறான்
ஒன்றோடும் ஒட்டாமால் எல்லாமோடும் இருக்கின்றான்

தனக்காக வாழாமல் தன்னையே வென்றுவிட்டான்
தன்னையே வென்றதனால் இறப்பையும் வென்றுவிட்டான்

*****

'எதற்காக வாழ்கிறோம்?', 'ஏன் இந்த உலகத்தில் பிறந்தோம்?', போன்ற கேள்விகள் எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு முறையாவது வரும். சில சமயம் விரக்தியினாலும் சில சமயம் ஆழ்ந்த யோசனையினாலும் இந்த மாதிரி கேள்வி பிறக்கும். எனக்கும் வந்ததுண்டு. இந்த மாதிரி கேள்விகளைப் பற்றி சிந்திக்கும் போது அந்த சிந்தனையின் மூலம் 'நான்', 'என் குடும்பம்' என்ற வட்டத்திலிருந்து தான் வரும்.

இந்த அத்தியாத்தைப் படித்த போது யோசனை சற்று மாறியது. என்னை முழுமை என்று பார்க்காமல், 'நான்' என்பதே ஒரு பெரிய முழுமையின் பகுதிதான் - 'அந்த முழுமை என்ன?', 'அந்த முழுமைக்கு 'நான்' எந்த வகையில் தொடர்பு கொண்டிருக்கிறேன்?', என்பது பற்றி யோசனை வர ஆரம்பித்தது. என் யோசனையின் வட்டத்தின் மையத்தில் இருந்த 'நான்' திடீரென்று காணாமல் போனது.

இந்த அத்தியாத்தின் பொருள் இன்னும் முழுமையாகப் புலப்படவில்லை. அந்த முழுமை எது என்று இன்னமும் விளங்கவில்லை. 'பிறருக்காக வாழ்வது' என்ற தத்துவம் புரிந்தும் புரியாமல் இருக்கிறது. அந்த 'பிறர்' யார்? மனிதர்களா? அல்லது உயிரினங்களா? அல்லது அனைத்தும் (தாவரங்கள், பொருட்கள் உட்பட) சேர்ந்ததா? இதற்கு 'எப்போது ஒருவன் தன்நலம் மட்டும் கருதி வாழத் தொடங்குகிறானோ, அப்போது இறக்கிறான்' என்று பொருள் கொள்ளலாமா? இந்தத் தத்துவமும், கண்ணன் கீதையில் சொன்ன 'கர்ம யோகமும்' ஒன்றுதானா? இன்னமும் விடை தேடிக் கொண்டிருக்கிறேன்.

சனி, மே 20, 2006

'வழி' – 6

6. சிந்தனை பூமி

திசையெல்லாம் விரவிநிற்கும் பூமித்தாயின் ஆற்றலைப்போல்
அசைவில்லா சிந்தனையின் ஆற்றலுக்கும் எல்லையில்லை

சிந்தனையின் ஆழத்தில் சொர்க்கத்தின் வழியிருக்கும்
தந்துனக்கு வாழ்வளிக்கும் வற்றாத ஊற்றைப்போல்.

*************

யோசனை (எண்ணம், நினைப்பு) இல்லாமல் இருக்கும் நேரம் குறைவு. தியானம் என்பதே இரண்டு நினைப்புகளுக்கு இடையே இருப்பதுதான், பதஞ்சலி யோகத்தில் சொல்லியிருப்பது போல. (द्रुश्ट अनुस्रविक विशय विट्र्स्नस्य वस्तिकर सम्ज्न वैराग्यम् )

பற்றில்லாமல் இருப்பது தான் துறவரம். எண்ணங்களைத் துறந்து ஆழ்நிலைத் தியானத்தில் இருக்கையில் தெளிவாகும் உண்மைகளைத் தான் இங்கு குறிப்பிடுகிறார் என்பது என் கருத்து. ஸென் புத்த பயிற்சிகளிலும் ஸாஸென் (Zazen) தியானம் மிக முக்கியமானது. இந்த வற்றாத உற்றை (சிந்தனையை) பூமியின் ஆற்றலுக்கு ஒப்பிட்டு இருப்பதும் நயமானது.

கீதையிலும் கண்ணன் யோகத்தின், தியானத்தின் அருமைகளை ஆழமாக உரைத்திருக்கிறார். உன்னிகிருஷ்ணன் பாடும் 'ராம நாமமே தருமே பேரின்பமே' என்ற பாணியில் 'தியானமே தருமே பேரின்பமே' என்று பாடத் தோன்றுகிறது.

சனி, மே 13, 2006

'வழி' – 5

5. இயற்கையின் நியதி

பேதங்கள் அற்றது இயற்கையின் நியதியதை
பாதிப்பது இல்லை பொருட்களின் தோற்றங்கள்

பேதங்கள் அற்றது அறிந்தவர் உள்ளமதை
பாதிப்பது இல்லை மனிதத் தோற்றங்கள்

விண்ணுக்கும் மண்ணுக்கும் விரிந்திருக்கும் இவ்வியற்கை
வண்ணத்தில் மாறினாலும் விதிமுறைகள் மாற்றாது

மாற்றங்கள் இருந்தாலும் தன்னிலை குலையாது
வெற்றிடமே ஆனாலும் கொடுக்கத் தயங்காது

ஏசாமல் இயங்கும் இயற்கையின் நலம்போல்
பேசாமல் அறிந்தவர் கைவிடார் மூலமதை.

**********

பாரபட்சமில்லாமல் இருப்பது என்பது அரிது. பிடித்தது என்று ஒன்று பொருள் வந்துவிட்டால் அதன் எதிர்மறைப் பொருள் பிடிக்காதாகி விடுகிறது. உதாரணம்:- தித்திப்பு பிடிக்கும்; கசப்பு பிடிக்காது. இரண்டும் சுவைதான் என்று பக்குவத்தோடு பார்ப்பது கொஞ்சம் கடினமான விஷயம். பிடித்ததை அதிகம் பெற வேண்டும் என்பதும், பிடிக்காததை விலக்க வேண்டும் என்ற எண்ணமும் இயல்பாகவே வந்து விடுகிறது.

இதையெல்லாம் தாண்டி ஒரு பாரபட்சமில்லாத விதியாக இயற்கை இருக்கிறது. ஈர்ப்பு சக்தி எல்லாப் பொருளின் மீதும் விழுகிறது; பாரபட்சமில்லாமல் ஈர்க்கிறது. சூரியன் பிடிக்கும் - பிடிக்காது என்று பார்த்து பூமியை ஈர்ப்பதில்லை.

இது போல் பாரபட்சமில்லாமல் இருப்பதால் தான் இயற்கையின் நியதி எல்லாவற்றையும் கடந்து நிற்கிறது. கவிஞர் கண்ணதாசனின் வரிகள் நினைவுக்கு வருகிறது: 'காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே; கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே; காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே'.

சனி, மே 06, 2006

'வழி' – 4

4. பரப்பிரும்ம சக்தி

தொடுவானம் போல்பரந்து வியாபித்து இருக்குமது
எடுக்கெடுக்கக் குறையாது பரப்பிரும்ம சக்தியது

கூர்மையை மழுங்கடிக்கும் தளைதனையே அறுத்துவிடும்
கூசுகின்ற ஒளிதனையே தெளிவாக்கி இதமளிக்கும்

ஆழ்மண்ணிலும் தெரியுமது உயர்வானிலும் தெரியுமது
முழுமையும் வெறுமையும் மீதமும் அதுவே

ஆதியில்லா அந்தமில்லா பரப்பிரும்ம சக்தியின்
நீதியான தந்தையின் மூலத்தை நானறியேன்.


**************


முதன் முதலாக இந்த அத்தியாத்தை படித்த போது திருவிளையாடலில் வரும் 'பாட்டும் நானே, பாவமும் நானே' - குறிப்பாக அதில் வரும் 'எதிலும் இயங்கும் இயக்கம் நானே' வரி - ஞாபகத்திற்கு வந்தது. சற்று யோசித்ததில் பிரகலாதனின் "தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்" வாக்கியம் நினைவுக்கு வருகிறது.

திருமூலரின் பாடல்:
"அந்தமில்லானுக் ககலிடந்தான் இல்லை
அந்தமில்லானை அளப்பவர்தாமில்லை
அந்தமில்லானுக்கு அடுத்தசொல்தான் இல்லை
அந்தமில்லானை அறிந்துகொள்பத்தே"

மற்றும் மாணிக்கவாசகரின் – ‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை’ பாடலும் நினவுக்கு வருகிறது.

கடவுள் என்று பார்க்காமல், நந்தலாலா என்று பார்த்த பாரதியின் பாடலும் (காக்கைச் சிறகினிலே நந்தலாலா), சக்தி என்று பார்த்த பாரதிதாசனின் பாடலும் (எங்கெங்கு காணினும் சக்தியடா) இந்தக் கருத்தைத்தான் தெரிவிக்கின்றன. கடவுளோ, சக்தியோ, இயற்கையோ - எப்படி அழைத்தாலும், அந்த சக்தியின் மூலம் இதுவரை தெரியவில்லை என்பது தான் உண்மை.