‘வழி’ - 11
11. இல்லாதவையின் மதிப்புசக்கரத்தின் வலுவுக்கு ஆரங்கள் இருந்தாலும்,
சக்கரத்தை இணைக்க அச்சுத்துளை வேண்டும்.
பாடுபட்டு களிமண்ணை பானையாக வடித்தாலும்,
நடுவில்லுள்ள வெற்றிடமே நீரெடுக்க உபயோகம்.
சுவரை உடைத்துவைத்த கதவும் ஜன்னலும்
சுவரையும் கூரையையும் அறையாக உருமாற்றும்
தருகின்ற உபயோகம் இருக்கும் பொருளால்
வருகின்ற மதிப்பு இல்லாத வற்றால்.*******
அருமையான ஒரு கருத்தை இங்கு விளக்குகிறார். எது முக்கியம்? நல்ல பழக்கங்கள் இருப்பதா? அல்லது கெட்ட பழக்கங்கள் இல்லாமல் இருப்பதா? இரண்டுமே முக்கியம் - ஒன்று மட்டும் இருப்பதால் முழுமை வருவதில்லை. முழுமைக்கு முயல்பவன் மொத்தத்தையும் பார்க்க வேண்டும்.
இரண்டாவது அத்தியாயத்தில் விளக்கிய
முரண்பாட்டு நியதியை ஒத்தது போல் இந்த அத்தியாயம் அமைந்திருக்கிறது. இதைப் படித்தவுடன், நான் என்ன என்ன பெற வேண்டும் என்று மட்டும் யோசிக்காமல் என்ன என்ன இழக்க வேண்டும் என்றும் யோசிக்க ஆரம்பித்தேன்.
வள்ளுவரும் இது போன்ற ஒரு கருத்தை குறளில் கூறியிருக்கிறார்:
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது. 181
இதுமாதிரியான கருத்துக்களைப் பற்றி குறளில் இருப்பவைகளை
இந்தப் பதிவில் காணலாம்.
‘வழி’ - 10
10. எது சொத்து?ஆவியையும் உடலையும் போற்றியே நீவளர்த்தாலும்
தவிர்க்கத்தான் முடியுமோ இவ்விரண்டின் பிரிவுதனை?
அழகும் தெளிவும் வலிவுமே நீபெற்றாலும்
குழந்தையின் தூய்மையும் மென்மையையும் பெறுவாயோ?
புறத்திலும் அகத்திலும் குவிந்துள்ள அழுக்குதனை
அறவேதான் நீக்கவும் உன்னால் முடியுமோ?
மனங்களை வென்றாலும் மண்ணைநீ ஆண்டாலும்
தன்னலம் இல்லாமல் இருக்கத்தான் முடியுமோ?
விண்ணின் வாசலுக்கே வந்தேயடைந்தாலும், கருகாக்கும்
பெண்ணின் தன்மைநீ அடையாமல் போவாயோ?
கற்றனைத்தும் வித்தைகளை தெரிந்துதான் கொண்டாலும்
பற்றற்று உன்னால் இருக்கத்தான் முடியுமோ?
அன்போடும் பண்போடும் உருவாக்கியே வைத்தாலும்
தன்னதில்லை என்றெண்ணும் பக்குவமே சொத்தாகும்********
நிரந்தரமான சொத்து எது? போற்றிப் பெற வேண்டிய குணங்கள் எவை? இது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமைந்திருப்பது பத்தாம் அத்தியாயம். நெடுநாள் வாழ ஆரோக்கியம் முக்கியம்; இருந்தாலும், உயிரும் உடலும் பிரிவதை மாற்ற முடியாது. வலிவு தேவைதான்; வலிவிருந்தாலும், தூய்மையும், மென்மையும் கூடவே வேண்டும்.
நடைமுறை வாழ்க்கையில் வெற்றிக்கு அறிகுறியாக கருதப்படும் சொத்துக்களான, மண், பொன் போன்றவைகளைப் பெற்றாலும், தன்னலமில்லாமல் இருப்பதும், பற்றறு கடமைகளை செய்து இருப்பதும் தான் நிரந்தரமான சொத்தாகும்.
