'வழி' – 42
42. 'வழி' விலக்கும் வன்முறை
ஒன்றான 'வழி'யுமே தந்ததே ஒன்று
ஒன்றோடு ஒன்றுசேர வந்ததே இரண்டு
இரண்டோடு ஒன்றாகப் பிறந்ததே மூன்று
திரண்டதே இவ்வாறே ‘வழி’யின் பிம்பங்கள்
இரண்டும் வந்ததே ஒன்றின் முடிவிலே
இரண்டறக் கலந்ததே முதலும் முடிவுமே
சித்தமும் தேடுதே உயர்வை அடையவே
நித்தமும் நினைக்குதே தாழ்மையத் தவிர்க்கவே
வாழ்க்கையில் முரண்களின் பொருளறிந்த ஆசானும்
தாழ்மையை இழிவாக நினைப்பதும் இல்லையே
தன்னையே வெற்றிக்காக இழப்பார் இருக்கையிலே
தன்னையே வென்றதனால் செழிப்பார் சிலரே
வன்முறையே துணையாக வாழும் மனிதருக்கே
வன்முறையால் முடிவேதான் வருமே இங்கே*********
இந்த அத்தியாயத்தில் ஆசிரியர் 'வழி'யிலிருந்தே அனைத்தும் வந்ததை அழகாக எடுத்துக் காட்டியிருக்கிறார். முழுமையானதும், முதன்மையானதுமான 'வழி'யிலிருந்து வந்தவை, அந்த வழியின் தன்மையைப் போலவே இயல்பாக இருக்கின்றன. இதைப் புரிந்து கொண்டு இயற்கையை ஒற்றி நடப்பவர்கள் வன்முறையை விலக்குகிறார்கள் - காரணம் வன்முறை இயல்பானது அல்ல. இதைப் புரிந்து கொள்ளாமல் வன்முறையை நாடுபவர்கள் அந்த வன்முறையாலேயே மடிகிறார்கள்.
'வழி' – 41
41. மூவகை மக்கள்
வழியறிந்த ஆசானும் வழியுணர்த்த வருகையிலே
வழியறியா மக்களுமே இருப்பாரே மூவகையாய்
விடாத உடும்பாக வழியதனைப் பற்றியதால்
கெடாத உறுதியுடன் வாழ்பவர்கள் முதல்வகையில்
எட்டிஎட்டிப் பார்த்துவிட்டு வற்றாத வழியதனை
எட்டாமலே இருப்பவர்கள் இரண்டாம் வகைதனிலே
எள்ளி நகையாடி அறியாமையில் வழியதனை
தள்ளி ஒதுக்கியே செல்பவர்கள் மூன்றாம்வகை
அறிவுதாண்டிய ‘வழி’யின் போதனைகள் கேட்டதிலே
அறியாமை இயல்பாக நகைப்பதும் வியப்பில்லையே
எதிர்மறைப் பொருட்களின் தொடர்பறியா மக்களுக்கு
புதிராகத் தோன்றுமே 'வழி'யின் போதனைகள்
எளிதான வழியுமே கடினமாய் தோன்றுமே
வெளிச்சமும் இங்கே இருளாய் மறையுமே
ஓசையிலே இசைதேடி மகிழ்வடையும் அறிவுக்கு
இசையே மௌனமென்னும் வழியின்மொழி நகைப்பாகும்
வடிவத்தால் பொருளதனின் வகையறியும் அறிவுக்கு
வடிவமில்லா சக்தியதன் பொருளுணர ‘வழி’வேண்டும்
அறிவாலே தேடுகையில் வழியுமிங்கே ஒளிந்திருக்கும்
செறிவான ‘வழி’யொன்றே அனைத்தையுமே முழுமையாக்கும்*********
ஆசிரியர் இந்த அத்தியாயத்தில் உலக மக்களை மூன்று வகைகளாக - புரிந்து வாழ்பவர், புரிந்தும் புரியாமல் இருப்பவர், புரியாமலே நடப்பவர் என்று பிரித்துக் காட்டியிருக்கிறார். உலகில் நமக்குப் புரியாதவை அனைத்துமே நம் அறிவின் எல்லைக்கு அப்பால்தான் இருக்கின்றன. அவற்றைப் புரிந்து கொள்வதன் மூலம் நம் அறிவு விரிவடைகிறது. நம் அறிவுக்கு எட்டவில்லை என்ற ஒரே காரணத்தால் புரியாதவைகளை நகைத்து ஒதுக்க முடியாது. நமக்குப் புரியாதவைகள் இருப்பதே நம் அறிவின் குறைவுக்கு சாட்சி. புரிந்து கொண்டவர் 'வழி'யை ஒத்து வாழ்வார்.
'வழி' – 40
40. பிரபஞ்சம் பிறந்த வழி
சுழற்சியே வழியின் இயல்பாகும்
நெகிழ்ச்சியே வழியின் செயல்பாடு
பிறந்தது பிரபஞ்சம் வழியினாலே
பிறவாத வழியின் திறத்தினாலே*********
மிகச் சுருக்கமான, ஆனால் மிக மிக ஆழமான ஒரு அத்தியாயம். 'புனரபி ஜனனம் புனரபி மரணம்' என்ற கீதையின் சொல்லில் அறிவுறுத்தப்படும் வாழ்க்கையின் சுழற்சியை இங்கே உணர்த்துகிறார் ஆசிரியர். இயல்பாக நிலத்தில் இயைந்து ஓடும் நதியின் ஓட்டத்தைப் போல 'வழி'யும் நெகிழ்ந்தே ஓடுகிறது.
இந்து தத்துவத்தில் 'இந்த பிரபஞ்சத்தில் வந்த பொருளனைத்திற்கும் மூலம் ஒரு ஆதாரமான சக்தியே' என்பதையும் 'இந்த சக்திக்கும் ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை' என்றும் வெவ்வேறு இடங்களில் சொல்லியிருக்கிறார்கள். இதை சிவன் என்றோ, மகாசக்தி என்றோ, விஷ்ணு என்றோ (இன்னும் எத்தனையோ பெயர்களிலும்) வெவ்வேறு பிரிவினர் அழைத்திருக்கிறார்கள்; அழைத்து வந்து கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர் அதை 'வழி' என்று இங்கு அழைக்கிறார்.
'வழி' – 39
39. அடக்கம் பெறும் முழுமை
விழிப்போடு உள்ளத்தால் உணர்ந்தே நோக்கினால்
வழியின் முழுமையுமே விரிந்தே தெரியுமே
விண்ணின் முழுமையதன் தெளிவிலே தெரியும்
மண்ணின் முழுமையதன் உறுதியிலே புரியும்
பரந்த புவியில் பிறந்த உயிராவும்
இரந்தே பெற்றிடுமே வழியின் முழுமையதை
தெளிவை இழந்திட்ட உயிரின் கண்களுக்கு
வளியும் கலங்குமே புவியும் நடுங்குமே
நாடியே இதனாலே ஆசானும் மற்றோரும்
தேடியே அடைந்திடுவார் முழுமையும் தெளிவையுமே
குறைதானே அனைத்துமே முழுமை அடையாமல்
குறையுணர்ந்த ஆசானும் வளர்ப்பானே அடக்கமதை*********
இந்த அத்தியாயத்தில் ஆசிரியர் முழுமையைப் பெற அடக்கம் முக்கியம் என்பதை விளக்குகிறார். இந்த பிரபஞ்சத்தில் வந்த அனைத்திற்குமே மூலமான சக்தி முழுமையானது; குறைகளற்றது. அதிலிருந்து வந்த அனைத்தும் முழுமை பெற முடியும். இந்த முழுமை பெற அறிந்து கொள்ளல் அவசியம். இந்த அறிவைப் பெற முதலில் உணர வேண்டியது, நமக்குத் தெரிந்தது குறைவு என்ற ஞானம். அதற்கு அடக்கம் முக்கியம். நாம் முழுமை பெற்று விட்டோம் என்று முடிவு செய்துவிட்டால், அதற்கு மேல் அறிவது இல்லாமல் போய்விடும். ஆதலால் நமக்குத் தெரிந்தது குறைவு என்ற எண்ணத்தை மனதில் வைத்து ஆசிரியரும் முழுமை பெறுகிறார்.
வள்ளுவரும் இதைத்தான் குறளில் (இல்லறவியல் - குறள் 121) சொன்னது:
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.