சனி, டிசம்பர் 30, 2006

'வழி' – 38

38. குழப்பங்கள் தெளிவிக்க வழி

வழியுணர்ந்து முழுமையாய் ஆசானும் வாழ்வதாலே
‘வழி’யை நினைக்கவே நேரமும் இல்லையே

வழிமறந்து தடுமாறி வாழுகின்ற மக்கள்தம்
‘வழி’பற்றி பேசுவதே வேலையாய்ப் போனதே

ஒழுக்கம் புரிந்து வாழுகின்ற மக்களுக்கு
ஒழுக்கச் சான்றிதழ் தேவையே இல்லையே

அழுக்கை மனதிலே நிறுத்தியே வாழ்கையில்
ஒழுக்கத்திற்கு சாட்சிகள் தேடவே நேர்ந்ததே

அகத்திலே இரக்கம் நிரம்பியே இருக்கையில்
ஜகத்திலே உதவவே திட்டமும் வேண்டாமே

சிந்தையில் இரக்கமும் வற்றியே போனதால்
மந்தைக்குப் பேச்சே திட்டமாய்ப் போனதே

குறளில் வார்த்தைகள் குறைவாக இருந்தாலும்
அறவுரை ஆழத்தில் குறைவே இல்லையே

நீதியைத் திரித்தே உரைக்க முயல்கையில்
மீதியிருப்பவை வெற்று வார்த்தைகள் ஆனதே

ஒழுக்கமும் பிறந்திடுமே ‘வழி’யதனைப் பற்றிவிட்டால்
ஒழுக்கம் தந்திடுமே இரக்கமதை இயல்பாக

நீதியும் வந்திடுமே இரக்கம் இருந்திட்டால்
நீதியும் இருந்தாலே குழப்பமும் தவிர்த்திடலாம்

குழப்பங்கள் தருவிக்கும் அநீதித் தோல்விலக்கி
பழமான வழியதனை ஆசானும் பற்றுகிறான்

மூலத்தை பற்றியே முழுமையாய் வாழ்வதினால்
பலமான ஆசானும் குழப்பத்தை தவிர்க்கின்றான்.


*********

இந்த அத்தியாயத்தில் மனிதனுக்குத் தோன்றும் மனக் கிலேசங்கள், குழப்பங்களை தெளிவிக்க ஆசிரியர் வழி காட்டுகிறார். குழப்பங்கள் வருவது இயற்கை. ஏன், எதற்கு என்ற கேள்விகள் எப்போதும் வந்து கொண்டே இருக்கும். இதற்கான விடை கடினமானதல்ல, மாறாக முற்றிலும் எளிமையானது. உள்ளொழுக்கம் வந்துவிட்டால் மற்ற அனைத்தும் தாமாக வந்துவிடும்.

வள்ளுவர் சொன்னதுபோல
"ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்".

இந்த ஒழுக்கத்தையும், அதன் எளிமையையும் புரிந்து கொள்ளாததால்தான் மனிதனுக்கு சுயதைரியம் தர பெரிய திட்டங்கள், சாட்சிகள், அத்தாட்சிகள் தேவையாக இருக்கிறது. மனதிலே எளிமையான ஒழுக்கம் வந்துவிட்டால், இதுபோன்ற வெளித்துணைகளின் தேவை இருக்காது. இதுபோன்ற வெளித்துணைகளை காட்டி ஏமாற்றுபவரும் இருக்க மாட்டார்கள்.

சனி, டிசம்பர் 23, 2006

'வழி' – 37

37. செய்யாமல் செய்விக்கும் இயற்கை

நகராமல் எந்நாளும் நிலையாக நின்றாலும்
தவறாமல் கனிதனையே தருகிறதே மரமதுவே

களமதனின் செயல்பாடு உணராது போனாலும்
வளமான பயிரோடு இருப்பிடமும் தந்திடுமே

எதிர்பார்த்து எதையுமே செய்யாத இயல்பினையே
மதியுணர்ந்து மக்களுமே மனதிலே நிறுத்திட்டால்

செய்யாமல் அனைத்தையும் செய்விக்கும் இயற்கைபோல்
தொய்யாமல் கடமைகளை முழுமையோடு முடித்திடலாம்.


*********

இந்த அத்தியாயத்தில் எப்படி எதையும் எதிர்பார்க்காமல் கடமைகளை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். பொது இடத்திற்கு ஒரு மின்சார குழல் விளக்கு அளித்துவிட்டு, அதில் பாதி விளக்கை மறைப்பது போல 'உபயம்' என்று தங்கள் பெயர் போட்டுக் கொள்ளும் மனிதர்களுக்கு இது மிகவும் பொருந்தும்!

அது கனிகொடுக்கும் மரமாயிருந்தாலும் சரி, பயிர் கொடுக்கும் நிலமாக இருந்தாலும் சரி - மற்றவருடைய புகழையும் அல்லது வேறெதையும் எதிர்பார்த்தோ செய்வது இல்லை. இது இயற்கை நமக்கு சொல்லும் பாடம். இதை மனதிலே நிறுத்தி கடமைகளை செய்வது நமக்கும் இயற்கையைப் போல ஒரு உன்னதமான நிலையை அடைய உதவும் என்கிறார் ஆசிரியர்.