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.
ஔவையாரின் பாடல் (நல்வழி) நினைவுக்கு வருகிறது.
'வழி' – 9
9. விலகும் நேரம்விளிம்பு தாண்டிய தண்ணீர்
தளும்பி வழிந்தே வீணாகும்.
எல்லை தாண்டிய கூர்மைதானே
வேலின் கூர்உடையக் காரணம்.
தன்னைக் காக்கத் தேடிச்சேர்த்த
பொன்னும் மணியும் ஓடாதிருக்க
தேடிய பொன்னைக் காக்கவேண்டி
வாடித்திரியும் நிலைதான் வருமே!
முழுமையோடு பணியை முடித்து
வழுவில்லாமல் விலகி நின்றால்
எல்லை தாண்டும் அபாயமுமில்லை;
தொல்லையின்றி சொர்க்கமும் வருமே!
******
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற கூற்றிற்கு விளக்கம் போல் அமைந்திருக்கிறது இந்த அத்தியாயம். கடமையை முடித்தபின் விலக வேண்டும் என்ற கருத்து மிக ஆழமானது, நடைமுறையில் மிக மிக அத்தியாவசியமானது.
வாழ்க்கையில் இதை பலமுறை பார்த்திருக்கிறேன். திறமையோ, திறனோ மங்க ஆரம்பித்துவிட்டாலும், தொடர்ந்து நடிக்கவோ, விளையாடவோ விரும்பும் நடிக/நடிகையர்கள், விளையாட்டு வீரர்கள் எத்தனையோ பேர். அதே போல் செல்வாக்கு இழந்து வருவதைப் புரிந்து கொள்ளாமல் ஆண்டுகொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பியவரும் அனேகம்.
இந்து தத்துவத்தில் விளக்கப்பட்ட ஐந்து நிலைகள்: பால்யம், பிரும்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாசம் - இந்த மாதிரி கடைமைகளை முடித்து அடுத்த நிலைக்கு செல்வதை வலியுறுத்துகிறது.
'வழி' – 8
8. நீரும் உயர்வும்உயர்வானவை இவ்வுலகில் நீரைப்போல்
பயன்தரும் எவ்வுயிர்க்கும் போரிடாமல்
நாம்தயங்கும் இடத்திற்கும் சென்றடையும்
இதுவேதான் பரப்பிரும்மம் குணமுமாகும்.
வசிப்பதின் உயர்வு நிலத்திலே
யோசிப்பதின் உயர்வு ஆழத்திலே
கொடுப்பதின் உயர்வு நேரத்திலே
வாக்கின் உயர்வு உண்மையிலே
அரசின் உயர்வு சுயத்திறனிலே
செயலின் உயர்வு திறமையிலே
உயர்வின் அர்த்தம் புரிந்ததனாலே
அயர்வின்றி நித்தம் வாழுகின்றானே
போட்டியிடும் எண்ணம் இல்லாததாலே
ஈட்டிகளும் அவனைத் தீண்டுவதில்லையே.
**********
பாரபட்சமின்றி பயன் தரும் குணம் உயர்ந்தது. நீர் எப்படி எல்லோருக்கும் உதவுகின்றதோ அது போல அறிந்த ஞானிகளும் எல்லோருக்கும் உதவும் குணம் படைத்தவர்கள்.
இந்த அத்தியாத்தில் பல விஷயங்களுக்கும் உயர்வின் அடையாளத்தை விளக்கியுள்ளார். திருக்குறளிலும் இது போல விவரங்கள் உண்டு (உ.ம். காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது- குறள் 102).
உயர்வின் பொருளைப் புரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், தாழ்வைத் தரும் போட்டி மனப்பான்மையையும் விடுத்ததால், துன்பமில்லாமல் உயர்வோடு வாழ்கிறான், வழி தெரிந்த ஆசான் என்று விவரிக்கிறார்.