'வழி' - 50
50. வாழுகின்ற வழி
மொத்தமாய் இவ்வுலகிலே பிறக்கின்ற மக்களிலே
பத்திலே மூவரிங்கே உடலாலே வாழ்வாரே
கத்தியாலே இவ்வுலகை வசப்படுத்தும் எண்ணத்தால்
பத்திலே மூவரிங்கே இறப்புடனே இருப்பாரே
நித்தமுமே பொருள்தேடி காலத்தைக் கழித்ததனால்
பத்திலே மூவரிங்கே வாழ்வதனின் பொருளிழப்பார்
சித்தத்தில் வழியதனைப் பற்றிவிட்ட காரணத்தால்
பத்திலே ஒருவர்மட்டும் முழுமையோடு வாழ்வாரே
வலிவுடனே வழிபுரிந்து வாழுகின்ற காரணத்தால்
புலியும் போருமிவன் மரணத்தைத் தாராதே
பிறப்பவற்றின் தன்மைகளைத் தெரிந்த ஆசானும்
இறப்பிருக்கும் இடத்திலே இருப்பதும் இல்லையே*********
இந்த அத்தியாயத்தில் ஆசிரியர் உலகின் மக்களை நான்கு விதமாகப் பிரிக்கிறார்.
உடலால் மட்டும் வாழ்பவர்: தேக சுகங்களை மட்டுமே எண்ணியிருப்பவர்.
வன்முறையைத் தழுவி வாழ்பவர்: வசப்படுத்தும் எண்ணத்துடன் இருப்பவர்.
தனமே முதல் என்றிருப்பவர்: சேர்த்த பொருளின் அளவே வாழ்க்கையின் வளத்தைக் காட்டும் என்ற எண்ணத்துடன் இருப்பவர்.
இந்த மூன்று வகைகளும் முழுமை தரத் தக்கதல்ல. 'வழி'யைப் பற்றி இப்பிரபஞ்சத்தின் பொருட்களின் தன்மையறிந்த ஆசானுக்கு அழிவென்பதும் இல்லை.
'வழி' - 49
49. பேதமில்லாப் பார்வை
உலகையே தம்வழியாய் ஆசானும் பார்ப்பதாலே
உலகின் மக்களிடம் தாழ்வு பார்ப்பதில்லையே
வெட்டுகின்ற கோடரிக்கும் வாசம்தரும் சந்தனம்போல்
கெட்டவர்க்கும் நன்மைதரும் ஆசானின் தன்மையது
நம்பிக்கையாய் 'வழி'யோடு வாழுகின்ற ஆசானுக்கு
நம்புவோர்க்கும் இல்லோர்க்கும் வித்தியாசம் இல்லையே
பேதமற்ற இயற்கையின் வழியதனைப் பற்றியதால்
சேதமில்லா சக்தியோடு ஒன்றியே வாழுகின்றான்
நிறுத்தாமல் ஒளிவழங்கும் கதிரவனின் கிரணம்போல்மறுக்காமல் மக்களுக்கு தயைதருவான் தாய்போலே*********
உண்மையிலே உயர்ந்தவர்களுக்கு பேதங்கள் கிடையாது. இயற்கையின் சக்திகள் உயிர்களிடையே பேதம் பார்ப்பதில்லை. அதே போல ஆசானும் அறிவு தெளிவிப்பதற்கு பேதம் பார்ப்பதில்லை. இதைத்தான் இந்த அத்தியாயத்தில் ஆசிரியர் விளக்குகிறார்.
தமிழ் இலக்கியங்களில் கூட கருணையை விவரிக்க, மழையை உதாரணமாகக் காட்டுவதுண்டு. எப்படி மழை எல்லோருக்கும் உதவும் விதமாகப் பொழிகிறதோ அதே போல மக்களும் கருணை காட்ட வேண்டும் என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள். உயர்ந்த குணங்கள் இயற்கையில் இயல்பாகவே உண்டு; இயற்கை 'வழி'யிலிருந்து வந்தது. 'வழி' பற்றிய ஆசானும் அந்த இயற்கை போலவே நடக்கிறான்.
'வழி' – 48
48. சேர்ப்பதும் இழப்பதும்
தனமாகக் கல்வியைப் போற்றியே உழைப்போரும்
தினமுமே சேர்த்திடுவார் தனக்குள்ளே அறிவுதனை
சித்தத்தில் ‘வழி’யதனைப் பற்றியே வாழ்வோரும்
நித்தமும் இழந்திடுவார் தனதென்னும் எண்ணமதை
எத்தனைதான் சேர்த்தாலும் அறியாமை விலகாதே
மொத்தமுமாய் இழந்தாலே முழுமைதான் பெறலாமே
அறிவாலே வெல்லவே முடியாத உலகமிதை
செறிவாலே உன்னுள்ளே 'வழி'யாலே அடக்கலாமே
*********
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் நம் அறிவால் மட்டும் புரிந்து கொள்ள முடியாது என்ற கருத்தை இந்த அத்தியாயத்தில் விளக்குகிறார். 'எப்படி' என்ற கேள்விக்கு அறிவால் பதில் சொல்ல முடியும். ஆனால் 'ஏன்' என்ற கேள்விக்கு அறிவு மட்டும் போதாது; ஞானமும் வேண்டும். இந்த ஞானத்தைத் தருவது 'வழி'. அறிவை வளர்க்க கல்வியின் மூலமாக அறிவைச் சேர்க்க வேண்டும். ஞானத்தை வளர்க்க 'தான்' என்னும் எண்ணத்தை இழக்க வேண்டும். முழுமை பெற அறிவு, ஞானம் இரண்டும் வேண்டும். ஆகையால் வாழ்வில் சேர்ப்பதும், இழப்பதும் - இரண்டும் வேண்டும்.
'வழி' – 47
47. உள்ளிருக்கும் வழி
வழியாலே உருவான வடிவமாய் நீயிருக்க
வழியுணர வெளியே செல்லவும் வேண்டுமோ?
ஒளிதருமே உள்ளிருக்கும் உண்மை புரிந்தாலே
வெளியிருக்கும் விவரமும் இதனாலே அறிவாயே
வெல்லுகின்ற வழியதனை உணர்ந்தே அறிந்ததனால்
செல்வானே புவியெங்கும் ஆசானும் நகராமல்
செய்யாமல் செய்விப்பான் பார்க்காமலே அறிகின்றான்
மெய்யான ஞானமதை சொல்லாமலே புரிவிப்பான் *********
பிரபஞ்சத்தின் சக்தியினை, மகத்துவத்தை அறிய வெளியே தேடித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. தன்னுள் உணர்ந்து நோக்கினாலேயே வெளியிருக்கும் மகத்துவம் புரிந்துவிடும் என்கிறார் ஆசிரியர்.
இந்துத் தத்துவங்களிலும் யோகத்தின் மூலமாக முக்தியடைவதை ஒரு முக்கியமான வழியாகக் காண்பித்திருக்கிறார்கள். உடலையையும் மனத்தையும் ஒருங்குபடுத்தி முக்தி நிலையை அடைய யோகம் உதவும். சீனத் தத்துவத்திலும் கலாச்சாரத்திலும் யோகம் - உடல் மன நிலைக் கட்டுப்பாடு ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது.