வியாழன், மார்ச் 31, 2011

வழி - 68

வழி - 68
இழப்பில்லா வெற்றி

இழப்பின்றி வாராதே போரிலே வெற்றியுமே
இழப்பில்லா வெற்றிதானே போர்களிலே உயர்விங்கே

இழப்பின் கனந்தெரிந்த வீரர்களும் இதனாலே
இழப்புதரும் போர்தேடிச் செல்வதும் இல்லையே

வன்முறையால் பயமுறுத்தி மக்களை அடக்கினாலும்
நன்முறையால் வெற்றிகொள்ளும் திறமன்றோ சிறந்ததிங்கே

வன்முறையின் துயர்தெரிந்த அரசரும் இதனாலே
வன்முறையைத் துணையாக்கி ஆள்வதும் இல்லையே

மற்றவரின் திறந்சேர்த்து வாழ்ந்திடவே எந்நாளும்
பெற்றிடவும் வேண்டுமே அடக்கமுடன் பணிவையுமே

வாழ்க்கையில் வழிதெரிந்த ஆசானும் இதனாலே
தாழ்மையுடன் பணிவுகாட்டி தவிர்ப்பானே வன்முறையை.


**********

போர், வன்முறை மற்றும் தீவிரவாதம் தரும் தீர்வெல்லாமுமே இழப்பில்லாமல் வருவதில்லை. இழப்பைத் தவிர்க்க வேண்டும் என்று நினைக்கும் எவருமே போரை விரும்பிச் செல்வதில்லை. 'வழி' தத்துவத்தில் ஆசிரியர் போர் மற்றும் வன்முறையின் தீங்கை அனேக இடங்களில் வலியுறுத்தியிருக்கிறார். போர் இழப்போடு வெற்றியைத் தரலாம். ஆனால் பணிவு எப்போதுமே இழப்பில்லாத வெற்றியை அவசியம் தருகிறது என்பதை ஆசிரியர் இந்த அத்தியாயத்தில் எடுத்துரைக்கிறார்.

ஞாயிறு, மார்ச் 27, 2011

வழி - 67

வழி - 67
மும்முத்துக்கள்

தாழ்விங்கே வாராதே வழியின் போதனையால்
வாழ்க்கைக்கு உரமாக வந்ததிங்கே மும்முத்துக்கள்

உயிர்களிடத்து நேசமுடன் போதுமென்ற மனமும்
உயர்வதனைத் தந்திடுமே தன்னடக்கம் சேர்ந்தாலே

நிறைவில்லா மனமும் நேசமில்லா வீரமுமே
குறைத்திடுமே வாழ்க்கையதை தானென்ற நினைப்பிருந்தால்

துணிவிங்கே போதுமே உயிரதனைக் கொன்றிடவே
துணிவோடு முழுமையுமே நேசிக்கத் தேவையிங்கே

பிறரிடத்தில் நேசமது வளர்த்திடுமே உன்னிடத்தில்
சிறந்திடவே வாழ்க்கையிலே துணிவோடு முழுமையையே

போதுமென்ற மனத்தோடு தேவைகளைக் குறைத்தாலே
போருக்கே போகாமல் வாழ்க்கையிலே வென்றிடலாம்

தன்னடக்கம் இருந்தாலே தெரிந்திடுமே குறைகளுமே
தந்திடுமே வாழ்க்கையிலே குறையற்ற முழுமையையே

நிறைவோடு வழிதந்த முத்துக்கள் இம்மூன்றும்
குறைநீக்கி வாழ்க்கைக்கு முழுமைதரும் பொக்கிஷமே.


**********

இது வரை வெவ்வேறு அத்தியாயங்களில் சொன்ன நற்குணங்களில் முக்கியமான மூன்றை இதில் சிலாகித்து சொல்லியிருக்கிறார் ஆசிரியர். உயிர்களிடத்து நேசம், போதுமென்ற மனம், தன்னடக்கம். உயிரைக் கொல்வதற்கு வீரம் வேண்டும்; நேசிக்க வீரம் மட்டும் போதாது. நேசம் இல்லா வீரம் நன்மை பயக்காது. போதுமென்ற மனம் இல்லையென்றால் மகிழ்ச்சி இல்லை. அறிவதற்கு முக்கியத் தேவை அடக்கம். இந்த மூன்று குணங்களையும் ஆசிரியர் மும்முத்துக்கள் என்று குறிப்பிட்டு முழுமைக்கு இவை மூன்றும் மிகவும் முக்கியம் என்று வலியுறுத்துகிறார்.

சனி, மார்ச் 26, 2011

வழி - 66

வழி - 66
பணிவின் உயர்வு

நிலத்திலும் தாழ்வாக கடலிங்கே இருந்தாலும்
உலகத்தின் நதியாவும் கடல்தேடி வந்தடையும்

மூடிய பாத்திரத்தில் நீரேந்த முடியாதே
கூடியே வந்திடுமே திறந்த கலத்தினிலே

தரத்திலே தாழ்வில்லை குணத்திலே பணிவதனால்
வரவும் பெருகிடுமே மனமும் திறந்தாலே

ஓட்டிடுவாய் துயர்களையே திறந்த மனத்தாலே
போட்டிகளும் வாராதே பணிவான குணத்தாலே

போட்டியிடும் மனப்பாங்கு இல்லாத காரணத்தால்
போட்டியிலே தோல்வியெனும் நிலையிங்கு இல்லையே!


**********

இந்த அத்தியாயத்தில் ஆசிரியர் பணிவின் பெருமையை விளக்குகிறார். பணிவின் பெருமை பற்றி அனைத்து கலாச்சாரங்களிலும் எழுதியிருக்கிறார்கள். இந்த உவமைகளில் சிலவற்றை மற்ற இடங்களில் பார்த்ததாக நினைவு. விளக்கத்திற்கு பதிலாக அடக்கமுடைமை அதிகாரத்திலிருந்து இரண்டு குரள்களைத் தந்திருக்கிறேன்.

அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

செவ்வாய், மார்ச் 22, 2011

வழி - 65

வழி - 65
வாழ்க்கையறிவு

இயல்பான வழியொற்றி வாழுகின்ற மக்களின்
செயல்பாடும் பழியின்றி முழுதாக மலர்ந்திடுமே

வேதமான வழியதனை மறந்திங்கே வாழ்கையிலே
பேதங்கள் வினையாக வளர்ந்திங்கே வீழ்த்திடுமே

வாதத்தாலே அறிவதனை வளர்த்த மக்களையும்
சாதுர்யம் காட்டியாளத் தேவையும் வந்ததே

இயற்கையான வழிபற்றி வாழுகின்ற மக்களுக்கே
செயற்கையான சட்டங்களின் தேவையும் இல்லையே

திட்டமான வழியதனை முழுதாக உணர்ந்திடவே
சட்டங்களின் அறிவுமிங்கே தடையாக வந்ததுவே

வழியதினின் வலிவறிந்த ஆசானும் இதனாலே
வழிமறைக்கும் அறிவதனை வளர்ப்பதுவும் இல்லையே.


**********

இனிமையான வாழ்க்கைக்கு அறிவு முக்கியம். ஆனால் எது அறிவு என்று அறிவது அதை விட முக்கியமான ஒன்று. இந்த அத்தியாயத்தில் ஆசிரியர் மிக அருமையாக இந்த வித்தியாசத்தை விளக்குகிறார். வீண் வாதத்திற்காக சட்டம் படித்து ஒரு குற்றவாளியை தப்பிக்க உதவும் அறிவையும், அறியாதவர்களுக்கு எளிமையாக விளக்கம் அளித்து புரிய வைக்க உதவும் அறிவையும் ஒன்றாகக் கருத முடியாது. இயற்கையில் ஒன்றி அதன் வழி புரிந்து, விதி தெரிந்து வாழும் மக்களுக்கு, மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கையான சட்டங்கள் உதவாது; தடையாகி விடும் என்று உரைக்கிறார் ஆசிரியர். இதனாலே முல வழியை அடையத் தடையாக இருக்கும் விஷயங்களை ஆசான் முழுவதுமாக ஒதுக்குகிறார்.

வியாழன், மார்ச் 17, 2011

'வழி' – 64

'வழி' – 64
அசைவின்மை

நிலையான சிந்தையிலே பொருள்யாவும் புரிந்திடுமே
அலைபாயும் மனதினிலே நிம்மதியும் வாராதே

வலிவற்ற மண்வீட்டை குலைப்பதும் சுலபமே
வடிவமும் சிறிதாக மறைப்பதுவும் எளிதாகும்

களைகளும் சுமைகளே அளவிலே வளர்ந்தபின்
முளையிலே அழிப்பதால் பளுவுமே குறையுமே

வனங்களும் வருமிங்கே விதைகளில் வளர்விலே
தனங்களும் பெருகுமே மதியதனின் வளர்விலே

அடியிலே துவங்குமே இமயத்தின் பயணமே
நொடியிலே தொடக்கமே சமயத்தின் கணக்குமே

சலனங்களைத் தவிர்த்தாலே வலிவதனைப் பெறலாமே
பலனதனைப் பெற்றிடவே வலிவுதரும் வழிதானே

பற்றற்ற ஆசானின் 'வழி'யின்படி நடந்தாலே
பெற்றிடலாம் புவியதனின் பொருள்களையும் நிறைவாக.


**********
Every journey begins with a single step. உலகில் அதிகம் உபயோகிக்கப்படும் மேற்கோள்களில் ஒன்று: "நெடுந்தூரப் பயணங்களும் இங்கே (ஒவ்வொரு) அடியாகத்தான் தொடங்குகிறது". இந்த வாக்கியம் இந்த அத்தியாயத்திலிருந்துதான் எடுத்தாளப்படுகிறது.

ஆசிரியர் இந்த அத்தியாயத்தில் எப்படி பெரிய விஷயங்கள் சிறியதாகத் துவங்குகிறது என்பதையும், எந்தக் காரணத்தால் சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் விளக்குகிறார். இதே கருத்தை வேறொரு அத்தியாயத்திலும் (வழி 26) அவர் வலியுறுத்தியிருக்கிறார். மனதை அலைய விடாமல் ஒருநிலைப்படுத்தினால் முழுமையை அடையலாம் என்ற கருத்தை பதஞ்சலி யோக சூத்திரத்திலும் காணலாம்.

ஞாயிறு, மார்ச் 13, 2011

வழி - 63

வழி - 63
செய்யாமல் செய்


துடிப்பைநீ உணராத பொழுதிலுமே
துடிக்கும் இதயம் உன்னுள்ளே

செய்கின்ற நினைப்பும் இல்லாமலே
செய்கின்ற பக்குவம் பெற்றிடுவாய்

இயக்கத்தில் நினைப்பை இழந்தாலே
இயக்கத்தில் ஒன்றாகிக் கலந்திடலாம்

செயலில் அளவு உயர்வில்லையே
செயலின் உயர்வு முழுமையில்தானே

முழுதாக நீக்காத குறைகளுமே
முழுமையை அடைவதை குலைத்திடுமே

முளையிலே முழுமையாய் நீக்குகையில்
களைகளைக் களைவதும் சுலபந்தானே

அறிந்தே ஆசானும் இதனாலே
சிறியதிலும் முழுமை காண்பானே

செயலில் தன்னையிழந்த ஆசானையிதனாலே
செயலின் கடுமை தாக்குவதில்லையே.


**********

இந்த அத்தியாயத்தில் இரண்டு கருத்துகளை ஆசிரியர் முன் வைக்கிறார். முதலாவதாக செயல்களில் உயர்வு அதன் அளவில் அல்ல, முழுமையில்தான் என்கிறார். இரண்டாவதாக செயலில் தன்னையிழப்பதால் அதன் கடுமை தெரியாது; முழுமை பெறுவது எளிது என்பதையும் உரைக்கிறார்.

முதல் கருத்தைப் படிக்கையில் 'செய்வன திருந்தச் செய்' நினைப்புக்கு வருகிறது. மனதுக்குப் பிடித்த செயலில் ஈடுபடுகையில் அதன் பளுவும், செலவாகும் காலமும் தெரிவதில்லை. செய்கையில் மனது ஒன்றி, அதில் முழுமையும் இருந்துவிட்டால் அதைவிட உயர்வானது எதுவும் இல்லை. கீதையின் "கர்ம யோகம்" நினைப்புக்கு வருகிறது.

வியாழன், மார்ச் 10, 2011

வழி - 62

வழி - 62
மூலத்தின் தன்மை

மூலமான வழியுமே மறைந்திங்கே இருந்தாலும்
நலமான சொத்தாகும் உணர்ந்திங்கே வருவோர்க்கு

தடுமாறித் தேடுவோர்க்கு அடைக்கலமும் தந்திடுமே
தடுத்திங்கே ஆட்கொள்ளும் நிறைவான வழிதானே

ஆள்பவர் மாறுகையில் பொருள்தந்து புகழ்பாடி
கொள்கையை மறந்திங்கே வாழுகின்ற மக்களுமே

நிலையான வழியதனின் தன்மையை மறந்ததனால்
தலைகுனிந்து தரங்குலைந்து வாழுகின்ற நிலைவருமே

வன்மையாய் வசைத்தாலும் இன்மையாகப் புகழ்ந்தாலும்
தன்மையதில் மாறாதே நின்றாளும் இயற்கையுமே

அடைந்தவருக்குப் பொக்கிஷமாய் அடையாதோருக்குப் புகலிடமாய்
தடைநீக்கும் வழியுமே தன்மையில் இயற்கைதானே

மூலமான வழியதனின் நிலைமாறாத் தன்மையினால்
நலமாவும் பெறலாமே நிலைமாறும் புவிதனிலே


**********

அனைத்துக்கும் மூலமான உண்மைப் பொருள் காலம், எண்ணம், மக்கள் பொறுத்து மாறுவதில்லை. இந்த மூலம் இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. காலத்திற்கேற்ப கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் குணம் மனிதர்களுக்கு மட்டுமே உண்டு. சில நூறு வருடங்களுக்கு முன்னால் சீனாவில் எடுத்துக்காட்டப்பட்ட இந்த நிலையை இன்றும் இவ்வுலகத்தில் காணலாம். மூலத்தை மறந்து சந்தர்பத்தை ஒத்து கொளகையை மாற்றிக் கொள்ளும் மனிதர்களுக்கு வாழ்க்கை குலையும் என்பதை இந்த அத்தியாயத்தில் எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.

சனி, மார்ச் 05, 2011

'வழி' – 61

'வழி' – 61
தாழ்மையின் உயர்வு

வெள்ளமிங்கே விரைந்தோடும் மலையிருந்து மடுவுக்கே
வெப்பமுமே பரவிடுமே தணலிலிருந்து குளிர்நீக்க

வளியுமிங்கே நிறைத்திடுமே தென்றலாக வெற்றிடத்தை
வெளிச்சமும் பரவிடுமே ஒளியிலிருந்து இருள்நீக்க

அறிவிங்கே வளர்ந்திடுமே அறியாமை உணர்ந்தாலே
செறிவும்தான் சேராதே அறிந்தோம் என்றெண்ணமதால்

வெறுமையான பாத்திரமே நீரேந்த உதவிடுமே
பொறுமையான மனமிங்கே நிலையுயர உதவிடுமே

ஏழ்மையான மனத்தாலே நிலையதனில் தாழ்வில்லை
தாழ்மையினால் பெற்றிடலாம் வழியதனின் முழுமையையே!


**********

பணிவின் சிறப்பை எடுத்துரைக்கும் அத்தியாயம் இது. "ஹிட்லர் உமாநாத்" திரைப்படத்தில் மறைந்த நடிகர் சுருளிராஜன் வில்லுப்பாட்டு நடத்துவதாக ஒரு காட்சி வரும். அதில் அவர் "தெரியாதது எதுவோ அதுலதான் நாம முன்னுக்கு வர முடியும்" என்பதை தான் ஆங்கிலம் பேசுவதற்கு காரணமாகச் சொல்லுவார் (திரைப்படத்தில் அவருக்கு ஆங்கிலம் தெரியாது). நகைச்சுவைக்காக சொல்லப்பட்ட பழமொழியாக இருந்தாலும், அறியாமையை உணர்வதுதான் அறிவைப் பெறுவதற்காக ஒருவர் எடுத்துவைக்கும் முதல் படி. வாழ்வில் உயர்வதற்கும் இதே போல தன்னுடைய நிலையை, தாழ்மையைப் புரிந்து கொள்ளுதல் முதல் பாடம். இதை உவமைகளோடு விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.

புதன், மார்ச் 02, 2011

'வழி' – 60

'வழி' – 60
அரசாண்மை

ரோஜாவில் மாலையதை தொடுத்திடும் திறத்தினை
ராஜாவின் அரசாண்மை ஒத்திடல் வேண்டுமே

மெலிதான மடல்தாங்கி கோர்க்கின்ற விரல்தானே
வலிவோடு அகற்றிடுமே கூரான முள்ளதனை

மென்மையும் வேண்டுமே இதழ்களைத் தாங்கவே
வன்மையும் வேண்டுமே முட்களைத் தீண்டவே

வன்மையான முட்களுமே கரத்தினைக் கிழிக்காமல்
மென்மையான மடல்களுமே சருகாகி உதிராமல்

தன்மையாக மாலையதை கட்டிடும் திறத்தாலே
மேன்மையும் தரலாமே நந்தவன மலர்களுக்கே

பூக்களைக் கட்டுகின்ற திறத்தினை உணர்ந்தாலே
மக்களைக் காத்திடும் அரசனும் சிறப்பானே.


**********

ஒரு அரசின் மேன்மை அதன் வலிமையில் மட்டுமல்ல, அது தன் மக்களை எப்படி மென்மையாகவும் கையாள்கிறது என்பதைப் பொறுத்தும் இருக்கிறது என்பதை இந்த அத்தியாயத்தில் எடுத்துரைக்கிறார். இதை விளக்க உவமையாக சிறு மீனை சமைக்க வேண்டிய திறத்தை ஆசிரியர் குறிப்பிடுகிறார். மீன் சமைத்ததை சொந்த அனுபவத்தில் உணர்ந்து அறிந்ததில்லை. அதனால் என் அனுபவத்தில் அதற்கு நிகரனான விஷயத்தை, ரோஜா மாலை தொடுக்கும் திறனை உவமையாக இந்த மொழிமாற்றக் கவிதையில் தந்திருக்கிறேன்.