சனி, டிசம்பர் 16, 2006

'வழி' - 36

36. வாழ்க்கையின் நியதிகள்

சுருங்க முதலில் விரியத்தான் வேண்டும்
பராசயமாக முதலில் திடமாகத்தான் வேண்டும்

இறங்க முதலில் உயரத்தான் வேண்டும்
பெறவே முதலில் தரத்தான் வேண்டும்

தன்மையும் மென்மையும் வன்மையை வெல்லும்
பொன்னான இவையாவும் இயற்கையின் நியதியாகும்

வானுக்கு பறக்க ஆசை இருந்தாலும்
மீனுக்கு முழுகும் தண்ணீரே இல்லம்

எதிரியை வீழ்த்தும் போரின் ஆயுதமே
எதிரே வராமல் ஒளிப்பது நலமே.

*********

இந்த அத்தியாயத்தில் ஒவ்வொரு உயிரும் ஏற்ற தாழ்வுகளை சந்தித்தே ஆக வேண்டும் என்று உரைப்பதோடு இல்லாமல், வன்முறையைத் தூண்டும் ஆயுதங்களை பெருக்காமல் இருக்க வேண்டும் என்றும் எடுத்துரைக்கிறார்.

வன்முறையைப் பற்றி முந்தைய அத்தியாயங்களில் (30, 31) சொன்னதற்கு தொடர்ச்சியாக இந்த அத்தியாயத்தைக் கொள்ளலாம். வாழ்க்கையின் சுழற்சியைப் புரிந்து கொண்டு வழியை ஒத்து வாழ்வதை விட்டு, வன்முறையால் அதை மாற்ற முயல்வது முடிவைத் தராது என்பது ஆசிரியரின் வாதம்.

சனி, டிசம்பர் 09, 2006

'வழி' - 35

35. வழி தரும் முழுமை

உடலுக்கு அணைவாகும் நல்லுணவும் இன்னிசையும்
தேடலுக்கு துணையாவான் 'வழி'காட்டும் ஆசானவன்

நிரந்தர இன்பத்தை தருகின்ற காரணத்தால்
வரந்தர வேண்டியே வந்தடைவார் ஆசானை

சுவையற்றதாய்த் தோன்றும் 'வழி'யின் போதனைகள்
அவையனத்தும் அளிக்குமே வாழ்வில் முழுமையையே

சுற்றும் பார்க்கினும் தெரிபவை அரூபம்தானே
உற்றுக் கேட்கையில் சப்தங்கள் மௌனம்தானே

தொடர்ந்து எடுத்தாலும் இருப்பவை குறையாதே
தொடர்பு புரிந்தாலே விழிப்பும் வந்திடுமே.

*********

இந்த அத்தியாயத்தில், "வாழ்க்கையில் முழுமை அடைய நிலையான உண்மை எது, உயிர்களின், பொருட்களின் தொடர்பு என்ன என்பது புரிய வேண்டும். இந்தப் புரிதலுக்கு குருவின், ஆசிரியரின் துணை வேண்டும்" என்பதை விளக்குகிறார் ஆசிரியர். இந்து தத்துவங்களிலும் ஆசிரியரின் பெருமை பற்றி நிறைய சொல்லப்பட்டிருக்கிறது - மாதா, பிதா, குரு, தெய்வம் - என்று தெய்வத்திற்கு முன் குருவை வைத்துள்ளார்கள்.

அதே போல மாயை, சக்தி போன்றவற்றையும் அதன் தொடர்பையும் இந்து தத்துவங்களில் நிறையப் பேர் விளக்கியிருக்கிறார்கள். உருவத்திற்கும், அரூபத்திற்கும் உள்ள தொடர்பு, சப்தத்திற்கும் நிசப்பத்திற்கும் உள்ள தொடர்பு என்ற முரண்பாடுகளின் தொடர்பு புரிந்தாலே முழுமை பெறலாம் என்று ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.

சனி, டிசம்பர் 02, 2006

‘வழி’ -34

34. வழியின் தன்மை

பொங்கிவரும் வெள்ளம்போல் பரப்பிரும்ம வழியுமே
தங்குதடை இன்றியே பரந்தெங்கும் பாயுமே

நீரும் நிலமும் வானும் வையமும்
இரந்தே பெற்றாலும் மறுப்பது இல்லையே

உயிரையும் உடலையும் உருவாக்கியே தந்தாலும்
உரிமையோடு சொந்தமே கொண்டாடுவது இல்லையே

உருவமும் வடிவும் தெரியாத காரணத்தால்
சிறிது இதென்று பலரும் சொல்லலாமே

உருவாக்கித் தந்தாலும் தனதாக்கா தன்மையதை
அறமறிந்த வழியதனனின் உயர்வையே உணர்வாயோ?


*********

இந்த அத்தியாயத்தில் 'எல்லாவற்றையும் படைத்த சக்திக்கு, அதன் படைப்பில் வந்தவற்றின் புகழ்ச்சியோ, அங்கீகாரமோ தேவையில்லை' என்பதை மிக அழகாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.

'பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரண ஆனந்தமே' என்று கொண்டாடிப் பாடியிருக்கிறார்கள் தமிழில். 'வழி' (அல்லது இறைவன், இயற்கை) இப்பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்திருக்கிறது; இருப்பினும், இதன் படைப்பினால் வந்த பஞ்ச பூதங்களையும், உயிரற்றவைகளையும், உயிருள்ளவைகளையும் தன்னுடையது என்று விளம்பரப்படுத்த இது முயல்வதில்லை.

சிறு விஷ்யங்களைக்கூட 'என்னால் செய்யப்பட்டது' என்று பெருமையாகக் கூறிக் கொள்ளும் நம் போன்ற மக்களுக்கு, அனைத்தையுமே உருவாக்கித் தந்த இந்த மகா சக்தியின் அடக்கம் ஒரு நல்ல பாடம்தான்.